Advertisement

ஆயிரம் கதைகளை படித்தேன்

நுாறு கதைளை தேர்ந்துதெடுக்க ஆயிரம் கதைகளை படித்தேன்-எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

சுயநலமாகிவிட்ட இன்றைய சமூகத்தில் தனக்காக மட்டும் வாழாமல் இந்த சமூகத்திற்காகவும் வாழவேண்டும் என்ற நல்ல நோக்கம் கொண்டவர்களில் ச.ரவிக்குமாரும் ஒருவர்.

சென்னையைச் சேர்ந்தவர் ,பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக வாசிப்போம் என்ற இணைய நுாலகம் நடத்திவருகிறார்.

தான் படித்த தனக்கு பிடித்த பல நுால்களை எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் இணையதளத்தின் வாயிலாக அறிமுகம் செய்து கொண்டு இருக்கிறார்.ஒரு புது முயற்சியாக சிறந்த புத்தகங்களை ஒலிப்புத்தகமாக பதிவேற்றி பார்வை இல்லாதவர்கள் கேட்டு மகிழும் விதத்தில் வழங்கிவருகிறார்.

வாசிப்போம் இணைய நுாலகத்தின் முதலாம் ஆண்டு விழா கடந்த 28 ந்தேதி சென்னை இக்சா மையத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்துதெடுத்த நுாறு சிறந்த கதைகள் புத்தகத்தின் ஒலி வடிவ சி.டி.யினை இந்த விழாவில் எஸ்.ராமகிருஷ்ணனே வெளியிட்டார்.

மிக எளிய விழா பார்வையற்றவர்களால் அரங்கம் நிரம்பிவழிந்தது.பார்வை மாற்றுத்திறனாளிகளான அப்சரன் பெர்ணான்டோ, உ.மகேந்திரன் ,சே.திவாகர்,மா.உத்திராபதி,அபிநயா ஆகியோரின் பேச்சு நறுக் சுருக்காக இருந்தது.

இந்த ஒலிப்புத்தகத்திற்கு தங்களது குரலை தானமாக வழங்கிய உஷா ராமகிருஷ்ணன்,லலிதா,வித்யா ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிறைவாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசும்போது,இந்த சிறந்த நுாறு கதைகளை தேர்ந்து எடுக்க நான் ஆயிரத்த்திற்கும் அதிகமான கதைகளை படித்தேன்.புதுமைப்பித்தனின் நுாறு கதைகளை படித்தால் நுாறுமே நன்றாக இருந்தது அதில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்வதுதான் சிரமமாக இருந்தது.

ஒரு தட்டு நிறயை லட்டு இருக்கிறது ஆனாலும் குழந்தைகளுக்கு ஒரு தாய் அந்த லட்டு முழுவதையும் தந்துவிடுவதில்லை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தருவாள் அது போலத்தான் இந்த சிறுகதைத் தொகுப்பும்

நான் வாசிப்பை பெரிதும் நேசிப்பவன் வாசிப்பதற்காகவே வாழ்பவன் நல்ல நுால்கள் இருந்த காரணத்தினால் ஒரு நுால் நிலையம் அருகிலேயே அறை எடுத்து மாதக்கணக்கில் தங்கி நுாலகத்தில் இருந்த புத்தகங்களில் பெரும்பகுதியை படித்திருக்கிறேன்.

பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியான ஜார்ஜ் லுாயிஸ் போர்ஜ் என்பவர் வாசிப்பதை தனது அன்றாட வாழ்வின் ஒரு கட்டமாக வைத்திருந்தார், அவர் ஒரு உதவியாளரை வைத்து தினமும் ஐம்பது பக்கமாவது வாசிக்காமல் துாங்கப்போகமாட்டார்,அவரது வாசிப்பு பழக்கம் அர்ஜென்டைனாவில் உள்ள தேசிய நுாலகத்தின் இயக்குனர் பதவிக்கே கொண்டு சென்றது அந்த பதவியிலும் அவர் திறம்பட செயல்பட்டார்.

எனக்கு ஒரு விருப்பம் உண்டு சென்னையில் சகல வசதிகளும் கொண்ட பார்வை இல்லாதவர்களுக்கான நுாலகம் ஒன்றை அமையவேண்டும் என்பதுதான் அந்த விருப்பம்.இப்படி ஒரு நுாலகம் அயலகத்தில் இருக்கிறது அதையே முன் உதாரணமாகக் கொண்டு இ்ங்கும் அமைக்கப்படவேண்டும் என்பதற்கான முயற்சியில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

நிறைவாக ‛வள்ளுவன் பார்வை' பாண்டியராஜன் அவருக்கே உரித்தான பாணியில் நன்றியுரையை பார்ட் ஒன், பார்ட் டூ என்று பிரித்துவைத்துப்பேசி அனைவரையும் சிரிக்கவைத்தார்.

பார்வை உள்ளவர்களே ‛எங்கே வாசிக்க நேரமிருக்கிறது'? என்று நேரத்தை காரணம்காட்டி வாசிப்பில் இருந்து ஒடி ஒதுங்கிக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் நல்ல நல்ல புத்தகங்களை தங்களுக்குள் வாங்கிக்கொள்ளும் புதுப்புது முயற்சியில் இறங்கியிருப்பது நல்ல விஷயம், இதனை பாராட்டும்படி செய்து கொண்டு இருக்கும் ரவிக்குமாருக்கு உங்கள் பாராட்டை தெரிவிக்க விரும்பினால் தொடர்பு கொள்ளவும்:9841499181.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement