Advertisement

நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற பாடல்வரிக்கேற்ப, எப்போதும் குழந்தைகள் தெய்வத்திற்கும், பெரியவர்களுக்கும் சமமாக கருதப்படுவது உண்மைதான். பிள்ளைகள் குறும்பு செய்வதும் அல்லது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதும் பெற்றோர்களின் வளர்ப்பால் தான். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதற்கான உண்மையான மற்றும் வெளிப்படையான கருத்தையும் சொல்லித்தரவேண்டும்.முன்பெல்லாம் நாம் செய்யும் ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் காண முடிந்தது. அதாவது வாசல் தெளிப்பது, துணி துவைப்பது, கோலம் போடுவது, பூ கட்டுவது, வீட்டை பெருக்குவது, பாத்திரம் விளக்குவது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, அம்மியில் அரைப்பது, உரலில் மாவு அரைப்பது, கம்பு குத்துவது மற்றும் இடுப்பில் குடம் வைத்து நீர் சுமப்பது இவையனைத்தையும் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதால் உடலுக்கு உடற்
பயிற்சி மட்டுமல்லாது ஆரோக்கியமாகவும் இருக்கும். இவையெல்லாம் இன்று பிளாஷ்பேக் காட்சிகளாக மாறிவரும் நிலையில் சிறுவயதிலேயே மன அழுத்தம், சர்க்கரை நோய், ஞாபக சக்தி குறைவு, சிறுநீரக கோளாறு மற்றும் துாக்கமின்மை ஆகிய நோய்கள் நம்மை சுற்றி வளைத்து விட்டன.

உணவு முறைகள்பிள்ளைகளை குறைந்தது 8 மணி நேரமாவது துாங்கவிடுங்கள். இரவு துாங்குவதற்கு முன் சில நிமிடங்கள் தியானம் செய்வதால் தீய சிந்தனைகள் மற்றும் கெட்ட கனவுகள் வராமல் நல்ல துாக்கத்துடன் காலையில் எழுந்திருக்கலாம். பிள்ளைகளை அடித்து எழுப்ப வேண்டாம். அதே நேரத்தில் காலை 6 மணிக்குள் எழுப்பி விட வேண்டும். முக்கியமாக பிள்ளைகள் தானாக எழுந்திருக்கும் பழக்கத்தை பழகிக் கொடுக்கலாம். பிள்ளைகளின் அருகில் அலைபேசி போன்ற கதிர்வீச்சுகள் உள்ள பொருட்களை வைத்துக்கொள்ள அனுமதிக்காதீர்கள்.பெற்றோர்கள், தினமும் ஒரு வேளையாவது குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுங்கள். தாங்கள் வேலை செய்யும் இடங்களில் நடைபெறும் சுவாரஸ்யமான விஷயங்களை பகிருங்கள். பீட்சா, பர்கர், அசைவ உணவுகள், பாஸ்ட் புட், ஜங்க் புட், புரோட்டா, எண்ணெய் பலகாரங்கள் கொடுக்க வேண்டாம். பாக்கெட் உணவுகளை தவிர்த்துவிட்டு பழங்கள், காய்கனிகள், இளநீர், பதநீர், நொங்கு, பயறுவகைகள், கேப்பை, கம்பு, தினை, வேர்க்கடலை, வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள பழக்குங்கள்.பிள்ளைகள் தன்னுடைய வேலைகளை முடித்தவரை தானே செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும். அதாவது வீட்டில் உள்ள புத்தகங்களை படுக்கை அறை, பீரோ, பூஜை அறை மற்றும் கிச்சன் ஆகியவற்றை தானே சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்கலாம். வீட்டிற்கு வரும் உறவினர்களை இருகரம் கூப்பி வணக்கம் சொல்லி வரவேற்பது, தண்ணீர் கொடுப்பது, நன்றி சொல்வது, நலம் விசாரிப்பது மற்றும் மரியாதையான சொற்கள் பயன்படுத்த கற்றுக் கொடுக்கலாம்.அதேபோல் சில பெற்றோர்கள் சொன்ன விஷயத்தையே திரும்ப திரும்ப குழந்தைகளுக்கு சொல்வார்கள். அது பிள்ளைகளை எரிச்சலுாட்டும் விதமாக அமையும். பெற்றோர்கள் தாங்கள் செய்யும் சிறு சிறு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். அதன் மூலம் அனுபவ அறிவை வளர்க்கலாம். அதேசமயம் அவர்கள் மனது கஷ்டப்படும்படி வார்த்தைகளை பேசி விடக்கூடாது.


உறவு முறைகள்


பிள்ளைகளுக்கு உறவு முறைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். ஏனெனில் இனிவரும் காலங்களில் உறவு முறைகளை சொல்லி கூப்பிடும் பழக்கமே மறந்து போகும் நிலைமை உள்ளது. உறவு முறைகளை சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல் விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களிலாவது உறவினர்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்.பிள்ளைகளை அருகிலுள்ள நுாலகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள வெளியில் கடைகளுக்கு அழைத்துச் செல்லலாம். பணத்தின் பயன்பாடு, மதிப்பு, குடும்பத்தின் வரவு செலவு, சேமிப்பின் அவசியம்,; பொருட்களின் விலைவாசி ஆகியவற்றை சொல்லிக்கொடுங்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தங்களது வீட்டின் முகவரி, அலைபேசி எண்கள் மற்றும் உறவினர்கள் யார் என்பதை சொல்லிக் கொடுத்தல் அவசியம். வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பின் ஒருபோதும் ஒருவருடன் மற்றொருவரை ஒப்பிட்டு பேசாதீர்கள்.மரம் நடுவது, மழைநீர் சேமிப்பது, நீர்நிலைகளை பாதுகாப்பது, மாடித்தோட்டம் அமைப்பது, விவசாயம், போன்றவற்றின் அவசியத்தை சொல்லிக் கொடுங்கள். பிள்ளைகளின் பிறந்தநாளன்று மரக்கன்று நட்டு வைத்து அம்மரத்திற்கு அவர்கள் விரும்பிய பெயரை வைத்து பராமரிக்கச் செய்யச் சொல்லுங்கள். குழந்தைகள் காப்பகம், மனநல காப்பகம் மற்றும் முதியோர்கள் காப்பகத்திற்கு உதவி செய்வது போன்ற பழக்கவழக்கங்களை பழகிக்கொடுங்கள்.மாலை நேரங்களில் வெளியில் விளையாட அனுமதி கொடுங்கள். காலையில் பெற்றோர் வாக்கிங் செல்லும் போது குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.


பழக்கமும், பயிற்சிகளும்


மற்றவர்களுக்கு உதவி செய்யும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு படிப்பு மட்டுமல்லாது நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள நாளிதழ்கள், புத்தகங்கள் படிக்க செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அலைபேசியை அளித்து விடாதீர்கள்.செல்லும் இடமெல்லாம் காரிலேயோ, இருசக்கர வாகனத்திலோ அழைத்து செல்லாமல் சில நேரங்களில் நடந்தோ, பேருந்திலோ அல்லது ஆட்டோவிலோ அழைத்துச் செல்லுங்கள். அதிலிருந்து சில அனுபவ அறிவை கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. சைக்கிள், நீச்சல், யோகா, தியானம், தோப்புக் கரணம், சூரிய நமஸ்காரம் ஆகியவற்றை கற்றுக்கொடுங்கள்.பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதே பெற்றோரின் முக்கிய கடமை. வாழ்வில் கடந்து வந்த பாதைகளையும் அனுபவங்களையும் பகிருங்கள். சுயமாக சிந்திக்க, சுயமாக செயல்பட கற்றுக்கொடுக்க வேண்டும். நேர்மையான எண்ணம் மற்றும் தன்னம்பிக்கை தரும் வகையில் பேச வேண்டும்.
தீய எண்ணங்கள் மனதில் பதியாவாறு வளர்த்துக் கொள்ள வேண்டும்.மதிப்பெண்ணை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்தாலோ அல்லது எதிர்பார்த்த மதிப்பெண்கள் எடுக்கவில்லையென்றாலோ எக்காரணம் கொண்டும் அவர்கள் மனது புண்படாமல் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்க வேண்டும்.
இப்படி எல்லாம் செயல்பட்டால் வாழ்வில் ஏற்படும் தடைகளையும், கஷ்டங்களையும், பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியமும் தன்னம்பிக்கையும் குழந்தைகளுக்கு வளரும் என்பதில் சந்தேகமில்லை.
- த. ரமேஷ், பேராசிரியர்ஸ்ரீசவுடாம்பிகா பொறியியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை.98944 46246

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement