Advertisement

காவிரி: என்ன செய்கிறது தமிழக அரசு?

ஐந்து ஆண்டுகளாக வறண்டு கிடந்த காவிரியில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரியின் தோற்றுவாயாக கர்நாடகா இருப்பினும், தமிழகத்தில், 12 மாவட்டங்களில் பாய்ந்து, அம்மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது; 26 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன; சென்னை உட்பட, 17 மாவட்ட மக்கள், இந்த ஆற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தி, உயிர் வாழ்கின்றனர்.இதயத்திலிருந்து ரத்தம் செல்வதால், இதயமே ரத்தம் முழுமைக்கும் சொந்தம் கொண்டாட முடியாது; கூடாது. நதிகள், வேளாண்மையின் ரத்த நாளங்கள். எனினும், கர்நாடக அரசு சட்டம், தர்மம், மனித நேயம், மாற்றார் உரிமை என, எதையும் மதிக்காது, புதிது புதிதாய் அணைகளைக் கட்டி, தண்ணீரை தங்கள் மாநிலத்திலேயே சேர்த்து வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. இருப்பதை பகிர்ந்து கொள்ளக் கூட, பக்கத்து மாநிலங்கள் தயாராக இல்லாத அளவிற்கு, இறுக்கமான அரசியல் சூழ்நிலையில் வாழும் நமக்கு, இயற்கையாக பார்த்து, அதிகபட்சமாக மழை பெய்து, அங்குள்ள அணைகளில் தேக்க முடியாமல், தண்ணீர் பெருகி வந்ததால் தான், காவிரியில் தண்ணீரை பார்க்க முடியும் என்ற நிலை இருக்கிறது! திருச்சியில் இருந்து பூம்புகார் வரை, காவிரியோடு சேர்ந்து ஒரு பயணம்... பயணத்தின் போது களிப்பை விட, களைப்பை விட, நம் மோசமான நீர் மேலாண்மையை நினைத்து, கவலை தான் மேலோங்குகிறது.பல தடைகளை தாண்டி, தமிழகத்திற்கு பாய்ந்தோடி வரும் காவிரி நீரை உரிய முறையில் சேமித்து, பயன்படுத்த வேண்டிய கடமை தமிழகத்திற்கு உள்ளது. ஆனால், முறையான பாசன திட்டம், நீர் மேலாண்மை இல்லாததால் பெருமளவு தண்ணீர் வீணாகும் சூழல் தான் இருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி, தற்போது உபரி நீர், காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீர் திறப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதை முழுமையாக சேமிக்க முடியாத சூழல் ஏற்படும் என, நீர் வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தண்ணீர் வரும் போது மட்டுமே, சேமிப்பது குறித்து கவலைப்படுவதை விடுத்து, முன் கூட்டியே சரியான திட்டமிடல் அவசியம் என்கின்றனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம், 90 அடியாக இருக்கும் போதே, திறந்து இருக்க வேண்டும். அவ்வாறு திறந்து இருந்தால், அணை நிறைந்து விட்டாலும் கூட, தண்ணீர் முழுமையாக, கடைமடைப் பகுதி வரை சென்று சேர்ந்திருக்கும். தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை; பாசன வாய்க்கால்களை துார் வாரி, நீரை சேமிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை.முறையான துார் வாரும் பணிகள், பல ஆண்டுகளாகவே நடைபெறவில்லை. கால்வாய்கள் புல் மண்டி கிடப்பதால், தண்ணீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. கிளை கால்வாய்கள் உட்பட அனைத்தும், துார் வாரப்பட்டால் தான், மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கடைமடைப் பகுதி வரை சென்று சேரும். தமிழகத்தின் பாசனப்பகுதியில், 63 சதவீதம் காவிரி பாசன பகுதி தான். இதனால் இந்த விஷயத்தில், தமிழக அரசு, கூடுதல் முனைப்பை இதுவரை காட்டவில்லை!'ஒரு புல், ஒரு கலன் தண்ணீரை சேமிக்கும்' என, கிராமத்தில் சொல்வர். வயல் வெளியில் பாயும் சாதாரண கால்வாயை துார் வாரி, தண்ணீரை திறந்து விட்டால், 900 மீட்டர் சென்றடைய, 15 நிமிடங்கள் தான் பிடிக்கும். அதுவே, துார் வாராவிட்டால், 45 நிமிடங்கள் கூடுதலாக தேவைப்படும். அது மட்டுமின்றி தரையால் உறிஞ்சப்பட்டு, நீர் பாயும் பாசன அளவு, மூன்றில் ஒரு பங்கு குறைந்தும் விடும்.அப்படியானால், காவிரி பாசனப்பகுதியில் உள்ள பல, 100, கி.மீ., காவிரி கால்வாய்களில், தண்ணீர் எவ்வளவு வீணாகும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். காவிரி ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால், குழிகளாக மாறி, தண்ணீர் போவது முற்றிலும் குறைந்து விட்டது. எனவே, காவிரி நீர் வரத்தை சீரமைக்க,மேட்டூர் துவங்கி, கடைசி பாசனப்பகுதி வரை, ஒவ்வொரு, 15 கி.மீ., இடைவெளியிலும், 3 அடி உயரம் கொண்ட சிறிய தடுப்பணைகளை அமைக்கலாம். இந்த அணைகள் மூலம், கணிசமான அளவு தண்ணீரை சேமிக்க முடியும்; நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயரும். குடிமராமத்து பணிகளை மிகவும் தாமதப்படுத்தி, தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில், அரைகுறையாக செய்து விட்டு, இதற்கான நிதி கொள்ளையடிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இம்முறையும், இதே காரணத்தால், ஒரு பக்கம் மேட்டூர் அணை திறப்பது தாமதப்படுத்தப்பட்டதோடு, மறு பக்கம் குடிமராமத்து பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஓராண்டுக்கு மேல், பாசன வடிகால்வாய்கள் வறண்டு கிடந்த போதெல்லாம், துார் வாரும் பணியை மேற்கொள்ளாமல், தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, மேட்டூர் அணை நிரம்பும் வரை, துார் வாரும் பணியை தாமதப்படுத்துவது ஏன் என்ற கேள்விக்கு யாரிடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பது...இதே போல, கடந்த ஆண்டே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, 'காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகளை கட்டியதைப் போல, தமிழக அரசு புதிய அணைகளை கட்டாதது ஏன்? புதிய அணைகளை கட்டியிருந்தால், மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமித்து இருக்கலாமே...'நீர் சேமிப்பு திட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தாமல் இருந்தது ஏன்? பெருமழைக் காலங்களில் மேட்டூர் அணை போன்ற முக்கிய அணைகளில் நீரை சேமித்து வைத்தால், அதை வைத்து, வறட்சி காலங்களில் தமிழகம் சாகுபடி செய்யலாமே... 'நீர் சேமிப்பு, நீர் மேலாண்மை தொடர்பாக தமிழக அரசு இதுவரை என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது?' என, சரமாரியாக கேட்ட கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை.நடப்பாண்டில் மட்டுமல்லாமல், கடந்த பல ஆண்டுகளாகவும், இதே நிலைமை தான் ஏற்பட்டு வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.குறிப்பாக, 2013ம் ஆண்டு, இதே போல, கடை மடைக்கு தண்ணீர் எட்டாத நிலையில், அதிகமான அளவு கடலில் திறந்து விடப்பட்டது. அதற்கு முன், 2005ம் ஆண்டும், இதே போல பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலையில், 140 டி.எம்.சி., தண்ணீர் கடலுக்கு திறந்து விடப்பட்டது.காவிரியில் உபரியாக கிடைக்கும் தண்ணீரை தேக்கி வைக்க, பல புதிய பாசனத் திட்டங்கள் தீட்டப்பட்டிருந்த போதும், அவற்றை நிறைவேற்றுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. குறிப்பாக, மாயனுார் கதவணையிலிருந்து காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் தீட்டப்பட்டிருந்த போதும், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், உபரி நீரை, தமிழகத்தின்வறண்ட மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகருக்கு திருப்பி விட்டு, பயன்படுத்தியிருக்க முடியும். அது போல, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில், ஏற்கனவே திட்டமிட்ட, தலா, ஏழு கதவணைகளை கட்டி முடிப்பதன் மூலம், ஓரளவு தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த முடியும். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றாமல், கிடைக்கும் தண்ணீரை கடலில் திறந்து விட்ட பின், தண்ணீருக்காக கையேந்தும் நிலை தான் நீடிக்கிறது.எனவே, தமிழக அரசு, இனியாவது கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து வைத்து, திட்டமிட்டு பயன்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்புக்கு:
எல்.முருகராஜ்பத்திரிகையாளர்
murugarajdinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • PR Makudeswaran - Madras,இந்தியா

  இரண்டு கழகங்களும் மணலை கொள்ளை அடித்து பணக்காரன் ஆகி கோடீஸ்வரர்கள் ஆகியும் எடப்பாடிக்கு மனம் வரவில்லை மனசாட்சியே இல்லாமல் மணல் விற்பது எங்கள் ஏக போக உரிமை என்கிறார். ஆனால் இரண்டு திருடர்களும் காவிரியை கண்டு கொள்ளவே இல்லை. வாய் கூசாமல் பேசுகிறார்கள். தெய்வம் நின்று கொல்லும்.

 • Darmavan - Chennai,இந்தியா

  எல்லோரும் கருது சொல்கிறார்களே தவிர பாதிக்கப்பட்டவன் என்ன செய்தால் சட்டப்படி கிடைக்கும் என்ற வழியும் சொல்லவேண்டும்.இதை விவசாயிகள் சங்கள் செயல்படுத்த வேண்டும்,செய்யாத அரசை சட்டப்படி செய்யவைப்பது எப்படி என்று வழிகாட்டவேண்டும்.தூத்துக்குடி போராட்டம் போன்று இதை ஏன் செய்யவில்லை....ஆக.வைகோவிலிருந்து ஆரம்பித்து எல்லாமே திருடர்கள்.போராட்டம் நடத்துவது எல்லாம் கூலிப்படைகள். நாட்டின் பொருளாதாரத்தை அழிப்பதற்க்காக இருக்கும் தீய சக்திகள். முதலில் நாட்டின் அக்கறை கொண்டவர்கள் இதற்கு ஒன்று சேர்ந்து வழி செய்யவேண்டும்.

 • rajan. - kerala,இந்தியா

  வறண்டு கிடந்தப்ப மணல் மாபியாவை வளர்த்தோம் இப்போ தண்ணீரை கடலில் கொண்டு சேர்த்து மறுபடியும் காவிரியை வற்ற வைத்து ரெஸ்ட் கொடுத்த மாபியாக்களை மறுபடியும் களம் இறக்கி நிரந்த பாதாள லோக வழிகளை மறுபடியும் திறப்போம்முல்லே அம்மாவழி ஆட்சிப்படி.

 • rajan. - kerala,இந்தியா

  d

 • rajan. - kerala,இந்தியா

  தெளிவாக கருத்துக்கள். ஆனால் இந்த அம்மாவழி ஆட்சியாளர்களின் மணல் மாபியா கொள்கைத்து எதிரானது தடுப்பணை கட்டுவது. எங்கே அந்த நல்லகண்ணு டில்லி விவசாய போராளி. இங்கே ஏன் இன்னும் களத்தில் இறங்காமல் எங்கே பஜனை பண்ணி கொண்டிருக்கிறார். தடுப்பணை வேண்டும் என விவசாயி போராட்டம் நடத்த VARAVILLAI. ஒருவேளை அவருக்கும் மணல் மாபியா முறைவாசல் தொண்டு தேவையோ. உடனடியாக விவசாயிகள் போராட்டம் பணியாச்சும் இந்த அரசை தடுப்பணை கட்ட வையுங்கள் கொள்ளிடம் வரை. கேஸ் போட்டு அண்டை மாநிலங்களுடன் சண்டை போடா தயார் ஆனால் தடுப்பணை கட்ட மாட்டோம்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  டெல்டாவில் பலநீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டுமனைப்பட்டா போட்டுவிட்ட பிறகு எதனை தூர்வாருவது? தூர்வாரி நல்ல தண்ணீர் வந்தால் இந்த பிளாட்டுகளை மூழ்கடித்துவிடும் .தடுப்பணை கட்டினால் இன்னும் பாதிப்பதிகம் ஏற்னவே வாய்க்கால்களில் பல ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தடுப்பணை கட்டினால் அதுவும் இதே கதிக்குத்தான் ஆளாகும் . எந்த கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை .

 • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

  இந்த முறை கல்லணையில் இருந்து வீராணம் சென்றுள்ள நீரை பற்றி ஏன் கூறவில்லை ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement