Advertisement

யார் இந்தியர்?

பார்லிமென்டின் இரு சபைகளும் ஓரளவு இயங்குவதின் அடையாளமாக, தேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியல், நல்லதொரு விவாதமாகி இருக்கிறது.

நமது நாட்டின், வட கிழக்கு மாநிலங்களில், இந்தியர்கள் மட்டுமே வாழ்கின்றனரா என்ற கேள்வி எழுகிறது. இந்தியர்கள் எனில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சியர்கள் என்ற பல பிரிவுகள் இதில் அடக்கம். ஜைனர்கள், புத்தர்கள் என்று இனம் பிரிப்பது இன்னமும் பெரிதாக வரவில்லை.

ஹிந்துக்களுக்குள் உள்ள ஜாதிகள், மாநிலம் தோறும் உள்ள உணவு, உடை வேறுபாடு வேறு விஷயம். அது எத்தனையோ, கலாசார ஆக்ரமிப்புகளை தாண்டி நிற்கிறது. தமிழகத்தில், 'ஒன்றே குலம்: ஒருவனே தேவன்' என்ற திருமூலர் தத்துவம், அரசியலாகி விட்டது.இவை, ஒரு புறம் இருக்க, நாடு பிளவுபடும் முன், 'யார் பாகிஸ்தான் பக்கம் போகலாம்' என்ற ஓட்டெடுப்பிற்கு பிரிட்டிஷார் ஆதரவு காட்டி, அதில் உருவானதே பாகிஸ்தான். சாமர்த்தியமாக ஐதராபாதில் ரஜாக்கர் என்ற சமுதாயத்தை போராடத் துாண்டியதும், அதை சர்தார் படேல் அடக்கி, நாட்டை ஒன்றிணைந்த ஜனநாயகக் குடியரசு ஆக்கியதும் வரலாறு.

இன்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் விவாதத்திற்குரிய விஷயமாக, அசாமில், தேசிய குடியுரிமை வரைவுப் பட்டியல் வெளியானது, விவகாரமாகி இருக்கிறது.இதன் பின்னணி என்ன என்றால், அசாமில் வங்கதேசத்தவர் ஊடுருவி, நிலைத்து நின்று, தேர்தலில் ஓட்டளித்து குடியுரிமை பெற்றவர் என்ற நிலையில் உயர்ந்துள்ளனர்.

இது, அதிக பழங்குடியினர் மற்றும் அசாம் மக்கள் வாழ்வைப் பயமுறுத்தும் அம்சம் என்பதால், 1985ம் ஆண்டில் ஏற்பட்ட அசாம் உடன்படிக்கையில், அன்றைய பிரதமர் ராஜிவ் கையெழுத்திட்டார். இதன்படி, சட்டவிரோதமாக குடிபுகுந்தவர்கள் வெளியேறியாக வேண்டும். ஆனால், அதற்குப் பின் அப்படித் தங்கியவர்கள் யார் என்பதை, குறிப்பிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் கண்டு பிடிக்கப்படவில்லை.

சுப்ரீம் கோர்ட் ஆணையில் ஏற்பட்ட, என்.ஆர்.சி., என்ற தேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியல், அதையடுத்து உருவானது. அது, தற்போது வெளியிடப்பட்டதும், ஏற்பட்ட விவாத அலசல்கள் பார்லிமென்டில் எழுந்து, சபையும் ஓரளவு கூச்சலுடன் விவாதித்திருக்கிறது.இந்த வரைவு அறிக்கை, இறுதி ஆவணம் அல்ல என்றும், இதில் சந்தேகப்படும், 40 லட்சம் பேர் உடனடியாக வெளியேற்றப்படுவர் என்ற கருத்தும் உண்மை அல்ல என, பார்லிமென்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கியிருக்கிறார்.

'சுப்ரீம் கோர்ட் பார்வையில், அசாமின் எதிர்கால நலன் கருதி எடுக்கப்பட்ட வரைவுப் பட்டியல்' என்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் விளக்கப்பட்டிருக்கிறது.முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது வாரிசு பெயர் இல்லை என்பதால், இந்த அறிக்கை தவறு என்றோ, அல்லது, 1990ம் ஆண்டுகளுக்கு பின் மக்கள் ஓட்டளித்த அரசுகள் உருவானதால், அதில் ஓட்டளித்த அனைவரும், 'இந்தியர்' என்று பொருள் கொள்ளுவது எப்படி?

மியான்மரில் வாழும் ரோஹிங்கியா என்ற பிரிவு முஸ்லிம்கள், 30 ஆயிரம் பேர் டில்லியில் தங்கியுள்ளனர். அவர்கள் அகதிகளே. அவர்களுக்கு தற்போது தங்க வாய்ப்பு, சாப்பாட்டிற்கு வசதி என்பது மனிதாபிமானமே தவிர, அவர்களும் ஓட்டளித்து இந்தியக் குடியுரிமை பெறுவது அபாயமானது. உலகின் எந்த நாடும் அனுமதிப்பதில்லை.

வங்கதேச அரசு, 'இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை' என்றிருக்கிறது. ஏனெனில், அந்த நாடு உருவான பின், 1972ல், முஜிபுர் ரகுமான் - இந்திரா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், அப்போது இங்கு வந்த வங்க தேசத்தினரை திரும்ப அனுப்பாமலிருக்க முடிவானது.அசாமிலும் இந்த வரைவு அறிக்கையில் பாதிக்கப்பட்டதாக கூறும் ஒவ்வொருவரும், தாங்கள் நிரந்தரவாசிகள், என்பதை அடுத்து வரும் ஒரு மாதத்தில் ஆவணங்களுடன் தரலாம் என்று அசாம் அரசு கூறியிருக்கிறது.

மத்திய அரசுக்கும் இந்த அறிக்கைக்கும் தொடர்பில்லை. எவரும் இந்த வரைவு அறிக்கை வெளியிட்டதால், அங்கு சட்டம் - ஒழுங்கைப் பாதிக்கும் செயலில் ஈடுபடவில்லை. பா.ஜ., மற்றும் பிஜு ஜனதா தள அரசுகள் இந்த முயற்சியை வரவேற்கின்றன.மம்தா இதனால், 'சிவில் போர்' வரும் என, கூறிவிட்டு, பிறகு, வங்கதேச உறவு பாதிக்கப்படும் என்று அவரே மாற்றிப் பேசுகிறார். ராஜிவ் முயற்சியை அமல்படுத்த தயங்கிய காங்கிரஸ், இதை எதிர்த்தால், அவர்கள் கொள்கையில் பிரித்தாளும் மனோபாவம் இருப்பது வெளிப்படையாகும்.

ஆகவே, 'இயற்கையாக இந்திய தேசிய குடிமகன்' யார் என்ற ஆவணம், இன்று நாடு முழுவதும் தேவை. அது தவிர, அவர்களுக்கே அரசின் முக்கியப் பதவிகளும் தரப்பட, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் வந்தாலும், அது எதிர்கால பெடரல் இந்தியாவுக்கு அனுகூலமாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement