Advertisement

டீ கடை பெஞ்ச்

கஞ்சா விற்பனையை கைவிட மறுக்கும் பெண்கள்!

''சென்னையில, பெரிய அளவுல களையெடுப்பு இருக்கும்னு சொல்றா ஓய்...'' என, நாளிதழை மடித்தபடியே, வாயை திறந்தார் குப்பண்ணா.
''ஏதாவது, கட்சி விவகாரமா பா...'' என, கேட்டார் அன்வர்பாய்.
''ஆமாம்... தி.மு.க.,வுல, மாவட்ட வாரியா, களையெடுப்பு நடந்துட்டு இருக்கோல்லியோ... சென்னை மேற்கு மாவட்டத்துல, மதுரவாயல், தி.நகர், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்குன்னு நாலு தொகுதிகள் இருக்கு ஓய்...
''இலக்கிய அணி, மாணவர் அணி உள்ளிட்ட அணிகளின் செயல்பாடுகளை, தொகுதி வாரியா, சமீபத்துல, மாவட்ட செயலர், ஜெ.அன்பழகன் ஆய்வு பண்ணியிருக்கார்...
''அப்ப, முக்கிய நிர்வாகிகள் பலர், கட்சி வளர்ச்சியில அக்கறை காட்டாம இருக்கறது தெரிஞ்சது... அவாளை மாத்திட்டு, கட்சிக்கு உழைக்க கூடியவாளை பதவிக்கு கொண்டு வரணும்னு, தலைமைகிட்ட அன்பழகன் வலியுறுத்திண்டு இருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''புது, எஸ்.பி.,யை நியமிக்கணும்னு சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''எந்த மாவட்டத்துக்கு வே...'' என, கேட்டார் அண்ணாச்சி.
''திருவண்ணாமலை மாவட்ட, எஸ்.பி.,யா, பொன்னி நியமிக்கப்பட்டு, மூணு வருஷம் முடிஞ்சிடுச்சு... இதனால, அவங்களுக்கு இடமாறுதல் போட்டப்ப, முக்கிய அரசியல் பிரமுகர்கள் உதவியால, அதை ரத்து பண்ணிட்டு, தொடர்ந்து இருக்காங்க பா...
''தீப திருவிழா, பவுர்ணமி கிரிவலம் வர்ற பக்தர்களை கண்காணிக்குறதை தவிர, வேற வேலைகள்ல அக்கறை காட்ட மாட்டேங்கறாங்கன்னு, போலீஸ் அதிகாரிகள் புலம்புறாங்க பா...
''இவங்க, மூணு வருஷத்துல, ஒரு நாள் கூட, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துனதே கிடையாது... சமீபத்துல, ரஷ்ய இளம்பெண் பலாத்கார வழக்குல தான், பத்திரிகையாளர்களை சந்திச்சு விளக்கம் குடுத்தாங்க...
''அதனால, இவங்களை மாத்திட்டு, திறமையான, இளம் அதிகாரியை,
எஸ்.பி.,யா நியமிக்கணும்னு கீழ்மட்ட போலீசாரே சொல்றாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''எத்தனை முறை புடிச்சு, 'உள்ள' போட்டாலும், வெளிய வந்து, அதே தொழிலை திரும்பவும் பண்ணுதாவ வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''போலீஸ் விவகாரம் மாதிரி தெரியுதேங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ஆமா... சென்னை, எண்ணுார் சுனாமி குடியிருப்புல, கஞ்சா விற்பனை களைகட்டுது... குறிப்பா, ரெண்டு பெண்கள், கிலோ கணக்குல கஞ்சாவை வாங்கிட்டு வந்து, பொட்டலம் போட்டு, வித்துட்டு இருக்காவ வே...
''இதுக்காக, இவங்களை பல முறை போலீசார் புடிச்சு, ஜெயில்ல போட்டாவ... ஆனா, வெளியே வந்ததும், பழைய கஞ்சா தொழிலுக்கே திரும்பிடுதாவ வே... இதனால, போலீஸ்காரங்களே அலுத்து போயிட்டாங்கன்னா பாருங்க வே...'' என்றார் அண்ணாச்சி.
''அதுக்காக, கஞ்சா விற்பனையே, 'அலவ்' பண்ணிடறதா... அவாளுக்கு, ஏதாவது கைத்தொழில் கத்து குடுத்து, பொழப்புக்கு வழி பண்ணி குடுக்கலாமே ஓய்...'' என, குப்பண்ணா கூற, நண்பர்கள் ஆமோதித்தனர்.
தெருவில் சென்ற சிறுமியரை பார்த்து, ''செல்வ அழகியும், சுஜியும் இன்னைக்கு சீக்கிரமா ஸ்கூலுக்கு கிளம்பிட்டீய போலிருக்கு...'' என, அண்ணாச்சி கூற, 'ஸ்பெஷல் கிளாஸ் தாத்தா' என கூறிவிட்டு நடையை கட்டினர்.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பரதேசியாத் திரிவதெதனாலே அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே அதைபோல் கஞ்சா விற்று உல்லாசவாழ்வு வாழ்ப்பவர்கள் எப்படி உழைத்து பிழைப்பார்கள் உடம்பு வணங்குமா

  • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

    கஞ்சா வாங்குறவங்களுக்கு கொஞ்சம் தண்டனை தரவேண்டியது. அவங்களுக்கு எங்கேயிருந்து சப்ளை என்று கண்டுபிடித்து அதனை நிறுத்துங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement