Advertisement

கண்ணீர் விட்டு வளர்த்த பயிர்!

இதோ... இன்னும் மூன்று நாட்களில், நாட்டின், 72வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். நாட்டின் மிக முக்கியமான இந்த விழாவை வழக்கமாக இப்படித் தான் கொண்டாடுகிறோம்... தேசியக் கொடி ஏற்றி, இனிப்புகளை வழங்கி, தேசிய கீதம் பாடி, அவசர அவசரமாக அரைமணி நேரத்தில் முடித்து விடுவோம். அரசியல்வாதிகள், காந்தி சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து, மலர் துாவி, மரியாதை செய்வர். சில அரசு அலுவலகங்களிலும், தனியார் அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும். நம் மாநில முதல்வர், சென்னை, கோட்டையில் கொடி ஏற்றி, ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை படித்து முடிப்பார்; டில்லியில், பிரதமர் மோடி, செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி, உரையாற்றுவார்... இப்படித் தான் அநேகமாக, 71 ஆண்டுகளாக, சுதந்திர தினத்தை சடங்கு, சம்பிரதாயமாகவே கொண்டாடி வருகிறோம். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர் களை, ஒரு சில மணி துளிகள் மட்டும் நினைத்து விட்டு, பிற வேலைகளை பார்க்கப் போய் விடுவோம். காந்தி என்றால், 'சுதந்திரம் வாங்கி தந்தவர்' என்று மட்டுமே, நம் பிள்ளைகளுக்கு தெரிகிறது; அதுவும் சுதந்திர தினம் எனவருவதால் தான் தெரிகிறது. மற்றபடி தேசத்தந்தையை பற்றி, அவருடன் இணைந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட நிறைய தலைவர்கள் பற்றி, நம் பிள்ளைகளுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும், தேசத்தின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்ட அனைத்து தலைவர்களின் வரலாறும், இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிவது அவசியம். அவற்றை சொல்லிக் கொடுப்பதற்கு, தேச பக்தி ஊட்டும் முகாம்கள் இல்லை என்பதால் தான், நாட்டின் விடுதலைக்கு அரும்பாடுபட்ட தியாக சீலர்களின் வரலாறுகள், பள்ளிகளில் பாடங்களாக வைக்கப்படுகின்றன.ஆனால், அவை யாவும் மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே, மாணவர்களால் படிக்கப்படுகிறதே தவிர, அவர்களின் மனதில் பதிந்து, சிந்தனையை துாண்டும் விதமாக அமைவதில்லை. வ.உ.சி., அல்லது பால கங்காதர திலகர் பற்றி, இருபது வரிகளில் கட்டுரை எழுத சொல்லி, அதற்கு, பத்து மதிப்பெண் வழங்கப்படுகிறது. தேர்வு முடிந்த சில நாட்களிலேயே, மாணவர்கள், வ.உ.சி., மற்றும் திலகரை மறந்து விடுவர்.சரித்திர ஆசிரியர்கள், தேசத்தின் வரலாறு குறித்து பாடம் நடத்தும் போது, மாணவர்களின் மனதில் பதியும் வகையில், மாணவர்கள் நன்கு உணரும் வண்ணம் சொல்லித் தந்தால், ஒரு வகுப்பிலுள்ள, 50 மாணவர்களில், பத்து மாணவர்கள் மனதிலாவது பதிய வாய்ப்புண்டு.தேச தந்தை காந்தியடிகளை, ரூபாய் நோட்டில் அடையாளமாக மட்டுமே வைத்திருக்கிறோம். அரசு அலுவலகங்களில் அவரின் படம், சம்பிரதாயமாக மட்டுமே மாட்டப்பட்டுள்ளது. காந்தி சிலை, காந்தி மண்டபம் எல்லாம், சுதந்திர தினம் மற்றும் காந்தி பிறந்த நாளான, அக்டோபர், 2ல் சடங்கிற்காகவே உள்ளன.காந்தி கடைப்பிடித்த எளிமை, நேர்மை, சத்தியம், அஹிம்சை இவற்றில் ஒன்றையாவது கடைபிடிப்போர் எத்தனை பேர்... அவரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு, அவருக்கு மாலை அணிவித்து, மலர் துாவி, மரியாதை செய்வதால் என்ன பயன்?சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, விசாரணையே இன்றி கைது செய்ய ஏதுவாக, 1919ல் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த, 'ரவுலட்' சட்டத்தை எதிர்த்து, நாடெங்கும் போராட்டம் நடைபெற்றது.
மும்பையில் ஏராளமானோர் பிரிட்டிஷ் அரசால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.அப்போது, குஜராத்தில் இருந்த காந்தி, அவசரமாக மும்பைக்கு வந்து, ஆங்கிலேயே அதிகாரிகளிடம், 'என்னை கைது செய்யுங்கள்; அவர்களை விட்டு விடுங்கள்' என, மன்றாடினார்.அவர்கள், 'எதற்காக உங்களை கைது செய்ய வேண்டும்... போராட்டம் நடத்தும் போது நீங்கள் இங்கு இல்லையே...' என்றனர். ஆனால் காந்தி, 'இல்லையில்லை... இங்கு இல்லாவிட்டாலும் இந்த போராட்டம் நடைபெற நான் தான் காரணம்' எனக் கூறி, வலுக்கட்டாயமாக சிறைக்கு சென்றார்.தமிழக சுற்றுப்பயணம் செய்த போது, மதுரைக்கு சென்றார். அங்கேயுள்ள ஏழை விவசாயிகள், மேலாடை கூட இல்லாமல், வெறும், 4 முழ இடுப்பு உடையுடன் இருப்பதை பார்த்தார். அன்று முதல், மேலாடை அணிவதை தவிர்த்து, தானும் இடுப்பு உடையுடன் உலா வர துவங்கினார்.இப்போதைய மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கோல்கட்டா, அப்போது, கல்கத்தா என, அழைக்கப்பட்டது. அங்கு, காங்கிரஸ் மாநாடு நடந்தது. காங்கிரஸ் பிரதிநிதிகள் தங்கும் இடத்தில், காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டது. உயர் ஜாதி பிரமுகர்களுக்கும், மற்ற வகுப்பினர்களுக்கும் தனித்தனியாக கூடாரங்கள் இருப்பதை பார்த்து, காந்தி மனம் வெதும்பினார்.
உயர் ஜாதி பிரதிநிதிகள் சாப்பிடும் உணவை, மற்றவர்கள் பார்த்து விடா வண்ணம், மறைத்து சாப்பிடுவதை கண்டு கொதித்தார். 'காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்தவர்கள் இடையே இத்தனை பாகுபாடா...' என, வேதனை அடைந்து, அதை மாற்றவும் முயன்றார். உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், அன்னிய பொருட்கள் மறுப்பு, கதராடை அணிதல் என, பல்வேறு போராட்டங்களை, அஹிம்சை முறையில் நடத்தி, ஒட்டு மொத்த இந்திய மக்களின் ஆதரவைப் பெற்று, ஆங்கிலேய அரசுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கிய காந்தியை, ஆங்கிலேய அரசு கைது செய்து, நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தது. புதிதாக பதவியில் அமர்ந்திருந்த ஆங்கிலேய நீதிபதி, அப்போது தான் காந்தியை முதன் முதலில் பார்த்தார். அதற்கு முன், காந்தியைப் பற்றி கேள்விப்பட்டதோடு சரி.மேலாடை கூட இல்லாமல், இடுப்பில் வேட்டி, கையில் கைத்தடி, காலில் கட்டை செருப்பு, முகத்தில் குண்டு கண்ணாடியுடன், வயிறு ஒட்டி, ஒல்லியாக வந்து நின்ற காந்தியைப் பார்த்து, அதிர்ந்து போய் விட்டார், அந்த ஆங்கிலேய நீதிபதி. 'இவரா காந்தி... இந்த எளிய மனிதரா, கோடிக்கணக்கான மக்களுக்கு தலைவர்... இவரைப் பார்த்தா, பிரிட்டிஷ் அரசு பயப்படுகிறது...' என, வியந்தார். தன்னை அறியாமல் எழுந்து நின்ற நீதிபதி, காந்திக்கு, 'சல்யூட்' அடித்து, மரியாதை செய்தார்.புன்னகையுடன் நின்றிருந்த காந்தியைப் பார்த்து, 'உங்களுக்கு என்ன தான் வேண்டும்...' என்றார், ஆங்கிலேய நீதிபதி. 'நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். எங்கள் நாட்டை, எங்களிடம் கொடுத்து விடுங்கள்' என்றார் காந்தி.இவ்வாறு காந்தியைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். தனி மனித ஒழுக்கம், நேர்மை, சத்தியம், அஹிம்சையே காந்தியின் ஆயுதங்கள். பெரிய ஏகாதிபத்திய, இங்கிலாந்து நாட்டை எதிர்த்துப் போராட, காந்தி வைத்திருந்த ஆயுதங்கள், அஹிம்சை மற்றும் சத்தியம் மட்டுமே!இங்கிலாந்தில், 'பாரிஸ்டர்' எனப்படும் உயர் சட்டப்படிப்பில் பட்டம் பெற்று, இந்தியா வந்த காந்தி, நினைத்து இருந்தால், வழக்கறிஞர் தொழில் செய்து, நிறைய பொருள் ஈட்டியிருக்கலாம்; குபேரன் போல வாழ்ந்து இருக்கலாம். ஆனால், நாட்டின் விடுதலைக்காக அனைத்தையும் துறந்து, ஆங்கிலேயர்களிடம் அடி, உதை பட்டார்; சிறை வாசம் அனுபவித்தார். அவர் எத்தனை முறை சென்றார் என்பதை கணக்கிட முடியாது; எந்த நேரத்திலும் கைதாகி, சிறைக்கு அனுப்பப்படுவார்.தனி மனித ஒழுக்கம், நேரம் தவறாமைக்கு, காந்தியை தான் முன்னுதாரணம் கொள்ள வேண்டும். தன் வேலைகளை தானே செய்வார்; மனைவியிடம் கூட விட மாட்டார். டீ குடித்த குவளையை, தானே சுத்தம் செய்வார். இருக்கும் இடத்தை, தானே சுத்தப்படுத்திக் கொள்வார்.கோஷம் எழுப்பாமல், கொடி பிடிக்காமல், உண்ணாவிரதம் மேற்கொண்டே பல போராட்டங்களுக்கு தீர்வு கண்டார். ஹிந்து - முஸ்லிம் கலவரம் வெடித்து, ஆயிரக்கணக்கானோர் இரு புறமும் மாண்ட போது, நீண்ட நாள் உண்ணாவிரதம் இருந்தே, கலவரத்தை முடித்து வைத்தார். காந்தியை போலவே, நாட்டின் விடுதலைக்காக, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள், பல ஆண்டுகள் கடுமையான சிறை வாசம் அனுபவித்தனர். ஜவஹர்லால் நேரு, 12 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார்; வ.உ.சி., செக்கிழுத்தார்.இப்போது போன்ற சுகமான சிறைவாசம் அப்போது இல்லை. செக்கிழுக்க வேண்டும்; கல் உடைக்க வேண்டும்; மரம் வெட்ட வேண்டும்; மிகவும் கடினமான வேலைகளை செய்ய வேண்டும். எத்தனையோ தியாகிகள் நாடு கடத்தப்பட்டனர். அந்தமான், 'செல்லுலார்' சிறையில் காற்று, வெளிச்சம் இல்லாத அறைகளில் அடைக்கப்பட்டனர்; நோயுற்றே பலர் இறந்தனர்.அந்தமானுக்கு கப்பலில் செல்லும் போதே, கடலில் குதித்து பலர் மாண்டனர்; குடும்பத்தை விட்டு, உறவுகளை பிரிந்து, பல ஆண்டுகள் சிறையில் வாடினர்.அதனால் தான், 'தண்ணீர் விட்டா வளர்த்தோம் சுதந்திரப் பயிரை... கண்ணீர் விட்டல்லவா வளர்த்தோம்' என, பாரதி பாடினார். காந்தி மட்டுமல்லாது, அவருக்கு துணையாக நின்ற மோதிலால் நேரு, அவர் மகன், ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, மாளவியா, பால கங்காதர திலகர், சத்தியமூர்த்தி, குமரப்பா, ஆச்சார்ய கிருபாளினி, வினோபா பே போன்ற ஏராளமான தலைவர்கள், அரசின் அடக்குமுறைக்கும், சித்ரவதைக்கும், சிறை வாசத்திற்கும் ஆளாயினர்.மஹாத்மா காந்தி மற்றும் தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் வரலாறு, ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரிவது அவசியம். தேச தலைவர்களின் வரலாறு, பள்ளிகளில் பாடங்களாகவும், அலுவலகங்களில் படங்களாகவும் வைத்ததோடு, கடமை முடிந்து விட்டதாக கருதக்கூடாது.வருங்கால தலைமுறையினரின் சிந்தையில் நன்கு பதியும்படி செய்ய வேண்டும். ஏனெனில், அத்தகைய வரலாறு, இன்றைய வாழ்க்கை முறைக்கு அவசியமானதாகிறது.இணையதள சிறையில் இருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க, நல்ல வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுக்க, அவர்களுக்கு சிறு வயதிலேயே, மஹாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லித் தர வேண்டும். அவரின் கொள்கைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடிக்கும் படி செய்தாலே போதுமானது.காமராஜர், கக்கன், ஜீவா, லால் பகதுார் சாஸ்திரி போன்றவர்கள் கடைசி வரை கடைப்பிடித்த எளிமை, நேர்மை, உண்மை பற்றி, இளம் தலைமுறையினர் மனதில் பதியும் படி சொல்லித் தர வேண்டும். இது, ஆசிரியருக்கான பணி மட்டுமன்று; பெற்றோருக்கும் பொறுப்புண்டு.'பேஸ்புக்'கில் மூழ்கி, 'வாட்ஸ் ஆப்'பில் காலம் கடத்தி, மொபைல் போனில் ஆழ்ந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு, வாசிப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டும். ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை, முதன் முதலாக பார்க்கும் குழந்தைகளுக்கு, 'இவர் தான் காந்தி' என்பதோடு, நிறுத்திக் கொள்ளாமல், அவரின் எளிமை, சுதந்திரத்திற்காக அவரை போல பலரும் பாடுபட்ட விதம் போன்றவற்றை பற்றி, ஒன்றிரண்டு வார்த்தைகள் சொன்னால், பிஞ்சு மனதில் தேச பக்தி ஏற்படும்; தேசம் முன்னேற்றமடையும்.
வ.ப.நாராயணன்சமூக ஆர்வலர்
இ - மெயில் : vbnarayanan60gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement