Advertisement

படிக்கட்டு பயணம் மாறுவது எளிதானதா?

சென்னைப் புறநகர் ரயில் சர்வீஸ் சந்திக்கும் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அதிலும் பொதுவாக, தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் பலர், அடிபட்டு இறப்பது வழக்கம் என்றால், இப்போது வாயில் படிகளில் தொற்றியபடி பயணம் செய்த இளைஞர்கள், அடிபட்டு இறந்தது பரிதாபமாகும்.சென்னை மிகப்பெரும் மாநகரம்; போக்குவரத்து வசதிகள் இன்னமும் சீராக இல்லை. மெட்ரோ ரயில் என்பது, அதிக வசதி கொண்டது. அதன் கட்டணமும் அதிகம்; இயங்குகிற தொலைவும் குறைவு. வேளச்சேரி, மயிலை, சிந்தாதிரிப்பேட்டை ஆகியவற்றை இணைக்கும் மாடி ரயில், புறநகருக்கு ஓரளவு இணையான சர்வீஸ் கொண்டது. தமிழகத்தில் உள்ள பலரும் ஏதாவது ஒரு பயணக் கட்டத்தில், இந்த ரயில் சர்வீசை அறிந்திருப்பர்.அதிலும், புறநகர் சர்வீசில் இரண்டாம் வகுப்பு கட்டணம், மிகமிகக் குறைவு. செங்கல்பட்டு, அதைத் தாண்டி காஞ்சிபுரம் வரை செல்லும் இந்த சர்வீசில், கூட்டம் அதிகம். இப்பகுதி மக்கள் பலரும் வர்த்தகம், அரசு அலுவலகப் பணி, தனியார் நிறுவன வேலை வாய்ப்பு என, ஆயிரக்கணக்கில் பயணிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி, ஆவடி போன்ற இடங்களுக்கும் புறநகர் சர்வீஸ் உள்ளது.மெட்ரோ ரயில்கள், 'ஏசி' வசதியுடன் தானியங்கி கதவுகளுடன் சென்றாலும், அதிகபட்சமாக, ஆறு பெட்டிகள் மட்டுமே அதில் உள்ளன.ஆனால், புறநகர் ரயில்களில், 12 பெட்டிகள், அதில் சில முதல் வகுப்பு, பெண்களுக்கு தனிப் பெட்டிகள், வியாபாரிகள் தனியாக மூட்டை முடிச்சுகளுடன் வர பெட்டி என உள்ளன.இதில், சமீபத்தில் தாம்பரத்தில் இருந்து பரங்கிமலையைத் தாண்டி வந்த விரைவு சர்வீஸ் ரயிலில் தொற்றியபடி வந்த பலர், அருகில் இருந்த கான்கிரீட் சுவரில் மோதி விழுந்தனர்; அதில், ஐந்து பேர் பலியாகி உள்ளனர். இப்பாதை, விரைவு ரயில் பாதையாகும். முதல் தடவையாக, ரயில்வே இழப்பீடு டிரிபியூனல், தானாக முன்வந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, எட்டு லட்சம் ரூபாயும், காயமுற்று சிகிச்சை பெறும் பலருக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாயும் தர உத்தரவிட்டிருக்கிறது.அதே சமயம், 'பீக் ஹவர்' என்ற நெரிசல் நேர பயணங்களில், புறநகர் சர்வீஸ் ரயில்களில் பொங்கி வழியும் கூட்டம், பாட்னாவில் செல்லும் ரயில்களை நினைவுபடுத்தும். காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையிலும், படிகளில் தொற்றியபடி, தங்கள் கைப்பைகளுடன் பலர் பயணிப்பது ஒருவகை வீரமாகும். சிலர், பணிநாள் குறைந்து சம்பள இழப்பு ஏற்படுவதால், இதை ஏற்கின்றனர். ரயில்வே போலீசார் எண்ணிக்கை, இப்போது சற்று அதிகரித்திருப்பதும், கடந்த ஆண்டில் படியில் பயணம் செய்தோர், 7,000 பேர் பிடிபட்டதாக தகவல் உண்டு.பரங்கிமலையில் விரைவு ரயில் செல்லும் பாதையில், புறநகர் மின்சார ரயிலை செலுத்தாமல், அதற்கென உள்ள பாதையில் சென்றிருந்தால், பைகளுடன் தொங்கியபடி பயணிப்பவர்களுக்கு, பாதகம் வந்திருக்காது. அதிக எடைகொண்ட பைகள் வைத்திருப்பது, அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் என்றாலும், வண்டி நகரும் போது, இந்த பை சமயங்களில் அருகில் இருப்பவரை இடித்தால், அதன் வேகசக்தியால், அலைப்புண்டு தடுமாறலாம்.இப்படித்தான் அந்த விபத்து பரங்கிமலை அருகே நடந்திருக்கலாம். விசாரணையில் முழு விபரம் தெரியும். இதன் விளைவு, விரைவு மெட்ரோ சர்வீஸ் நின்று போக காரணமாகி விட்டது. மேலும், புறநகர் ரயில்களுக்கு கதவு போட்டால், இப்போது செல்லும் சர்வீஸ்களை இரட்டிப்பாக்க வேண்டும். புதிய பிரச்னைகள் வரலாம்.எழும்பூர் போல தாம்பரம் முனையம் ஆகி, அது முழுமையடைய முயற்சிகள் நடக்கின்றன. இன்றுள்ள நிலையில் எளிதான பயணம், 20 கி.மீ., தொலைவுக்கு பஸ் கட்டணத்தில், 25 சதவீதம் கூட வசூலிக்காத வசதி ஆகியவை புறநகர் ரயில் சர்வீசின் பிளஸ் பாயின்ட். முதல்வகுப்பு என்ற பாரபட்சமும் இன்றி, எல்லாமே நெரிசல் பெட்டிகளாகின்றன.டிக்கெட் பரிசோதகர், அல்லது ரயில்வே போலீசார் பல மடங்கு இருந்தால், இக்குறைகளை தவிர்க்கலாம். ரயில் நிலையங்களில் துாய்மை, டிக்கெட் வாங்கி பயணிக்கும் போக்கு, எழும்பூர் நடைபாதை விரிவாக்கப்பணி, செங்கல்பட்டு, மற்றும் கும்மிடிப்பூண்டி வரை பாதை சீரமைப்பை தெற்கு ரயில்வே செய்து வருகிறது.இதில் படிக்கட்டண பயண உயிர்பறிப்பு, பல விஷயங்களை பின்னுக்கு தள்ளி, தெற்கு ரயில்வேக்கு பெரும் சவாலாகி விட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement