Advertisement

மனிதனின் பலம் நம்பிக்கையில்!

'உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே'என கற்றலின் முக்கியத்துவத்தை புறநானுாறு குறிப்பிடுகிறது. உடலில் மூச்சு இருக்கும் வரை ஒவ்வொரு செயலிலும் கற்றல், கற்பித்தல் நடக்கிறது. அதனால் புரிதல் உருவாகிறது. கற்றல் என்பது கல்வி, பயிற்சி, அனுபவம் இவற்றின் மூலம் எழும் நடத்தையின் மாற்றமாகும். மாற்றம் என்பது கருவறையில் இருந்து கல்லறை வரை தொடர்கிறது. மனிதர்களின் இயல்புக்கு ஏற்ப கற்றலின் நுண்திறன், நேர்மறை எண்ணம், லட்சியம், ஆளுமைகுணம், செயல்திறன் என அனைத்து நிலைகளிலும் மாற்றம் ஏற்படும். கற்றல் என்பது தொடர்ந்து நடக்கும் நிகழ்வு. இந்நிகழ்வின் போது இலக்கை நோக்கி செல்ல தடைகள் தோன்றும். தடைகளை தகர்த்து முன்னேற வேண்டும்.
கற்பித்தல்
கற்பித்தல் என்பது கற்போர்க்கு கற்றலின் நோக்கத்தை தெளிவாக எடுத்து கூறுவதாகும். தேவையை அறிந்து தேர்ந்த பயிற்சியினால் சிறந்த மாற்றத்தை உருவாக்க முயற்சி எடுப்பதே கற்பித்தலாகும். முக்கியமாக கற்பித்தலின் போது கற்போரின் எண்ணங்கள், தேவை அறிந்து பயிற்சி அளித்தல் வேண்டும். கற்பித்தலுக்கு வயது ஒரு தடையே இல்லை. பதினாறு முறை கட்டிய வலை கலைக்கப்பட்ட போதும், பதினேழாவது முயற்சியில் வெற்றி பெற்ற சிலந்தியின் செயல்பாடு தான் தோல்வியுற்று மறைந்து வாழ்ந்த மன்னர் ராபர்ட் புரூசுக்கு தன்னம்பிக்கையை தந்தது. மீண்டும் போரிட்டு நாட்டை வென்றான். கற்பித்தல் என்பதும் கற்றல் என்பதும் எல்லா இடங்களிலும் நடக்கும்.

புரிதல்கற்றல், கற்பித்தலின் பயன் புரிதலில் மட்டுமே வெளிப்படும்.'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தவர்'புரிதலினால் சமுதாயத்தோடு வேறுபட்டு வாழாமல் நற்சிந்தனை, நற்பேச்சு, நற்செய்கை, நல்வாழ்க்கை என்ற உண்மையான பண்பாட்டை பெறுவர்.அன்றாட வாழ்வில் ஏற்படும் தடைகளை தாண்ட, குருகுல வாழ்வில் கற்றல் பழக்கியது. சமுதாயத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வாழ உதவியது. மாணவர்கள் இறைபக்தி, மனவடக்கம், வாழ்க்கைக்கு தேவையான நெறிகள் என அனைத்து பண்புகளையும் பெற்றனர். குருவை தெய்வமாய் வழிபட்டனர்.பின் குருகுல வாழ்வு மாறி கல்விச்சாலை திறக்கப்பட்டது. பல வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர் பாடம் கற்பித்தார். ஆசிரியர் வாக்கே மெய்வாக்காக கருதப்பட்டது. அன்று தேவை குறைவாக இருந்ததால் நிறைவாக பயின்றார்கள். கற்றலின் பண்பாட்டை பணிவில் காட்டினார்கள்.இன்றைய சூழலில் காலத்திற்கேற்ப கற்றலும், கற்பித்தலும் மாற்றத்திற்குரியதாக உள்ளது. கற்றல், கற்பித்தலில் கணினியும், இணையதளமும், அலைபேசியும் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவைக்கு அதிகமாக அனைத்தையும் எளிதில் பெற முடிகிறது. அன்று ஒரு பழம் இருந்தாலும் அது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. உடலுக்கு நன்மை பயக்கும் உணவு, விளையாட தீங்கு விளைவிக்காத மரப்பொம்மை, இயற்கை சூழலில் விளையாட்டு என எளிதில் கிடைக்கும் அனைத்தும் வழங்கப்பட்டது.புத்தக தேவை என்றாலும், தேடிப் பெற்றார்கள். தேவையை அறிந்து வாசித்தலை, சுவாசிப்பது போல் நேசித்தார்கள். கற்றலோடு,பண்பாட்டு மீறல் இன்றி வாழ்ந்தார்கள். இன்று கணினியின் மூலமும் கற்றலும், கற்பித்தலும் நடக்கிறது. இக்கற்றலில் நன்மைகள்இருப்பினும் சில இடையூறுகள் உள்ளது. முக்கியமாக அலைபேசியை பயன்படுத்தும் குழந்தைகளின் கற்றலின் ஐந்து திறன்கள் பாதிக்கப்படுகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.பார்க்கும் திறன், கேட்கும் திறன், எழுத்து திறன், பேச்சு திறன், மூளை நரம்புகளின் இயக்கத்திறன் பாதிக்கப்படுகிறது. கற்றல், கற்பித்தலில் சொல், செயல், மனம் என மூன்று ஆற்றல்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்று ஆற்றல்களுக்கும் வாழ்வின் திசையை மாற்றும் தன்மை உண்டு.

சொல் ஆற்றல்'கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்'கேட்பவர்களை தன் வயப்படுத்தி, கேளாதவர்களையும் கேட்க வைக்கும் ஆற்றலே சொல்லாற்றலாகும். சொல் என்பது ஈட்டியின் முனையை போன்றது. உள்ளத்தை ஊடுருவிச் செல்லும் ஆற்றல் உடையது. இதமான பதமான சொற்களை பதப்படுத்தினால் கற்றலின் வல்லமை கூடும். நேர்மறை எண்ணமுள்ள சொற்கள் பலரின் வாழ்வில் நல்ல திருப்பு முனையாக அமைந்து விடும். அதற்கு சிறந்த எடுத்து காட்டாக திகழ்பவர் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தரின் எழுச்சிமிகு உரைகளை கேட்டு வியந்து அச்சொல்லாற்றல் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் முன்னுரையாக இருக்கும் என்பதை உணர்ந்து ராமநாதபுரம்மன்னர் பாஸ்கர சேதுபதி, சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு ஊக்கமளித்து உதவிகள் செய்தார். அன்று சுவாமி சிகாகோவில்ஆற்றியஉரை இன்றும் அனைவரின் மனதிலும் பதிந்துள்ளது. சொல்லின் ஆற்றல் அதை பயன்படுத்தும் வலிமையில் உள்ளது. சொல்லாற்றலால் ஒரு மனிதனை உயர்த்தவும், தாழ்த்தவும் முடியும்.

செயல் ஆற்றல்தம்மால் எதை செய்ய முடியும் என்பதையும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து செயலில் சோர்வடையாமல் தொடர்ந்து முயல்பவர்களுக்கு முடியாத செயல் என எதுவும் இல்லை. ஒரு செயலால் ஆக்கவும், அழிக்கவும் முடியும். எண்ணங்கள் நன்றாக இருந்தால் செயல்களும் நன்மை பயப்பதாக இருக்கும். காட்டை அழிக்கஒரு தீக்குச்சி போதும். அதிக தானியங்களை அறுவடை செய்ய சில விதைகள் போதும். அதைப் போல பல தீமைகளுக்கு ஒரு செயல் காரணமாகி விடும். செய்யும் செயலுக்கு விளைவு உண்டு. நல்ல செயல் திறன் கற்றலிலும், கற்பித்தலிலும் உருவாகிறது.'கற்றறிவாளர் கருதிய காலத்துக்கற்றறிவாளர் கருத்தில் ஓர்கண் உண்டு'உண்மையான கற்றலால் மனக்கண் புலனாகும் என்று திருமந்திரம் கூறுகிறது. மனம் என்பது பேராற்றல் உடையது. அப்துல் கலாம் விமான படை விமானியாக தேர்வாகவில்லை என அறிந்தவுடன் விரக்தியின் எல்லைக்கே சென்று விட்டார். மிகுந்த மனச்சோர்வுடன் டேராடூனில்இருந்து ரிஷிகேஷ் சென்று சுவாமி சிவானந்தாவை சந்தித்தார். அப்துல் கலாமின் மன ஓட்டத்தை அறிந்து சுவாமி பகவத் கீதையில் இருந்து ஒரு வாசகத்தை காட்டினார். அதில் தோற்கும் மனநிலையை தோற்கடித்து விடு என்று இருந்தது. பின்பு சுவாமி ''தோல்வியை மற, உனக்கு என்று கொடுக்கப்பட்டுஉள்ளதை தேடு. இறைவனிடம் சரண் அடைந்து விடு,'' என்று உபதேசம் செய்தார். கலாம், கற்றலால் பெற்ற மன ஆற்றலால் உலகமே வியக்கும் மாமனிதரானார்.மனக்கதவை திறந்தால் பிறக்கும் பல வழிகள். யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் என்ற கூற்றை மனதில் கொண்டு , தோல்வியை கண்டு துவளாது சாதிக்க பிறந்தவர்கள் என்ற நம்பிக்கையுடன் துணிந்து நின்று வெற்றியை காண வேண்டும்.வாழ்க்கையில் எப்போதும் கற்றுக் கொள்வதை நிறுத்தக் கூடாது. ஏனெனில் வாழ்க்கை நமக்குக்கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது.-முனைவர் ச.சுடர்க்கொடிகல்வியாளர், காரைக்குடி94433 63865

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement