Advertisement

இம்ரான் பாக்., பிரதமர் எதிர்பார்க்க ஏதும் இல்லை!

பாகிஸ்தானில் நடந்த பொதுத் தேர்தல், இத்தடவை, பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அரசியலுக்கு இம்ரான் கான், புதிய பிரதமராகிறார். எத்தனையோ தேர்தல்கள் நடந்தாலும், ராணுவத்திற்கு கட்டுப்பட்ட பிரதமர், ஆட்சி நிர்வாகம் என்பது பாக்., நடைமுறை. எந்த ஒரு சிவிலியன் பிரதமர் அங்கு வந்தாலும், ஒரு சில மாதங்களில் ராணுவத்தின் சொல் கேட்கும் கட்டாயம் வரும். இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த பலரும் ஊழல் குற்றச்சாட்டில் மிதப்பவர்கள் என்பதும் அங்குள்ள நடைமுறை. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர், ஊழல் புகாரில் சிக்கி சிறையில் இருக்கிறார். இன்று, அவரது சகோதரர் முகமது ஷாபாஸ் ஷெரீப் அக்கட்சித் தலைவர். ஆனால், அக்கட்சி அதிக இடங்களைப் பெறாததால், பிரதமராக முடியாது.அடுத்ததாக, இன்றைய சூழலில் உலகம் முழுவதும் பேசப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது சின்னம் கூட கிரிக்கெட் மட்டை. கட்சியின் பெயர் தெக்ரீக் - இ - இன்சாப். இவரைப் பழித்து இவரது, 'மாஜி' மனைவி கூறிய புகார்களைத் தாண்டி, தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கான முக்கிய போட்டியாளராக பரபரப்பை ஏற்படுத்தினார்.மதத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு என்பதால், ஜமியத் உலாமா - இ - இஸ்லாம் என்ற கட்சியின் தலைவர் மவுலானா - பஸ்லுார் ரகுமான் உட்பட, பல கட்சிகள் களம் கண்டன. அந்த நாட்டில் காணப்படும் சன்னி, ஷியா பிரிவு தலைவர்களும் களத்தில் இருந்தனர். முன்பு செல்வாக்குடன் இருந்த பிரதமரான பெனசிர் மகன், பிலாவல் புட்டோ சர்தாரி கட்சி போட்டியிட்டாலும், அது இன்னமும் செல்வாக்கைப் பெறாததால், மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது.பாகிஸ்தான் ஊக்குவிக்கும் பயங்கரவாதிகள் தலைவனான ஹபீஸ் சயீது, ஆதரவைப் பெற்ற இஸ்லாமிய கட்சி நடத்திய தேர்தல் பிரசாரங்கள் அதிகம். அதில் அவன், 'அமெரிக்க வேலைக்காரர்கள் ஆட்சி நடத்துகிற போக்கு நிற்க வேண்டும்' என்று பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது. மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, ஹபீஸ், சர்வதேச அளவில் முத்திரை குத்தப்பட்ட பயங்கரவாதி. அக்கட்சி இப்போது மக்கள் ஆதரவைப் பெறவில்லை.பாகிஸ்தான் தோன்றி, 71 ஆண்டுகள் ஆகின்றன. முதல் பிரதமர் பெயர் லியாகத் அலி. அதற்குப் பின், தற்போது சிறையில் இருக்கும் நவாஸ் ஷெரீப் உட்பட இதுவரை, 29 பிரதமர்களை அந்த நாடு கண்டிருக்கிறது. இரு முறை பிரதமராக வந்த பெண் பிரதமர் பெனசிர் புட்டோ சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தந்தை புட்டோ, 'இந்தியாவுடன், 1,000 ஆண்டுகள் போராடினாலும் காஷ்மீரைப் பெறுவோம்' என்று, ஐ.நா.,வில் பேசியவர். அவருக்கு பதிலடியாக சிறந்த சட்ட வல்லுனரும், தேசிய வாதியுமான முகமது அலி சக்ளா, நமது சார்பில் பேசும் போது, 'இந்தியாவுடன், 1,000 ஆண்டு போர் அளவிற்கு பாகிஸ்தான் இருக்குமா?' என்று கேட்டு அவரது திமிர் பேச்சை அடக்கினார். மொத்தம், 30 கோடி மக்கள் தொகை கொண்ட அங்கே, பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் சற்று வல்லமை பெற்றவை. அணு ஆயுதங்கள், ராணுவத் தலைமை கையில் உள்ளது. அதன் பேச்சைக் கேட்கும் பிரதமரே இருக்க முடியும். மத வழி அரசுக் கொள்கையைக் கொண்ட இம்ரான், ராணுவத்தின் ஆதரவைப் பெற்றவர். காஷ்மீரை மீட்டு, பாகிஸ்தானுடன் சேர்ப்பதும் இவர் கொள்கை. பஞ்சாப் பகுதியில், நவாஸ் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கிற்கு ஆதரவு கிடைக்காமல், ஓட்டளிக்கும் போது, தில்லுமுல்லு நடந்திருப்பதாக புகார் கூறப்படுகிறது.பாகிஸ்தான் பார்லிமென்ட், 'தேசிய அசெம்பிளி' என்றழைக்கப்படுகிறது. இதில், 342 சீட்டுகள் இருந்தாலும், 272 சீட்டுகளில், 136க்கு மேல் பெறும் கட்சித் தலைவர் பிரதமராகலாம் என்கிற போது, இம்ரானுக்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன. சிறிய கட்சிகள் ஆதரவுடன் கூட்டணியாக ஆட்சி செய்ய வாய்ப்பு எளிது. ஆனால், அரசியலில் புதியவர், பெண்களை மதிக்காமல், அவர்களை மோசமாக நடத்திய இவர் செயலை, அவரது முன்னாள் மனைவி அளித்த பேட்டிகள் இனி பின்னுக்குத் தள்ளப்படும். அரசியலில் அதிக அனுபவம் இவருக்கு இல்லாததால், ராணுவத் தலைமை இவரை எளிதாக கையாளும். பயங்கரவாத அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யிடம் பரிவு, இறைத்துாதர் காட்டிய பாதையில் அரசு, இந்தியாவுக்கு எதிரான, ஜிகாதி சக்திகளுக்கு ஆதரவு ஆகியவை இவரது அடிப்படைக் கருத்துகள். அப்படி இருக்கும் போது, என்ன பெரிய மாற்றத்தை இவர் இந்திய உறவில் கொண்டு வருவார் என்பதை எதிர்பார்க்க முடியாது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement