Advertisement

கருணாநிதி ஒரு சகாப்தம்!

தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழக அரசியலில் ஒரு சகாப்தமாக இருந்திருக்கிறார். அவருடைய கருத்துகள் முரணானவையா அல்லது வளம் அதிகரித்த செயல்களா என்பதை விவாதிப்பது, அரசியல் வரலாற்று அறிஞர்கள் வேலையாகும்.
தொடர்ந்து ஒரு மாநிலத்தில், அரசியல்கட்சித் தலைவர் என்ற முறையில், எல்லாரும் மதிக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்வது, அவ்வளவு சுலபம் அல்ல. அதன் அடையாளமே, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியஎண்ணற்ற மக்கள் மனப்போக்காகும்.

வயது, 90ஐக் கடந்த பின்னும், முதல்வர் ஆக முடியும் என்ற கருத்தில், தி.மு.க., கட்சியும், அவர் ஆதரவாளர்களும் செயல்பட்ட போது, காலம் அதற்கு இடம் தரவில்லை.முன்னாள் முதல்வர் காமராஜர், மாபெரும் தலைவராக நீண்ட அரசியல் பாதையில் இருந்த போதும், திராவிட கட்சிகளின் செல்வாக்கில் அவர் அதிகம் ஒளி வீசமுடியாமல் கடைசி காலம் கழிந்தது. அதற்கு காங்கிரஸ் பிரதமர் இந்திரா, அவரது ஆதரவாளராக நின்ற பலரும் முழு ஆதரவு தராதது என்று, துணிந்து சொல்லலாம்.

தமிழகத்தில், 60 ஆண்டுகளாக ஜாதி என்பது, அரசியலில் பின்னிப் பிணைந்து நிற்கிறது. அன்று, ஈ.வெ.ரா., மைனாரிட்டியினரான அந்தணர்களை, தஞ்சைத் தரணி அளவிலான சில நிகழ்வுகள் மற்றும் மதிப்பீடுகளை வைத்து செய்த பிரசாரம், அரசியலிலும் வீசியது. தி.மு.க.,வின் நிறுவனர் அண்ணாதுரை, திராவிட நாடு கோரிக்கையை, பின்னாளில் கைவிட்ட போது, அவர், தான் வளர்த்த இளைஞர்கள் கூட்டம் உணர்ச்சிப் பிழம்பாகி விடக்கூடாது என, எச்சரிக்கை காத்தார்.

ஆனால், அவர் பெரியதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய போது, உடல்நல பாதிப்பால், மறைய நேரிட்டது. அன்று, அவருக்கு அடுத்ததாக நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன் என்று பலர் கருதப்பட்ட போதும், அவரது இதயத்தை சுமந்தபடி கருணாநிதி, அக்கட்சியின் அசைக்க முடியாத தலைவர் ஆனார்.

எம்.ஜி.ஆரை எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டாலும், தி.மு.க., என்கிற கட்சிக்கு அரண் அமைத்து காத்ததை, அரசியல் மதிப்பீட்டாளர்கள் குறைத்து எடை போட முடியாது.அதைவிட, தன் கட்சிப் பத்திரிகையான, 'முரசொலி'யை, அவர் ஒரு ஆயுதமாக பயன்படுத்திய விதமும், அதில் அவர், தன்னை எதிர்ப்பவர்களை விமர்சித்த விதமும், நிச்சயம் ஆய்வுக்குரியது.

'சிங்கக் குட்டி' என்று, தன் அன்பான தொண்டர்களை அழைத்ததும், 'ஏகடியம்' என்ற வார்த்தை உட்பட, சில வார்த்தைப் பிரயோகத்தால், மற்றவர்களை கடிந்த விதமும், சிலரை அவர்கள் சார்ந்த ஜாதிகளில் நாசூக்காக விமர்சித்ததும், கீழ்த்தட்டு மக்கள் இனத்தை சேர்ந்த தன்னைப் பழிப்பதாக கூறிய விதமும், எளிதில் அவரை யாரும் எதிர்க்கமுடியாத வளத்தை தந்தது.அத்துடன், அவசர நிலைக் காலத்தில், இந்திராவை எதிர்த்ததும், பிறகு, 'நேருவின் மகளே வா; நிலையான ஆட்சி தா' என்றதும், அதே போல சோனியாவுடன், கூட்டணி அமைத்து முக்கிய மந்திரி பதவிகளை லாகவமாக கைப்பற்றிய விதமும், அவரது அரசியல் சாணக்கியத்துவத்திற்கு சான்றாகும்.

அவரை எதிர்த்து ஊழல் புகார் கூறுவது சிரமம். சர்க்காரியா கமிஷன் விசாரணையில், அவர் மீது புகார் கூறியதும், அதை நாசூக்காக, 'பாதலுக்கு ஒரு நீதி; எனக்கு ஒரு நீதியா...' என்ற அவர் கடிதம் ஆணித்தரமானது. பாதல், அகாலி தளத்தின் சிறப்பான தலைவர் ஆவார்.கடைசி வரை அவருடன் நெருக்கமாக இருந்த பொதுச்செயலர் அன்பழகன், ஒரு முறை, 'தி.மு.க.,வை இவ்வளவு பெரிய விருட்சமாக வளர்க்க கருணாநிதியைத் தவிர, யாராலும் முடியாது; அதற்கான சாமர்த்தியங்கள் அதிகம் கொண்டவர்' என, பேசியிருக்கிறார்.

அதன் அடையாளமாக அவர், தற்போது காவேரி மருத்துவமனையில் இருந்த காலத்தில், ஜனாதிபதி கோவிந்த் முதல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்ததும், பல்வேறு மாநிலத் தலைவர்கள் வந்து பார்த்ததும், அவர் மருத்துவ சிகிச்சை பெறும் படங்கள் வெளியிடப்பட்டதும் வரலாறு ஆகும்.

ஒரு கட்சியில் தொண்டர்கள் அன்பைப் பெறும் பெரும் தலைவராக இருப்பது, தாய்மொழி மீதான பரிவால், மற்றவர்களை மேடைத் தமிழில் ஈர்ப்பது, கட்சி வெற்றிக்காக அதைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் காட்டிய சாமர்த்தியம் ஆகியவை, அவரது கலையாகும்.இருபதாம் நுாற்றாண்டின் கடைசிப் பகுதியில், தமிழக அரசியலில், நிலைத்த தலைவர் என்ற பெயரைப் பெற்ற கருணாநிதி, நிச்சயமாக அரசியலில் சகாப்தம் படைத்தவர் ஆகிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அந்த ராஜதந்திரியை முதல்வராகவிடாமல் தன்னுடைய ராஜதந்திர நடவடிக்கைகளால் பழிதீர்த்து கொண்ட பெருமையுடையவர் கலிங்கநாயகன் புரட்சிப்புயல் அண்ணன் வைகோ அவர்கள் , இல்லையென்றால் தற்சமயம் முதல்வர் பதவியில் இருந்து இயற்கை எய்தியிருக்கும் வாய்ப்பும் கலைஞருக்கு கிடைத்திருக்கும்

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    சூது, கள்ளத்தனம் செய்து எதிரிகளைக் கவிழ்த்தல், சூது, கள்ளத்தனம் செய்து உடன் உழைக்கும் சொந்தக் கட்சியின் தலைவர்களையே தட்டி வைத்தல், குடும்ப உறுப்பினரகளுக்காகவும், கட்சிப் பிரமுகர்களுக்காகவும் பதவிகள் பெற மக்கள் அளித்த செல்வாக்கை உபயோகித்துக் கொள்ளல் இவையெல்லாம் ராஜதந்திரம் இல்லை ..... தயவு செய்து ராஜதந்திரம் என்ற வார்த்தையைக் கொச்சைப்படுத்தாதீர் .....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement