Advertisement

இது நல்ல அறிகுறி!

தமிழக அரசியலில் இப்போது, அதிக ஆரவாரமற்ற, ஆனால், கட்சிகள் தங்களுடைய மக்கள் ஆதரவை தேடும் காலம் எழுந்திருக்கிறது.
அ.தி.மு.க.,வில், பழனிசாமி முதல்வராக இருந்தாலும், அவரும், துணைமுதல்வர் பன்னீர் செல்வமும் இணைந்து, அக்கட்சியின் பலத்தை நிர்ணயம் செய்பவர்களாக உள்ளனர். ஓராண்டு ஆட்சியில், செயல்திட்டங்களை நிறைவேற்றி வருவதாக கூறும் முதல்வர் பழனிசாமி, வளர்ச்சித் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவிக்கும் விதம், அதற்கான விழா, இவற்றின் அடையாளமாக தெரிகிறது.

அவருக்கு சாதகமாக, திருப்பதி பெருமாள் அல்லது வருணன் இரண்டில் ஒரு கடவுள், காவிரி நீர் பொங்கி பிரவாகிக்க, அருள் புரிந்திருக்கின்றனர். அது மட்டும் அல்ல, ஜி.எஸ்.டி.,யால் வரி இழப்பு இல்லை என்பதையும், இந்த அரசு வெளிப்படையாக்கி இருக்கிறது.

அரசின் தகவல்களை அடுக்கும், அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசு அமைச்சர்களை சந்தித்து பேசும் விதம், அரசு திட்டங்களை அமல்படுத்தியதில், மத்திய அரசு சொற்பேச்சு கேட்காமல், தாங்களாகவே இயங்குவதாக அறிவிப்பதும், அடையாளங்களாக தெரிகின்றன.துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில், அமைச்சர்கள், நிதியமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து, நிலக்கரி ஒதுக்கீடு பற்றி பேசியதாக தெரிவித்தாலும், தமிழக அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், எதிர்கட்சிகள் ஆதரவு கேட்டதை நிராகரித்த விதமும், இதற்கு அடையாளங்கள்.

ஆனால், ராணுவ அமைச்சர் நிர்மலா, தமிழக அரசியலில் அதிகமாக, பா.ஜ., சார்பில் முன்னிறுத்தப்படுபவராக காட்சி அளிக்கிறார். இது, கட்சித் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி அறியாத, தற்செயல் நிகழ்வுகளாக இருக்க வாய்ப்பில்லை. அவரை, துணை முதல்வர் பன்னீர் செல்வம் சந்திக்க முடியாததும், அதே சமயம், அக்கோஷ்டியின் தகவல் தொடர்பாளராக செயல்படும், மைத்ரேயனை சந்தித்ததும் புதுமையானதே. மைத்ரேயனின் முன்னாள், பா.ஜ., தொடர்பு, இதில் பலன் தரவில்லை.

பன்னீர் செல்வத்தின் சகோதரர் சிகிச்சைக்காக, ராணுவ ஆம்புலன்ஸ் அனுப்ப உதவிய நிர்மலா சீதாராமனின் செயல், இதில் செய்தியாக வெளி வந்திருக்கிறது. அப்படிப் பார்த்தால், துணை முதல்வர் டில்லி பயணம், தமிழகத்தின் எந்த திட்டத்திற்கானது என்பது வெளிவரவில்லை. மாறாக, 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்ற அண்ணாதுரையின் வசனம், பன்னீர் செல்வத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

இதற்கு முன் பெரியகுளத்தில் உள்ள அவரது நிலத்தில் அமைந்த கிணறை, பொதுமக்கள் முற்றுகைக்கு பின், தானமாக தந்த போதும், அதை பொதுமக்கள் நலன் கருதியதாக தெரிவித்த அவர், ஒரு சமயத்தில், 'நாம் எதைக் கொண்டு வந்தோம்' என்றும் பேசியதும் உண்டு.இவற்றை பார்க்கும் போதும், உள்ளாட்சி தேர்தல் அட்டவணை, ஆக., 6ம் தேதி வெளியாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கண்டிப்பு, இனி, கட்சிகள் இத்தேர்தலுக்கான ஆயிரக்கணக்கான வேட்பாளர்களை முடிவு செய்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால், முதல்வர் பழனிசாமி, பல தடவைகளில், 'எந்தத் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்' என்று அழுத்தமாக கூறி வருவது, எப்பின்னணியில் என்று இனிதான் தெரியும். அ.தி.மு.க.,வில் இன்னமும் கட்சியின் கட்டுக்கோப்புகள் குறித்து, முடிவுகளை எட்டாத நிலையில், இத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் நிர்ணயம் சிரமம். தி.மு.க., தேர்தல்களம் காணத் தயார் என, ஏற்கனவே கூறியிருப்பதும், எதிர்க்கட்சி என்ற நிலையில், தன் உத்திகளை விரைவாக வகுப்பதுடன், கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தியாக வேண்டும்.

அதே சமயம், தமிழகத்தில் நடந்த எண்ணற்ற வரித் துறை ரெய்டுகள், அதில் பிடிபட்ட கிலோ கணக்கிலான தங்கம் எங்கே இருக்கிறது என்று கேட்கும், மிகச்சிறிய கட்சிகளும் உள்ளன.பொதுவாக, சி.பி.சி.ஐ.டி., மற்றும் ஊழல் விவகாரங்களில் நடத்தப்படும் ரெய்டுகளில் பிடிபடும் கோடிகள் மற்றும் தங்கம் ஆகியவை, பறந்து போகாது. மாறாக, ஊழல் புகார், ரெய்டுகளில் சிக்கிய முக்கிய பிரமுகர்கள் அல்லது அவர்களது தொடர்புடைய நபர்களுக்கு, அரசு, 'டெண்டர்' தரப்பட மாட்டாது என, அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அதே போல, ஊழல் வழக்கு புகார்களில் சிக்கிய பெரிய அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வழக்குகளை விரைந்து முடிக்க, மத்திய சட்டத்துறையும் அறிவித்திருப்பது, தமிழகத்திற்கும் பொருந்தும் என்று கருதலாம்.

இத்தனை விஷயங்களுக்கும் நடுவே போராட்டங்கள் குறைந்த மாநிலமாக, சமீபத்தில், தமிழகம் காட்சி அளிப்பது, புதிய அறிகுறிகள் தோன்றுவதற்கான அடையாளம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement