Advertisement

குட் டச்; பேட் டச்: சொல்லிக் கொடுங்க பெற்றோரே!

சமீபத்தில், மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்றை, 17க்கும் மேற்பட்ட கயவர்கள், பாலியல் வன்கொடுமை செய்ததை அறிந்து, தமிழகமே அதிர்ந்து போயுள்ளது. அந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள், தினமும் இதே போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.தன் மகள், ஏழு மாதங்களாக கொடுமை அனுபவித்து வருவதை, அவளது முகம், உடல் நிலையைப் பார்த்து கூட, ஒரு தாய் உணரவில்லை என்றால், அந்த தாய்க்கு அப்படி என்ன பிரச்னையோ! பள்ளி ஆசிரியரால் கூடவா, பிஞ்சு முகத்தில் தெரியும் மாற்றங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை... ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையிடம், இப்படி கூடவா அக்கறை இல்லாது இருப்பர்!நம் பிள்ளைகளை ஆடம்பரமாக, வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான், ஓடி ஓடி சம்பாதிக்கிறோம்.ஆனால், அவர்கள் என்ன மாதிரி சூழ்நிலையில் இருக்கின்றனர் என்பதை கூட கவனிக்காமல், 'வேலை... வேலை...' என்று ஓடுவது, எந்த விதத்தில் நியாயம்? வாட்ஸ் ஆப், மொபைல் போனுக்கு கொடுக்கும் நேரத்தை கூட, நம் பிள்ளைகளுக்கு கொடுக்காமல், 'படிச்சியா... டியூஷன் போறியா... அந்த வகுப்புக்கு போ... இந்த வகுப்புக்கு போ!' என விரட்டியடித்து விட்டு, அவர்களது மனக்கவலைகள் என்னவென்று கூட கேட்காத பெற்றோராக, சிலர் இருப்பது குறித்து வெட்கப்பட வேண்டும்.குழந்தைகள் பள்ளி விட்டு, வீட்டிற்கு வந்ததும், பள்ளியில், அவர்கள் செல்லும் வேன் அல்லது பேருந்தில், வகுப்பில் என்ன நடந்தது என்று கேட்க வேண்டும்.சாகப் போகும் வயதில் உள்ள கிழவன், அந்தச் சிறுமியை அனுபவித்தது மாத்திரம் அல்ல, குழந்தையின் கழுத்தில், கத்தியை வைத்து மிரட்டி, அவளை சித்ரவதை செய்து, அந்த காட்சியை வீடியோ எடுத்து, பல காமுகர்களுக்கு காண்பித்து, அவர்களையும் இந்த கொடுமை செய்வதற்கு துாண்டியுள்ளான்.இந்த செயலில், வயது வித்தியாசமின்றி ஈடுபட்ட நாய்கள், தங்கள் வீட்டு பெண்களை பயன்படுத்தி படம் எடுத்து, 'ஷேர்' பண்ண வேண்டியது தானே! அந்த குழந்தையைப் பார்க்கும் போது, ஒருத்தனுக்கு கூடவா இரக்கம் வரவில்லை?சட்டத்துறை அன்பர்களுக்கு, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
'இப்படிப்பட்ட காமுகர்களுக்காக, நாங்கள் வழக்காட மாட்டோம்' என ஒட்டு மொத்தமாக கூறியிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்கு, ஜாமின், வாய்தா போன்றவை கொடுக்கவே கூடாது.இதை விட, கொடுமை என்னவென்றால்... அந்த கொடூரர்கள் விசாரணையின் போது, இப்படி சொல்லியிருக்கின்றனர்... கொஞ்ச நாட்களுக்கு முன், தஷ்வந்த் என்ற காமக்கொடூரன், ஒரு சிறுமியை பாலியல் கொடுமை செய்து, தன்னை ஒரு நாள் காட்டி கொடுத்து விட்டால், என்ன செய்வது என்பதற்காக எரித்து விட்டான் அல்லவா... அதே ஸ்டைலில், இந்த சிறுமியை எரித்து விட, அநேக முறை முயன்றுள்ளனர். ஆனால், அவள் தப்பி விட்டாள் என்று சொல்லிஉள்ளனர். இதை கேட்கும் போதே மனம் பதறுகிறது. இந்த நாய்கள், எங்கள் குழந்தைகளை அனுபவித்து விட்டு, கொடூரமாக கொலை செய்வதற்காகவா, பெண் குழந்தைகளை பெற்று வைத்திருக்கிறோம்?இப்படிப்பட்ட கயவர்களை, அரபு நாடுகளில் முச்சந்தியில் நிற்க வைத்து, சுட்டுக்கொலை செய்வது போல் செய்து, அதை, 'லைவ்'வாக, 'டிவி'யில் ஒளிபரப்ப வேண்டும். அந்த காட்சியை காணும் காமக் கொடூரன்கள், பெண்கள் என்றாலே, காத துாரம் ஓட வேண்டும்.சிங்கப்பூர் போன்ற நாடுகளில், பெண்கள், எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து, இரவு நேரத்தில் கூட, தனியாக வெளியே செல்வர். அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க முடியாது. காரணம், சட்டம் அவ்வளவு கடுமையாக உள்ளது. அது போன்ற சட்டங்களை, நம் நாட்டில் கொண்டு வர வேண்டும்.சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்தால், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் முதல், துாக்கு தண்டனை வரை கிடைக்கும், 'போக்சோ' என்ற கடும் சட்டம் இயற்றியது தெரிந்தும், எப்படி பயமில்லாமல் இந்த காமக்கொடூரன்கள் நடந்துக் கொள்கின்றனர் என்பது புரியவில்லை. நீதித்துறை, இதற்கு உடனடியாக தீர்ப்பு வழங்கி, இப்படிப்பட்ட கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பெண் குழந்தைகள், என்ன செய்கின்றனர், யாருடன் பழகுகின்றனர் என்பதில், மிக மிக கவனமாக பெற்றோர் இருக்க வேண்டும். இப்போதே உங்கள் பெண் குழந்தைகளிடம், மனம் விட்டு பேசுங்கள்... ஏதாவது அசம்பாவிதங்கள் இது போல் நடந்திருக்கிறதா என்று விசாரியுங்கள். இந்த குழந்தையின் பெற்றோர் காவல் துறையை நாடியதால், இது நம் அனைவருக்கும் தெரிந்தது. எத்தனையோ கொடுமைகள் இது போல், தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.மானம் போய் விடுமே என்பதால், அநேகர் மூடி மறைத்து விடுகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் காமக்கொடூரன்கள்.உற்றார், உறவினர், அக்கம் பக்கத்தினர், வாத்தியார்கள், வேன் ஓட்டுனர்கள் மற்றும் அருகில் வசிக்கும் ஆண்கள் இப்படி யாராவது உங்கள் மகள்களை, 'பேட் டச்'சிற்கு பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். யார், 'பேட் டச்' செய்தாலும், அதை, உடனே பெற்றோரிடம், பிள்ளைகள் சொல்லி விட வேண்டும். அந்த அளவிற்கு உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் உறவு இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளி குழந்தையை, முதலில் பாழ்படுத்திய, 'லிப்ட் மேன்' அவளை தொட்டு விளையாடும் போதே, செய்கையில் எதிர்த்து விட்டு, தாயிடம் சொல்லியிருந்தால் இவ்வளவு பயங்கரம் நேரிட்டிருக்காதே... 100 குழந்தைகளில், 65 சதவீதம் பெண் குழந்தைகளும், 55 சதவீதம் ஆண் குழந்தைகளும் இந்த பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதாக, 'சர்வே' சொல்கிறது. எனவே, பெற்றோர் இது குறித்து, குழந்தைகளிடம் மனம் திறந்து பேசுவது நல்லது.பள்ளிகளில், கட்டாயமாக, 'செக்ஸ் கல்வி' வகுப்புகள் நடத்த வேண்டும். நிறைய பேர், செக்ஸ் கல்வி என்ற உடனே, அப்படியே வீடியோ போட்டு காண்பித்து விடுவது என்று நினைக்கின்றனர்.
அப்படியல்ல... குழந்தைகளது உடல், உறுப்புகள் குறித்து முதலில் கற்று தர வேண்டும். அதன் பின், அவர்களது உடலை யாரும் தொட அனுமதிக்க கூடாது என்பதை, இரு பாலினருக்கும் சொல்லித் தர வேண்டும்.'டீன் - ஏஜ்' பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், உணர்வுகள் அதை எப்படி கட்டுப்படுத்துவது, என்பது குறித்த ஆலோசனைகளை, மனநல மருத்துவர்கள் உதவியுடன் கற்று தர வேண்டும்.'செக்ஸ்' என்பது இவ்ளோ தான்; இதை மிகைப்படுத்தி காட்டும் ஆபாச வலைதளங்கள், 'போர்னோ கிராபி' எனப்படும் நிர்வாண காட்சிகள் போன்றவற்றை பார்ப்பதால், வக்கிர சிந்தை, ஆபாச எண்ணங்கள் தலை துாக்கும்; அவற்றை பார்த்து மனதை கெடுத்துக் கொள்ள கூடாது. அவற்றை பார்ப்பதை எப்படி தவிர்ப்பது, அதை பார்த்தவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு, தங்கள் வாழ்க்கையை இழந்து போவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.நம் அரசும், இப்படிப்பட்ட வலைதளங்களை முடக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். 'அந்த வலைதளங்களின் கட்டுப்பாடு எங்களிடம் இல்லை; அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் உள்ளது...' என, மத்திய, மாநில அரசுகள் சொல்கின்றன. தினம் தினம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு, தங்கள் வாழ்க்கையை இழந்து போகும் சந்ததியினரை காப்பாற்ற வேண்டியது நம் அரசின் கடமை.ஆண் பிள்ளைகளை பெற்றோர், 'ஆண் பிள்ளை தானே...' என, அலட்சியமாக இருக்க கூடாது. உங்கள் பிள்ளைகள் கைகளில், 'ஸ்மார்ட் போன்' இருக்கும் வரை, அவர்கள் எந்த மாதிரி காரியங்களைப் பார்த்து அடிமையாகியுள்ளனர் என்பது உங்களுக்கு தெரியாது.காரணம், இந்த மாதிரி பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறார்களும் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்.சென்னையில் உள்ள, புகழ்பெற்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் இது... ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு, 'பிரைவேட் பார்ட்'டில் வலி என்று அழுதிருக்கிறான். விசாரித்ததில் வகுப்பில், மூன்று மாணவர்கள் அவனது உடலை, 'மிஸ்யூஸ்' செய்த காரியம் தெரிந்து, அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பிரின்சிபலிடம் புகார் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் வரவழைத்து பிரின்சிபல் விசாரித்துள்ளார்... அதில், ஒரு மாணவனின் பெற்றோர், பயங்கரமாக தகராறு செய்துள்ளனர்.'என் பிள்ளை நன்கு படிக்கும் மாணவன்; தங்கக் கம்பி; 'செக்ஸ்'னாவே என்னன்னு தெரியாது... அவன் மீது இப்படி அபாண் டமாய் குற்றம் சுமத்துறீங்க...' என்று கத்தியுள்ளனர். பொறுத்து பொறுத்து பார்த்த, பிரின்சிபல், 'அப்படியே உட்காருங்க... இந்த காட்சியை பாருங்க...' என சொல்லி, வகுப்பறை கேமராவை ஓட விட, தங்கள் மகன் செய்த அயோக்கியத்தனத்தை திரையில் கண்டு, அரண்டு போயுள்ளனர் பெற்றோர். அப்படியே, பிரின்சிபல் காலில் விழுந்து, கதறி அழுது மன்னிப்பும் கேட்டுள்ளனர்.இதை எதற்கு சொல்கிறேன் என்றால், தப்பு செய்த காமக்கொடூரன்களை உடனே துாக்கிலிடுங்கள் என, கொதிக்கிறோம். அதே சமயம் இந்த தவறை சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், மெத்த படித்தவர்கள், படிக்காதவர்கள் என, எல்லாரும் இவ்வகை குற்றத்தில், சமீப காலமாக பிடிபடுவதால், எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும்! எனவே, நம் அன்பு மகன்கள், காமக்கொடூரன், 'லிஸ்ட்'டில் வந்து விடாமல் இருக்க, முன்பே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பிள்ளைகளை, 'படி... படி...' என, 'டார்ச்சர்' பண்ணுவதை நிறுத்தி விட்டு, நம் செல்லங்களுடன் மனம் விட்டு பேசி, அவர்களை நல்ல குடிமகன்களாக வாழ வைக்க வேண்டியது பெற்றோராகிய நம் கடமை!இ - மெயில்: jjaneepremkumargmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Rajendran Selvaraj - Saint Louis, MO,யூ.எஸ்.ஏ

    அன்பு தோழி, வாழ்த்துக்கள் உங்கள் கட்டுரைக்கு. ​

  • vbs manian - hyderabad,இந்தியா

    இப்போதெல்லாம் பெண்களுக்கு வீட்டிலேயே இந்த கோர சம்பவங்கள் நிகழ்கின்றன..ஆண்டவன்தான் இந்த தளிர்களை கைப்பற்ற வேண்டும்.

  • Hariprasad.N - Bangalore,இந்தியா

    குட் டச், பேட் டச் என்று எதையும் சொல்லித்தர வேண்டாம். டோன்ட் டச் என்பதை சொல்லிக்கொடுங்கள். தொட்டுப் பேச வேண்டிய அவசியம் என்ன? தொடாம friend ship வெச்சுக்க முடியாதா? அப்படி முடியலைன்னா அந்த நட்பு தேவை இல்லை. இது பிற்போக்கு சிந்தனை ன்னு சொன்னாலும் இதுதான் safe. (நான் சொன்னது சரியில்லைன்னு கமெண்ட் போட நெனைக்கறவங்க ஒரு நிமிஷம் நம்ம இருக்கிற சமூக அமைப்பு மற்றும் நம்ம வீட்ல இந்தமாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டால் என்னவாகும்ன்னு நெனச்சிட்டு கமெண்ட் போடுங்க )

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement