Advertisement

வழிகாட்டும் தீர்ப்புகள்...

இப்போதெல்லாம் சிறிய விஷயங்கள் என்று கருதப்பட்டவை, மிகப்பெரும் சர்ச்சைகளுக்கு ஆதாரமாகின்றன. நீதித்துறையின் சுதந்திரத்தைக் காக்கும் நீதிபதிகளும், அவ்வப்போது தரும் தீர்ப்பு, பல ஆண்டுகளாக நாம் இருட்டில் வாழ்ந்ததை புலப்படுத்துகிறது.சென்னை ஐகோர்ட்டில் இருந்து, 100க்கும் மேற்பட்ட வழக்கு கட்டுகள் மாயமானது, இச்சர்ச்சையில் ஒன்று. வழக்கு கட்டுகளின் பரிமாணத்தை பார்த்திருக்கும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர், அதைப் படித்து, சட்ட நுணுக்கங்களை விளக்கி முடிவளிப்பது, பெரிய பணி என்பதை அறிவர்.ஆனால், நீதியின் மாற்று சற்றுக் குறைந்ததோ என்று சில சமயங்களில் சந்தேகப்படும் சூழ்நிலைகள், பாதிக்கப்பட்ட சிலருக்கு வருவது உண்டு. அதற்குத் தீர்வாக, கீழமைக் கோர்ட்டில் இருந்து நியாயம் தேடி பயணிக்கும் வகையில் வழிகள் உள்ளன. அதனால், பல மட்டங்களில் வழக்கு பயணிப்பதும், இறுதியாக சுப்ரீம் கோர்ட் வாசல் வரை சென்று விடை காண்பதும், வழக்கமாக உள்ளது. வழக்குகளில் ஆட்பட்டால், சமயங்களில் சொத்துகளே கரைந்து விடும் என்று கிராமங்களில், அஞ்சுபவர்களும் உண்டு.ஆனால், நீதிபதி ஒருவர், தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று கோப்புகளை படிக்க வைத்திருந்தது, திரும்ப கோர்ட் காப்பகத்திற்கு ஆவணங்கள், வரவில்லை என்பது, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.இன்ஷூரன்ஸ் தொடர்பாக விசாரிக்க, ஒரே நபர் சார்பில், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனமானது, அதைக் கண்டறிந்து ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட் நீதிபதி பிரகாஷ் அளித்த உத்தரவு, வாகன இன்ஷூரன்ஸ்விவகாரத்தில் விழிப்புணர்வை இனி அதிகமாக ஏற்படுத்தும்.வாகன இன்ஷூரன்ஸ் என்பது, விபத்து இழப்பீடு தருகிறது என்பதால், இதில் சிலர், சாமர்த்தியமாக அந்த வழக்கை கையாண்டு, பணம் வசூலிப்பது வழக்கம். போலீஸ் அதிகாரிகளை குறைகூறி பயன் என்ன இருக்கிறது?பொதுவாக, வாகன காப்பீட்டு இன்ஷூரன்ஸ் வாங்குவோர் பலரும், ஏதாவது குறுக்கு வழி இருந்தால், அதற்கு உரிய பணம் தந்து அப்பிரச்னையைக் கையாளுகின்றனர் என்பது பலர் அறிந்ததே.இப்போது, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் இருந்த, 55 கோப்புக் கட்டுகள், சிறுவழக்கு விசாரணை கோர்ட்டில் இருந்து மாயமானது, ஒரு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் உடையது என்ற விஷயம், நீதிபதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இம்மாதிரி விஷயங்களில், 'தீக்கோழி போல மண்ணுக்குள் தலையை மறைத்து, ஏதும் தெரியாதது போல இருக்க முடியுமா?' என்ற நீதிபதி பிரகாஷ் கேட்டிருப்பது, சட்டத்தின் மாண்பை, அக்கேள்வி பிரதிபலிப்பதாக உணரலாம்.சில நேரங்களில், எதற்கெடுத்தாலும் கோர்ட் தலையிடுவதாக கருதும் போது, இம்மாதிரி உண்மைகள் வெளிவரும் போது, 'மறுக்கப்பட்ட நீதி' எதிலும் கூடாது என்ற பாதையில் தமிழகம் பயணிக்கிறது என்ற கருத்து தோன்றுகிறது.அதையும் விட, மோட்டார் விபத்து மற்றும் இன்ஷூரன்ஸ் வழக்குகளில், போலீசார், தரகு நபர்கள், வழக்கறிஞர்கள் என்ற கூட்டணி செயல்படுவதாக, நீதிமன்றம் கருதுவது பெரும் துரதிர்ஷ்டம். இவற்றைக் களைய, முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில், ஒரு நிபுணர் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவர் தலைமையில் அளிக்கும் யோசனைகள், இவ்வழக்குகளில் தெளிவையும், நியாயமான இழப்பீடுகளையும் பெற உதவும் என்று நம்பலாம்.ஏனெனில், நீதியரசர் சந்துரு அளித்த பேட்டி ஒன்றில், 'கோர்ட்டில் உள்ள வழக்கு கட்டுகள் மாயமாக வழி கிடையாது; அதற்கென அமைக்கப்பட்ட வழிமுறைகள் அவ்வாறு உள்ளன' என்கிறார். தவிரவும், டிஜிட்டல் முறை தகவல்கள், ஆவணங்கள் சேகரிப்பு மூலம் முக்கிய ஆவணங்கள் மட்டும் காணாமல் போவது, எதிர்காலத்தில் நின்று போகும்.ஏற்கனவே சிறு வழக்குகள் எளிதாக தீர்க்கப்பட, விரைவாக நடவடிக்கை எடுக்கும் நீதிமன்றங்கள், அதிக அளவு வழக்குகளை உடனடியாகத் தீர்க்கும் வழிமுறைகள் அமலாகி உள்ளன.நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் அளவுக்கு காலமாற்றம் நிகழ்வதை, சுப்ரீம் கோர்ட் பாதை காட்டுகிறது. தமிழகத்தில் கோவில் சொத்துகள் பாதுகாப்பு, அதிக அளவில் பேனர் கட்டி மக்களுக்கு இடையூறு உட்பட பல விஷயங்களில், நீதியரசர்கள் அரசுக்கு உத்தரவிடும் போக்கு, பரபரப்பை ஏற்படுத்தலாம்.ஆனால், தனிப்பட்ட சிவில் சுதந்திரம், ஜனநாயக கோட்பாடுகள், பல்வேறு சமுதாயங்கள் இணைந்து வாழும் சூழ்நிலைகளை ஆய்ந்து, அதே சமயம் அரசு நிர்வாகத்தை சட்டரீதியாக செயல்படச் செய்யும் எல்லா முயற்சிகளையும், மக்கள் மகிழ்வுடன் வரவேற்பர் என்பது உறுதி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement