Advertisement

இதுவும் கடந்து போகும்!

இதுவும் கடந்து போகும் என்ற வார்த்தை தான் எதையும் கடந்து போகச் செய்யும் நம்பிக்கை தருகிறது. இந்த நிலை நிரந்தரமில்லை என்ற தெளிவும், வாழ்க்கை ஒரு வட்டம் என்ற புரிந்துணர்வும் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும்.வாழ்க்கையில் இன்பமும், சந்தோஷமும், வெற்றியும், புகழும் ஏன் ஒரு கட்டத்தில் வாழ்க்கையும் கடந்து போய்விடும். அப்படி இருக்கையில் துன்பம் மட்டும் எப்படி நிலைத்திருக்கும். இதுவும் கடந்து போகும்.புத்தரிடம் சென்று இறந்த தன் குழந்தையை திருப்பித் தருமாறு கேட்ட தாயிடம் இறப்பே இல்லாத வீட்டில் சென்று கடுகு வாங்கி வரச்சொன்னாராம்.வெறுங்கையுடன் வந்த தாயிடம், இது தான் நிதர்சனம் என்றாராம் புத்தர். ஆனால் நிதர்சனங்களை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. துன்பநிலை வந்ததும் விரக்தியின் உச்சிக்குச் சென்று விபரீத முடிவுகளுக்குச் செல்லும் மனிதர்கள் ஒரே ஒரு நிமிடம் யோசித்தால் போதும். இதற்கான தீர்வுகள் நமக்குள்ளேயே இருக்கிறது. கல்லுக்குள்ளேயே இருக்கிற தேரைக்கும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையே வாழ்க்கை.ஒரே நதியில் மீண்டும் குளிக்க முடியாது. அலைந்து கொண்டிருக்கும் நீர், அடுத்த வினாடியே வேறொரு நீராக நதியில் பிரவாகிக்கிறது. அதுபோலவே தான் அடுத்தடுத்த மாற்றங்கள் நம்முள் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.அழுகை, இன்பம், சோகம், ஆச்சரியம் என விரவி இருந்தால் மட்டுமே வாழ்க்கை சுவாரசியமாக செல்ல முடியும்.
பறவைகளை பாருங்கள் : திருமண பந்தங்கள் கூட எதிரெதிர் குணம் கொண்ட மனிதர்களின் உணர்வுகளால் ஆனது தான்.ஏற்கனவே கேட்ட ஒரு நகைச்சுவைக்கு ஒரு தடவைக்கு மேல் எனக்கு சிரிப்பு வரவில்லை என்று சொல்கிறோம். ஆனால் ஏற்கனவே நடந்த சோக நிகழ்வுகளை மறக்காமல் புலம்பிக் கொண்டு இருக்கிறோம். எத்தனையோ வருட பிரச்னைகளை வைத்து கொண்டு கோபத்தை சுமந்து கொண்டே அலைகிறோம். சேகரித்து வைக்கும் உணர்வுகள் நல்லவைகளாக இருக்கட்டுமே. சுய இரக்கம், வன்மம், வெறுப்பு, அகங்காரம், ஆணவம் போன்ற உணர்வுகளை சுமக்க வேண்டாம். பறவையைப் பாருங்கள். அது விதைப்பதில்லை. அறுப்பதுமில்லை.அவை நிகழ்கால வாழ்வினை அழகாக வாழ்கின்ற உயிரினங்கள். மனிதர்கள் மட்டும் ஏதோ ஒன்றிற்காக கவலைப்பட்டுக் கொண்டே வாழ்கிறார்கள். பகவத் கீதை இன்று உன்னுடையது நாளை வேறொருவருடையதாகிறதுஎன்கிறது. இன்றைய நமது இன்ப துன்பங்களும் அவ்வாறே. இதையே நம் கிராமத்துப் பாட்டி, தொல்லையைத் துாக்கி தோளில் சுமக்காதே என்று கூறுவார்.வெற்றி வந்தால் எதற்காக இந்த வெற்றி மற்றவர்களுக்கு இல்லாமல் எனக்கு மட்டும் கிடைக்கிறது என்று யோசித்தது இல்லை. ஆனால் துன்பமோ, தோல்வியோ வரும் போது எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டம், வேறு யாருக்கும் வராமல் என்று யோசிக்கிறது மனது. தோல்வி வரும் போது தைரியமாக சொல்லுங்கள், இந்த தோல்வியைக் கடந்து போவேன் என்று! நான் முயற்சிக்காததால் வந்த தோல்வி. இந்த தோல்விக்கு காரணம் நான் மட்டுமே என்று தன்னம்பிக்கையுடன் சொல்லுங்கள்.
சிரித்திரு மனமே : இன்பத்திலும், துன்பத்திலும் சிரித்திரு மனமே என்ற பழைய பாடல் வரி உண்டு. இன்பத்திலே பிறந்து வளர்ந்து மடிந்தவர் யாரும்இல்லை, துன்பத்திலும் அப்படித்தான். தோல்வியின் இறுதியில் தான் வெற்றி ஆரம்பமாகும் வாய்ப்புகளும் சில நேரங்களில் கடந்து போய்விடும். உதாரணத்திற்கு இளைஞன் ஒருவன் அந்நாட்டு மன்னரின் மகளை மணம் முடிக்க வேண்டும் என எண்ணி யிருந்தான். மன்னர் அவனுக்கு ஒரு போட்டி வைத்தார். அதாவது அவன் மாட்டின் வாலைப் பிடித்து அதை அடக்க வேண்டும். அவனுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற வேண்டும். முதலில் ஒரு மாடு அசுர வேகத்துடன் பாய்ந்து வந்தது, அதனால் அவன் அதை அடக்காமல் அடுத்த மாட்டை அடக்கி விடலாம் என்று எண்ணி அதை விட்டுவிட்டான். அடுத்த மாடு அவிழ்த்து விடப்பட்டது. அது பார்ப்பதற்கு பூதம் போல் தெரிகிறது என்று கூறி அதையும் விட்டுவிட்டான். மூன்றாவதாக ஒரு மாடு சாதுவாக வந்தது, அதை அடக்கி விடலாம் என்று எண்ணி அருகில் சென்று பார்த்த போது ஏமாந்து போனான். அந்த மாட்டுக்கு வாலே இல்லை. வாழ்க்கை கூட இப்படியானதே. கிடைக்கும் போதே வாய்ப்பை சரியாக பயன்படுத்தாவிட்டால் அதுவும் கடந்து போய்விடும். சூழலை உருவாக்கு அல்லது சூழலை உனதாக்கு.சில விஷயங்கள் முயல், ஆமை கதையில் வரும் முயல்போல், நம்மை விட்டு வேகமாக சென்று விடும். ஆனால் பல விஷயங்கள் ஆமை போல மெதுவாகத் தான் நகர்கின்றன; ஆனால் பெரிய பாடத்தை உணர்த்திவிட்டு சென்று விடுகின்றன.உள்ளத்தில் தெளிவுதினமும் எத்தனையோ பேர் நம்மை கடந்து செல்கிறார்கள். அவர்களில் யாரோ ஒருவர் வண்டியில் சைடு ஸ்டாண்டு எடுக்காவிட்டால் நாம் அவர்களிடம் சென்று எச்சரிக்கிறோம். அவரும் நன்றி சொல்லிவிட்டு செல்கிறார்.ஆனால் அதே மனிதர் ரோட்டில் குப்பையைப் போட்டுக் கொண்டும், எச்சில் துப்பிக் கொண்டும் போனால், நாம் ஏன் அவர்களிடம் இது தவறு என சொல்லத் தயங்குகிறோம். இந்த மாதிரியான எண்ணங்கள் கூட நம்மிடம் இருந்து கடந்து போக வேண்டும். உள்ளத்தில் தெளிவு வேண்டும்... உண்மை சொல்ல! எண்ணத்தில் ஏற்றம் வேண்டும்... எதையும் ஏற்றுக் கொள்ள!உன்னிடம் வெற்றி பெறுவதற்கு தகுதி இருப்பது பார்த்தாலே தெரிகிறது என்று சிலரைச்சொல்கிறார்கள். நீயெல்லாம் இந்த விஷயத்துக்கு சரியானவன் கிடையாது என்று சிலரை சொல்கிறார்கள்.அது எப்படி பார்த்த உடனே முடிவு செய்கிறார்கள். இதேபோல் மருத்துவர் நோயாளியைப் பார்த்த உடனே இவருக்கு இந்த நோயாகத்தான் இருக்கும் என்று நினைத்து அவராகவே ஒரு சிகிச்சை அளித்தால் நோயாளியின் நிலை என்ன ஆகும். இந்த மாதிரியான எண்ணங்களும் நம்மிடம் இருந்து கடந்து போக வேண்டும்.தன்னம்பிக்கை வேண்டும்ஜெயிப்பதற்கு தகுதியை விட தன்னம்பிக்கை தான் முக்கியம். ஓடுவதற்கு கால்கள் இருந்தால் போதாதா?1958ல் மீர்சிசன் என்ற 28 வயது இளைஞர் நீச்சலடித்தபடியே இங்கிலீஷ் கால்வாயை கடந்தார். முப்பது வருடங்களுக்கு பிறகு இச்சாதனையும் கடந்து போனது.ஆம் 12 வயது சிறுவன் அதை முறியடித்தான். அவர்தான் குற்றாலீஸ்வரன். வாழ்க்கை கூட இப்படித் தான் நம்மை விட்டு சட்டென்று கடந்து போய் விடுகிறது. எதைச் செய்வதாய் இருந்தாலும் உடனே செய்து விடுங்கள். ஆனால் அது நல்லதாகமட்டும் இருக்கட்டும். இதைத் தான் நன்றே செய்; அதுவும் இன்றே செய் என்று நீதிக் கருத்துகள் சொல்கின்றன. சோர்வடையச் செய்வதற்கென்றே பல மனிதர்கள் இவ்வுலகில் உண்டு. அவர்களைக் கூட கடந்து போய்விட வேண்டும். பிரியமானவர்களின் இழப்பு என்பது கூட அப்படியானதே.அந்த நிகழ்வுகளிலேயே நிலைத்துஇருக்காமல், அடுத்தகட்ட நகர்தலை நோக்கி பயணிக்க வேண்டும்.வாழ்க்கையில் கடக்க வேண்டியவற்றில் துரோகம், அவநம்பிக்கை, கூடா நட்பு, புகழ் ஆகியவை முதன்மையானது. வலிமையும், நம்பிக்கையும், மன உறுதியும் கொண்டு வாழ்க்கையை வாழ்வோம் அழகாக...!க.பிரவீன் பாரதிமாணவர்மெப்கோ பொறியியல்கல்லுாரி, சிவகாசி80567 37338

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement