Advertisement

ஆசை இல்லாத ராகுல்!

பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் போட்டியிட முயற்சித்து வருகின்றன. '2019ல் மோடி பிரதமராக இருக்கக் கூடாது' என்பது இவர்களுடைய ஒரே குறிக்கோள். சமீபத்தில், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, டில்லியில் சோனியா, ராகுலைச் சந்தித்து பேசினார். அப்போது ராகுல், 'எனக்கு பிரதமர் பதவியில் விருப்பம் இல்லை; நீங்களோ அல்லது மாயாவதியோ, யார் பிரதமர் ஆனாலும் எனக்கு சந்தோஷமே' என, கூறியுள்ளார்.'நம்முடைய ஒரே ஆசையும், விருப்பமும், 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறக் கூடாது' என, மம்தாவிடம், சோனியா சொன்னாராம்.'ஒரே அணியில் நாம் அனைவரும் சேர்ந்து எப்படியாவது மெஜாரிட்டியை அடைய வேண்டும்; அதற்கான வேலைகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டும்' என, சோனியா கேட்டுக் கொண்டாராம். இந்த சந்திப்பில், சோனியா, ராகுல் இருவருமே, மம்தாவிற்கு மிகுந்த மரியாதை கொடுத்து பேசினராம். இது, மம்தாவிற்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. காரணம், ஒரு மாதத்திற்கு முன் இதே போன்று, சோனியாவை சந்தித்தபோது, 'மூன்றாவது அணியான எங்களுக்கு, காங்., துணை நிற்க வேண்டும்' என, மம்தா கேட்டார். அதற்கு பதில் அளித்த சோனியா, 'காங்., இல்லாமல் நீங்கள் என்ன செய்ய முடியும்; எல்லாரும், காங்., தலைமையில் ஒன்று சேர வேண்டும் என விரும்புகின்றனர். வேண்டும் என்றால், எங்களோடு கூட்டு சேருங்கள்' என, கோபமாக கூறினார். பிரதமர் பதவிக்கு ராகுல் முன்னிறுத்தப்படுவதை, கூட்டணிக் கட்சிகள் ஆதரிக்க தயக்கம் காட்டுவதால், சோனியா இப்போது மாறி விட்டாராம். 'முதலில் மோடியைத் தோற்கடிப்போம்; பின், யார் பிரதமர் என முடிவு செய்வோம்' என, மம்தாவிடம் சொன்னாராம் சோனியா. மேற்கு வங்க மாநிலத்தில், 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 'அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம். இதனால், லோக்சபாவில் மிகப் பெரிய பலம் பொருந்திய கட்சியாக, திரிணமுல் காங்கிரஸ் உருவெடுக்கும். அந்த சூழ்நிலையில், பிரதமர் பதவிக்கு தானும் ஒரு வேட்பாளராக இருப்பேன்' என, கட்சி தலைவர்களிடம் சொல்லி வருகிறார், மம்தா. இன்னொரு புறம், பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதியும் பிரதமர் நாற்காலிக்கு ஆசைப்படுகிறார். எனவே, 2019 தேர்தலில், சோனியா, மம்தா, மாயாவதி என, பெண்கள் அணி, நரேந்திர மோடியை தோற்கடிக்க தயாராகிவிட்டது. 'லேடியா? மோடியா?' என்பதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தினகரன் -- காங்., கூட்டணி?'எங்களோடு கூட்டணி அமைத்தால், தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெறலாம்' என, சமீபத்தில் தினகரன் பேசியுள்ளார். இதன் பின்னணியில், டில்லியில் நடந்த அரசியல் என்ன? ஒரு மாதத்திற்கு முன், கமல்ஹாசன் டில்லி வந்திருந்தபோது, சோனியாவையும், ராகுலையும் சந்தித்தார். அப்போது, தமிழக அரசியல் விவகாரங்கள் அலசப்பட்டன. தி.மு.க.,விற்கு மாற்றாக, ஒரு கூட்டணி அமைக்க வேண்டும்; அதில், காங்கிரசும் இருக்க வேண்டும் என,விவாதிக்கப்பட்டதாம். கமலுக்கு முன், திருமாவளவனும் ராகுலைச் சந்தித்துள்ளார். அவரும், தி.மு.க., அல்லாத ஒரு கூட்டணி உருவாக வேண்டும் என கருத்து தெரிவித்ததாக, காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு தமிழக தலைவர்களும், தினகரன் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என, ஆலோசனை சொன்னாராம். இந்த பின்னணியில் தான், தற்போது, 'காங்., கூட்டணிக்கு தயார்' என, தினகரன் பேசியிருக்கிறார். தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசரும், தினகரன் கூட்டணிக்கு வந்தால் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படுவதோடு, தென் மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு அதிகமாகும் என, ராகுலிடம் கூறியிருக்கிறாராம்.தினகரனுக்கு ஆதரவு எப்படி உள்ளது என்பதை, காங்., மூத்த தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


வெங்கையா மீது கோபம்!வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நுழைந்தவர்களை வெளியேற்ற, தேசிய குடிமக்கள் பட்டியல் இறுதி வரைவு உருவாக்கப்பட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில், அசாம் மக்களில், 40 லட்சம் பேர் இடம்பெறவில்லை. ஆனால், 'இந்த பட்டியல், ஒரு வரைவு பட்டியல் தான்' என, மத்திய அரசு கூறி வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். காரணம், சிறுபான்மையினர் ஓட்டு வங்கி தான். இது குறித்து, ராஜ்யசபாவில் பேச, பா.ஜ., தலைவர் அமித் ஷா தயாரானார். ஆனால், அவரைப் பேச விடாமல், மம்தா கட்சி, எம்.பி.,க்கள் கோஷமிட்டபடி இருந்தனர். சபைத் தலைவர் வெங்கையா நாயுடு பல முறை முயற்சித்தும், சபையில் அமைதி ஏற்படுத்த முடியவில்லை. அமித் ஷா நின்று கொண்டே இருந்தார். கடைசியில், சபை ஒத்தி வைக்கப்பட்டது. இது, பா.ஜ., தலைவர் அமித் ஷாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கி உள்ளது. இது பற்றி, வெங்கையாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இந்த சம்பவத்தின் போது, வெங்கையா, அவராகவே சபையில் பேசிக் கொண்டே இருந்தார். எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். 'இதனால், கடுப்பான எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள், சபையை நடத்த விடவில்லை' என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். தவிர, ராஜ்யசபாவின் துணைத் தலைவர் பதவி காலியாக உள்ளது. அதனால், எந்த நேரமும் வெங்கையாவே சபையை தலைமை தாங்கி நடத்த வேண்டியுள்ளது. இதனால், கடும் மன உளைச்சலில் உள்ளாராம், வெங்கையா. இன்னொரு பக்கம், பா.ஜ.,விற்கு சாதகமாக செயல்படுகிறார் என வெங்கையா நாயுடு மீது, எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் புகார் செய்துள்ளனர். பாவம் வெங்கையா, தனக்கு விருப்பம் இல்லாத பதவியில் இருந்து, வேதனையை அனுபவித்து வருகிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement