Advertisement

அ.தி.மு.க., - எம்.பி.,க்களை காணோம்!

அ.தி.மு.க., - எம்.பி.,க்களை காணோம்!
தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்திக்க, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்த விவகாரம், டில்லி அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களை கலங்கடித்து விட்டது. 'என்ன நடந்தது' என, பார்லிமென்டில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களிடம் மற்ற கட்சி, எம்.பி.,க்கள் விசாரிக்கின்றனர்.இதனால் பதில் சொல்லி வெறுத்துப் போன, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளியே தலை காட்டவில்லை. சிலர் சென்னைக்கு திரும்பி விட்டனர்.இது நடந்த மறுநாள் பார்லிெமன்டின் சென்ட்ரல் ஹாலில், நிர்மலா சீத்தாராமன் வந்தார். உடனே, அவரை பெரும் கூட்டம் சூழ்ந்து கொண்டது. தூரத்தில் நின்றிருந்த காங்., - எம்.பி.,க்கள் இதைப் பார்த்தனர்.ரபேல் போர் விமானம் வாங்கும் விவகாரத்தில் மோடி அரசு ஊழல் செய்துள்ளது என, பார்லி.,யிலும், வெளியிலும் பேசி வருகிறார், ராகுல். ஆனால், இதை நிர்மலா சீத்தாராமன் மறுத்து வருகிறார்.நிர்மலாவைச் சுற்றி இவ்வளவு கூட்டம் இருப்பதைப் பார்த்தவுடன் ஒரு வேளை இந்த ஊழல் குறித்துதான் பேசுகிறாரா என தெரிந்து கொள்ள காங்கிரசார் அங்கு வந்தனர்.நிர்மலாவைச் சுற்றி இருந்தவர்கள், பத்திரிகையாளர்களும், சில, எம்.பி.,க்களும். அவர்களிடம் பன்னீர் விவகாரத்தில் என்ன நடந்தது என விளக்கிக் கொண்டிருந்தார் அமைச்சர். இதைப் பார்த்து வெறுத்துப் போன, காங்., - எம்.பி.,க்கள் திரும்பிச் சென்றனர்.இன்னொரு பக்கம், அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் நொந்து போயுள்ளார். தன் வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என அதிர்ச்சியில் உள்ள அவர், 'ஒரு நல்லெண்ணத்தில்தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன்; ஆனால் இப்படி ஆகிவிட்டதே' என வருத்தப்படுகிறார்.

தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றம்?

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி டில்லி வந்து மேலிடத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு ஊர் திரும்புவது வழக்கம். கடந்த ஒரு வாரமாக தமிழக, காங்., தலைவர்கள் அதிகம் பேர், டில்லியில்தான் டேரா அடித்துள்ளனர்.மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பு, வசந்தகுமார் உட்பட அனைத்து காங்.,- - எம்.எல்.ஏ.,க்களும் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.காங்., தலைவர் ராகுலை சந்தித்துவிட்டு, குஷ்பு வெளியே வந்தார். உடனே மறுபடியும் அழைப்பு வர, மீண்டும் ராகுலை சந்தித்துவிட்டு வந்தார். எதற்கு இரண்டு முறை சந்திப்பு; என்ன பேசினோம் என்பதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது என்கிறார், குஷ்பு.இவர் சந்தித்துவிட்டு போன பின், திருநாவுக்கரசர், ராகுலை போய் பார்த்தார். இந்த சந்திப்பு கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாம். குஷ்புவுக்கும், திருநாவுக்கரசருக்கும் ஆகாது. ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரிக்கத்தான் இருவரையும் ராகுல் சந்தித்துள்ளார் என சொல்லப்படுகிறது.இன்னொரு பக்கம் தமிழக எம்.எல்.ஏக்களும் ராகுலைச் சந்தித்துள்ளனர். தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்துவது, கட்சிக்குள் இளைஞர்களைக் கொண்டு வருவது எப்படி என பல விஷயங்கள் ராகுல் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் முக்கியமான விஷயம்...திருநாவுக்கரசர் மாற்றப்படுவாரா என்பதுதான். இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 'சில மாநில தலைவர்கள் மாற்றப்பட்டு விட்டனர். அது போல விரைவில் தமிழகத்திலும் நடக்கும்; காத்திருங்கள்' என்கின்றனர், சீனியர் காங்கிரஸ் தலைவர்கள்.

சிந்திக்க வைத்த பராசரன்!
உச்ச நீதிமன்றத்தில் தற்போது சபரிமலை வழக்கு நடைபெற்று வருகிறது. 10 லிருந்து, 50 வயதிற்குள் உள்ள பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடியாது. இந்த தடை, சட்டபூர்வமாக செல்லுமா என்பதை தலைமை நீதிபதி உட்பட, ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. 'இது பெண்களுக்கு எதிரானது; சட்டப்படி இது தவறு; மாதவிடாய்க்கும் தரிசனத்திற்கு என்ன சம்பந்தம்' என்றெல்லாம் நீதிபதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்திரா மற்றும் ராஜிவ் பிரதமராக இருந்த போது இந்தியாவின் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றிய, கே. பராசரன், 91, தன் வாதத்தை தொடங்கி நீதிபதிகளை கலங்கடிக்க வைத்துவிட்டார். நாயர் சொஸைடி சார்பில் வாதாடிய பராசரன் உணர்ச்சிபூர்வமான வாதங்களை முன் வைத்தார்.அவர் கூறியதாவது:நான் வக்கீல் தொழிலை ஆரம்பித்து, 68 வருடங்கள் முடிந்துவிட்டன. இதுவே, நான் வாதாடும் கடைசி வழக்கு. இங்கு வாதாட எனக்கு கடவுள் கொடுத்த வரமாகக் கருதுகிறேன். என்னுடைய ஐந்து வயதில் தாயை இழந்தேன்.குடும்ப பிரச்னை, சொத்து தகராறு, திருமண பிரச்னை போன்ற வழக்குகளை நான் எடுத்துக் கொண்டதில்லை. காரணம் அதனுடைய வலி எனக்குத் தெரியும்.இந்து சமூகம் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இப்போது ஆடி மாதம். தமிழகத்தில் இந்த மாதம் பெண்களுக்கு புனிதமான மாதமாக கருதப்படுகிறது. அம்மன் கோவில்களில் வழிபாடு நடக்கும். பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். எனவே, பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்பதே தவறு.ஒரு குறிப்பிட்ட பிரிவினரை கோவிலுக்குள் வரக் கூடாது என்பது முறைப்படுத்துவது, பாரபட்சம் அல்ல; ஆகம விதிகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது. பெண்களுக்கு எதிராக பேச மாட்டேன் என, எதிர் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன். அதை கடைபிடித்தேன் என நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, மூன்று மணி நேரம் வாதிட்ட பாராசரனை நீதிபதிகள் பாராட்டினர். இவருடைய வாதம், நீதிபதிகளை சிந்திக்க வைத்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    திருமதி நிர்மலாவிடம் சந்திக்க அனுமதி கேட்கும்போது சந்திப்பு ரகசியமாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு, து.மு. டெல்லி பொய் சேரும்முன், பன்னீர் நிர்மலாவை சந்தித்து நன்றி சொல்ல போகிறார் என்று செய்தி வெளியானதுதான் எல்லா குழப்பங்களுக்கும் காரணம். சொன்னபடி செய்வதும், செய்ததை அப்படியே சொல்வதும் நமது கழகங்களின் வழக்கம் இல்லை. இதனால் வந்த கூத்து இது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement