Advertisement

உரத்த சிந்தனை

உங்கள் இதயம் என்ன கல்லா?

இயக்குனர் மணிரத்னத்தின், அஞ்சலி என்ற சினிமா படத்தில், மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியாக நடித்த குழந்தையின் பெயர், பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், அந்த சிறுமியின் கேரக்டர், இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் யாருக்கும் மறந்திருக்காது.

அது போல, இயக்குனர் பாலு மகேந்திராவின், மூன்றாம் பிறை படத்தில், மன வளர்ச்சி குன்றிய பெண்ணாக நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பு, அந்த படத்தை பார்த்தவர்களின் மனதை விட்டு இன்னமும் நீங்காமல் உள்ளது.அதற்கு காரணம், மன வளர்ச்சி குன்றியோர் மீதான இரக்கம். இயல்பான மனிதர்களை போல இல்லாமல், வித்தியாசமான தோற்றத்துடன், செயல்பாட்டுடன் இருக்கும் மன வளர்ச்சி குன்றியோர் மீது மனிதர்களுக்கு இரக்கம் வருவது இயல்பே!

ஆனால், சிறுமி என்றும் பாராமல், மன வளர்ச்சி குன்றிய குழந்தை என்றும் கருதாமல், உடல் ஊனமுற்ற பிள்ளை என்று கூட கருதாமல், சென்னை, அயனாவரத்தில், 11 வயது சிறுமியை சீரழித்த கும்பல், மனிதர்களாக இருக்கவே லாயக்கற்றவர்கள்.


அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களின் வயது, 22 முதல், 66 வயது வரை... அட, மானங்கெட்ட ஜென்மங்களா... உங்களுக்கும் உடன் பிறந்த தங்கையர் இருப்பர்; பெற்ற குழந்தை அந்த வயதில் இருப்பாள்; அண்ணன் மகள், தங்கை மகள், அந்த வயதில் இருப்பாள்; உங்கள் மகன் அல்லது மகளுக்கும் அந்த வயதில் மகள், அது தான், பேத்தி இருப்பாளே... உங்களால் எப்படி முடிந்தது... உங்கள் இதயம் என்ன கல்லால் ஆனதா?


அந்தச் சிறுமிக்கு, பல மாதங்களாக இந்த கொடுமை நிகழ்த்தப்பட்டுள்ளது என, கூறப்படுகிறது.
அதுவரை அந்த குழந்தையின் மாற்றத்தை, அவளின் பெற்றோர் எப்படி காணாமல் இருந்தனர்... மனநலமில்லாத, உடல் நலக்குறைபாடுடைய சிறுமியை, எப்படி கவனிக்காமல் விட்டனர் என்ற கேள்வி, சாதாரண மக்களுக்கும் எழுகிறது.

அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்களில் ஒருவருக்கும், பல மாதங்களாக நடந்த கொடூரங்கள் எப்படி தெரியாமல் போனது என்பதும் மற்றொரு முக்கிய கேள்வி. கண்டும் காணாமல் இருந்தனரா என்பது, போலீஸ் விசாரணையில் தான் தெரியும்.இது போன்ற, சிறுமியருக்கு எதிரான கொடூரங்கள் தொடர்பான செய்திகள் அதிகரிக்க அதிகரிக்க, முகம் தெரியாதவர்கள், நம் குழந்தையை அணுகும்​​ போது, அன்பாக கொஞ்சு கின்றனர்; பாசத்தை காட்டுகின்றனர் என்பது போன்ற மலர்ச்சியான எண்ணங்கள், மழுங்கி வருகின்றன.

முன் பின் தெரியாதவர்கள் நம் குழந்தைகளுக்கு உதவ முன் வந்தால் கூட, அவர்களை சந்தேகிக்க வேண்டிய கட்டாயத்தை, இத்தகைய குற்றங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.அறிவியல், பொருளாதாரம், வாழ்க்கை முறை என, திரும்பிய திசைகளில் எல்லாம் வெற்றியை குவித்திருக்கிறோம்; கைகள் நிறைய வருமானத்தை அள்ளியிருக்கிறோம். வானளவு விஸ்வரூபம் எடுத்து என்ன பயன்...​​ நம் இடுப்பளவு வளர்ந்த, சிறு தளிர்களை பாதுகாக்க, பராமரிக்க தவறியிருக்கிறோமே!

எவ்வளவு தான் பணம், செல்வம், அதிகாரம் இருக்கும் குடும்பமாக இருந்தாலும், அந்த வீட்டில், ஓடியபடி வளைய வரும், 10 - 16 வயது சிறுமி தான் மகிழ்ச்சியான சொத்து! அவளின் செல்லமான, அற்புதமான சுட்டித்தனங்களும், சின்ன சின்ன சேஷ்டைகளும், காலம் காலமாக நம் மனதில் நிலைத்து நிற்கக் கூடியவை.அத்தகைய சிறுமியர், ஆண்களின் காம பசிக்கு இரையாவது, எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அட பாவிகளா... உங்களின் செயலால், உலகமே, சென்னை மீதும், தமிழகம் மீதும் காறி துப்புகிறதே!

அந்த எச்சில், உங்களை போன்ற கொடியவர்கள் மீது விழுவது சரி தான்; நல்லவர் மீதும் விழுகிறதே... இத்தனை ஆண்டுகளாக, பாரம்பரியம், ஒழுக்கம், கண்ணியத்திற்கு பெருமை சேர்த்த தமிழகத்திற்கு, பெரும் களங்கத்தை சுமத்தி விட்டீர்களே,

உங்கள் இழி செயலால்!இத்தகைய குற்றங்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான், இப்போதைய அவசர கால தேவை என்பதை ​நாம் உணர வேண்டும்​.கடுமையான சட்டங்களின் மூலம், இத்தகைய கொடியவர்களை தண்டிப்பது தான், தீர்வாக அமையும். இதைத் தவிர,​​ நடைமுறைக்கு சாத்தியமான வேறு எந்த தீர்வுகளையும் யூகிக்கக்கூட முடியவில்லை​.அதே நேரத்தில், இந்த பிரச்னையை மற்றொரு கோணத்திலும் அணுக வேண்டும். நாம் உருவாக்கும் எதிர்கால தலைமுறைகளை, தரமானதாக உருவாக்க வேண்டும்.

இது, காலதாமதமான தீர்வாக தெரிந்தாலும் கூட, கனிகள் நிறைந்த மரங்கள், ஒரே நாளில் தழைத்து ததும்புவதில்லையே... அதனால், நம் குழந்தைகளை பேணி பாதுகாப்பதுடன், அவர்களுக்கு, நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.நம் வீட்டில் வளரும் ஆண் குழந்தைகளுக்கு, பிற பெண் குழந்தைகளுடன் எவ்வாறு பழக வேண்டும்; எதுவெல்லாம் குற்ற நடவடிக்கைகள்; அத்தகைய குற்றங்களில் சிக்கினால், குடும்பம் எவ்வாறு சீரழியும் என்பதை, கொஞ்சம் கொஞ்சமாக, வயது ஏற ஏற, சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பள்ளியிலிருந்து குழந்தைகள் வந்ததும், 'நன்றாக படி, நன்றாக எழுது' என்பது போன்ற இயந்திரத்தனமான வாசகங்களை உதறி, அவர்களோடு ​அமர்ந்து பேசுவதை, தலையாய கடமையாக பின்பற்றியே ஆக வேண்டும். அவர்களுடன் ஆழமாக பேசி, உடல், மன மாற்றங்களை கண்காணிக்கவும் வேண்டும்.

* இதை மேற்கொள்ள... சதா ஒலிக்கும் மொபைல் போன்களை அவசியம் துாக்கி எறியுங்கள்

* மூளை சலவை குற்றத்தை மெல்ல செய்யும், 'டிவி'களின் சீரியல்களையும், கூத்துகளையும் தவிர்த்து, பிள்ளைகளிடம் பேச, நேரம் ஒதுக்குங்கள்

* அவர்களின் உற்சாகத்தை பகிர்ந்து கொள்ள, நேரம் கொடுங்கள்; அழுகையை கொட்டி தீர்க்க, மடி கொடுங்கள்

* அவர்கள் அ​ன்றாடம் கடந்து செல்லும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து​​ கொள்ளுங்கள்

* யாரை, அந்த நாளில் சந்தித்தனர் என்பதை, அன்பு பாராட்டி ​​அறிந்து​​கொள்ளுங்கள்

* நம் குழந்தைகளின் நண்பர்கள் யார், யாரிடம் அவர்கள் பழகுகின்றனர், அவர்களின் குடும்ப, சமூக பின்புலம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

* செய்தி தாள்களில் அன்றாடம் வரும் செய்திகள் குறித்து​, ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன் விவாதியுங்கள்​

* சமூகத்தை எப்படி அணுக வேண்டும் என, அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்

* மிக முக்கியமாக, கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ​​இடத்தையும், அவகாசத்தையும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

எங்கே கோபம் ​​நொறுக்கப்பட்டு, அழுத்தத்திற்கு உள்ளாகிறதோ, அங்கே வன்முறைக்கான
அச்சாரம் உ​ருவாகிறது என்பதை நாம் உணர வேண்டும்;​ அதை நம் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.இவ்விஷயங்களை ஆத்மார்த்தமாக நம் பிள்ளைகளுக்கு வேறு யாரால் உணர்த்த முடியும் என்ற கேள்வி, அனைவர் மனதிலும் எழுந்து கொண்டே இருக்க வேண்டும்.

சம்பாதிக்கத் தான் வேண்டும்... குழந்தைகள், குடும்பம் நிம்மதியாக இல்லாமல், எத்தனை கோடி சம்பாதித்து என்ன பலன்! நாடு முழுதும், சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை அறிந்து, அதற்கேற்ப நாமும், நம் குழந்தைகளை பத்திரமாக பாதுகாக்க, தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டாமா... கொடூரங்களில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டாமா?


குழந்தைகளுக்கு நல்ல தொடுகை எது, முறையற்ற தொடுகை எது என்பதை, குழந்தைகளாக இருந்து சிறுவர் -- சிறுமியராக மாறும் போது, பெற்றோர் கற்று தர வேண்டியது கட்டாயம். இது, காலத்தின் நிர்ப்பந்தம். 'குழந்தைக்கு நிலவை காட்டி, சோறு ஊட்டும் வயது தான் ஆகிறது. அதற்குள், 'அந்த' விஷயத்தை எப்படி சொல்லி தருவது...' என, ஆதங்கப்படும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆணும், பெண்ணும் சேர்வதால் நடைபெறும் இனப்பெருக்கம் குறித்து, 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் பாடம் நடத்துவதற்கு கூச்சம் கொள்பவர்கள் பலர் உள்ளனர். இப்படியான ஓர் சூழலில், பாலியல் கல்விக்கான அவசியத்தை உணர்த்த, விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும். அது ஒன்றே, அச்சம் அகல வழி கோலும்.

பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகளை படிக்கும் போது, நாம் தெரிந்து கொள்ளும் ​​மற்றொரு முக்கியமான விஷயம், பாதிக்கப்படும் குழந்தைகள், தங்கள் பெற்றோர் அல்லது மற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்லாமல் தவிர்த்திருக்கின்றனர்.


இதற்கு ​​பல காரணங்கள் இருக்கலாம். தங்களுக்கு நேர்ந்த அவலத்தை ெபற் றோரிடம் சொல்லாமல், எ​ந்த ​விஷயம்​ ​​குழந்தைகளை தடுக்கிறது என்பதை கண்டறிய வேண்டியது, பெற்றோரின் பொறுப்பு மட்டுமல்ல, கடமையும் தான். ​குழந்தைகளுக்கும், தமக்கும் இடையே இருக்கும் த​​​டையை, பெற்றோரேஉடைத்தெறிய வேண்டும்.​

அதற்கு ஒரே தேவை, குழந்தைகளிடம் தினமும் மனம் விட்டு பேசுவது மட்டும் தான்!எந்த நவீன விஞ்ஞானத்தாலும், மருத்துவத்தாலும் செய்ய முடியாத ஆயுதம், இது ஒன்றே. அது நம்மிடமே இலவசமாக இருக்கிறது, அதை நாம் தான் முறையாக பயன்படுத்த வேண்டும்; பயன்படுத்தி தான் ஆக வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் அல்லது அவர்களின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கச் செல்வது அவ்வளவு சுலபமாக நடப்பது இல்லை. தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து, குழந்தைகள் பெரும்பாலும் வெளியே சொல்வது கிடையாது. தெரிவித்து விட்டால், நான்கு சுவருக்குள் நடந்தது, ஊருக்கே தெரிந்து விடுமே என்ற தயக்கம் ​தா​​​ன் காரணம்.​
தைரியமாக வெளியே வந்து, குற்றத்தை பதிவு செய்யும் பக்குவமும், அவர்களுக்கு எளிதாக சமூக முத்திரை குத்தப்படாத அளவுக்கு, முற்போக்குத் தன்மையும் நம் சமூகத்தில் இன்னும் மலரவில்லை; அதற்கு வெகு காலம் ஆகும் என்பதே நிதர்சனம்.

இது போன்ற குற்றங்களை எல்லாம், எங்கோ, யாருக்கோ நடப்பதாக எண்ணி, புறம் தள்ளி போவது, பொறுப்பற்ற செயல். இது, நம்மை சுற்றி ​தினந்தோறும்​ நடந்து கொண்டிருக்கிறது.
நாளை, ​நம் ஒவ்வொருவரையும் நோக்கி வர இருக்கும்​​​ அபாயம் இது. அதை யார் மூலமாகவோ, எச்சரிக்கையாக, இயற்கை நமக்கு வழங்கி கொண்டுஇருக்கிறது; இதிலிருந்து விழித்தெழ வேண்டும்.

இது போன்ற குற்றங்கள் இனி நடக்கும் ​​போது, நம் பங்கு என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.​அதே நேரத்தில், குழந்தைகள், சிறுமியர் மீதான குற்றங்கள் நடக்காமல் இருக்க,
ஆண்டவனையும் பிரார்த்தனை செய்வோம். அத்தகைய ஈன செயலில் ஈடுபடும் ஆண்களுக்கு, நல்ல புத்தி கொடுக்க வேண்டுவோம்.

இ - மெயில்:

prad.psggmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement