Advertisement

உறக்கம் தரும் உன்னத ஓய்வு

ஒரு காட்டில் இரண்டு பேர் மரம் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஒருவன் பத்து மரங்களை வெட்டியிருந்தான். இன்னொருவன் ஐந்து மரங்கள்தான் வெட்டியிருந்தான். தொடர்ந்து இதே கதைதான் நடந்து கொண்டிருந்தது. குறைவாக வெட்டுகிறவன் அடுத்தவனை அணுகி அவனது வேகத்துக்கான காரணம் கேட்டான்.“நான் கோடாரியைத் தீட்டிக் கொள்வதற்கு நேரம் ஒதுக்குவேன்” என்று பதில் வந்தது. நமக்கு ஓய்வும், உறக்கமும்தான் இந்தப் பயனைத் தரும்.இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிற வரம் துாக்கம். பகலெல்லாம் உழைத்துக் களைத்துப் போன நமக்கு மீண்டும் புத்துணர்ச்சியைத் தருவது துாக்கம்.அலாரம், கடிகாரத்தின் துாண்டுதல் இல்லாமல் சுறுசுறுப்பாக எழுந்து கொள்கிறவர் நல்ல விதமாக ஓய்வு பெற்றார் என்றுதான் அர்த்தம். படுக்கையை விட்டு எழுவதே ஒருவருக்குச் சிரமமாக இருக்குமெனில், அவர் உபாதையில் இருக்கிறார். அவருடைய உடம்பில் சக்தி குறைந்துள்ளது என்றுதான் கொள்ள வேண்டும்.உறக்க நேரத்தில் முதல் இரண்டு மணி நேரத் துாக்கந்தான் ஆழ்ந்ததாக இருக்கும். அது தசைகளை இளைப்பாற்றும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். படுக்கைக்குப் போகுமுன் சுடுநீரில் குளித்தால், உறக்கம் எளிதாக அமையும். சுடுநீர்க் குளியல் ரத்த ஓட்டத்தை இயல்பாக்கும்; சாந்தமுறச் செய்யும். குளிக்கும்போது சருமத்தைத் தேய்ப்பதற்குப் பதில் லேசாகத் தட்டலாம். உறங்குகிற இடத்தில் வெளிச்சம் இருக்கக் கூடாது. நிசப்தமாக இருக்க வேண்டும். படுக்கப்போகுமுன் இளஞ்சூடாகப் பால் அருந்தலாம்.உறக்கத்தின் தரம்நீங்கள் எவ்வளவு நேரம் படுக்கையில் இருந்தீர்கள் என்பது முக்கியம் அல்ல. உங்களுடைய உறக்கத்தின் தரம்தான் முக்கியம். இதற்கு உடற்பயிற்சி உதவியாக இருக்கும். மக்களின் உறக்க நேரம் ஆளுக்கு ஆள் வேறுபடும். தாமஸ் ஆல்வா எடிசன் இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே உறங்குவாராம்.முன்னாள் பிரதமர் நேருவுக்கு, அவருடைய உதவியாளர் ஏழுமணி நேரம் கொடுப்பாராம். நேரு, அதில் இரண்டு மணிநேரம் எடுத்துக் கொண்டு படிப்பார். பின்பு மனதை ஒருநிலைப்படுத்தி ஐந்து மணிநேரம் ஆழ்ந்து துாங்குவாராம்.நீங்கள் உறங்கும்போது படுக்கை உங்களுடைய உடம்புக்கு எதிரான அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடாது. போம் மெத்தை, தலையணை உபயோகிக்கலாம். உங்களுடைய படுக்கை சுமார் 39 அங்குல அகலம் (நன்கு புரண்டு படுக்கிற அளவு) இருக்க வேண்டும். ரொம்பவும் மென்மையான உங்களுடைய உடம்பே புதைந்து போகிற மாதிரி இருக்கக்கூடாது. ஆக, நல்ல படுக்கை நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். தரையில் பாய்விரித்துப் படுப்பது உத்தமம்.நேர வேறுபாடுஒரே மாதிரி வேலை செய்கிறவர்களுக்குள்ளும், உறக்க நேர வேறுபாடு இருக்கும். பலர் தங்களுக்குத் தேவைப்படும் அளவைவிடக் கூடுதல் நேரம் உறங்குகிறார்கள். உங்களுக்கு எவ்வளவு நேர உறக்கம் தேவைப்படும் என்பது உங்களுடைய உடல்வாகு, வேலை மற்றும் மனச்சார்பைப் பொறுத்தது.தேவைக்கு மேல் உறங்குவது வீண். அளவுக்கு மீறி துாங்குவதால் அழகான வாழ்க்கையில் கணிசமான அளவு தொலைந்து போகிறது.பகல் நேர துாக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. தேவைப்படுமானால் ஒரு குட்டித் துாக்கம் போடலாம். அதுவும் நமது வேலை நேரத்தை விழுங்கிவிடக் கூடாது. துாங்கி எழுந்ததும் மீண்டும் கொஞ்சம் துாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் துரத்திவிடுங்கள். அதிகம் துாங்குவது தேவையினால் அல்ல; வழக்கத்தினால்தான்.இரவில் நன்கு துாங்கிவிட்டால் காலையில் குறைவான நேரத்தில் கூடுதலான காரியங்களைப் பார்க்க முடியும். சுறுசுறுப்பாக இயங்க முடியும்.சரியான துாக்கம் இல்லாவிட்டால், எதற்கெடுத்தாலும் கோபம் வரும். சிடுசிடுக்க வைக்கும். வேலையில் குளறுபடி ஏற்படும். முடிவெடுப்பதில் குழப்பம் வரும். பணியிடங்களில் அடிக்கடி கொட்டாவி வரும். ஏதோ பாதிக்கப்பட்ட மனிதர்போல உலவுவீர்கள். நல்ல துாக்கம் இல்லாது போனால் உங்களுடைய படைப்பாற்றல் குன்றும். இரவு படுக்கப் போகிற நொடி வரை வேலை பார்க்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் முன்பாகவே உங்களுடைய வேலைகளில் இருந்து விடுபட்டுவிட வேண்டும்.குறைந்த நேரத் துாக்கம்வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள விரும்புகிறவர் துாக்கத்தில் நேரத்தைத் தொலைக்கக் கூடாது. குறைவான நேரம் துாங்கி எழுந்தாலும் நன்றாகவே உணர்வீர்கள்; அதிகமாகவே சாதிப்பீர்கள். வாரத்தில் நீங்கள் மிச்சம் பிடிக்கிற நேரம், உங்களுடைய சக்தியை அதிகரிக்கும். வருடத்தில் கணக்கிட்டுப் பார்க்கிறபோது உங்களிடம் கணிசமான நேரம் கையிருப்பாக இருந்திருக்கும்.டேல் ஹான்ஸன்பர்க் ஒரு பத்திரிகை வெளியீட்டாளர். அவர் தன் உறக்கத்தைத் திட்டமிட்டுக் கொண்டவர். தனக்கு உண்மையில் தேவைப்படும் உறக்க நேரத்தில் அரைமணி முன்னதாகவே எழுந்து கொண்டு விடுவார். அந்த நேரத்தைச் சைக்கிள் சவாரிக்குப் பயன்படுத்துவார். அது அவருடைய மன உளைச்சலைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவியது.'உறக்க நிர்வாகம்' என்பது உண்மையில் உறக்கம் பற்றியது அல்ல; வாழ்க்கை பற்றியது ஆகும்.படுக்கைக்குச் செல்வதற்கு முன்னால், ஏகமாக வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டுப் போகாதீர்கள். லைட்டான டின்னர் முக்கியம். சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு உறங்கப் போகவும். அதற்குமுன் மீண்டும் பசி எடுத்தால் பால் அல்லது பழம் சாப்பிடவும்.பெட்ரூமில் இரைச்சல் சப்தம் இருக்கக் கூடாது. 'கடாமுடா' என்ற சப்தம் போடும் மின்விசிறியை உடனே சரி செய்யவும்.சரியான வெப்பநிலையில் பெட்ரூம் இருப்பது அவசியம். ஆபீஸ் வேலையை நினைத்துக் கொண்டே படுக்கைக்குச் செல்லக்கூடாது. வீட்டுக்குள் நுழையும்போது செருப்பை வெளியே விட்டுவிடுவதைப்போல கவலைகளையும் விட்டுவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில்தான் உறங்கச் செல்ல வேண்டும். கிரிக்கெட், சினிமா, சீரியல் என நேரத்தை மாற்றிக் கொண்டே இருக்கக்கூடாது.யோக நித்திரைஉறக்கத்தில் ஓர் உன்னதமான வகைதான் யோக நித்ரா. ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் மனதால் கட்டளை இட்டு ஓய்வளிப்பது. இதை எல்லோரும் செய்யலாம். எளிதானது.ஒரு பெட்ஷீட்டையோ அல்லது கோரப்பாயையோ தரையில் விரித்துக்கொள்ள வேண்டும். அதில் மல்லாக்கப் படுத்துக்கொள்ள வேண்டும். கைகளை கொஞ்சம் இடைவெளிவிட்டு பரப்பிக்கொள்ள வேண்டும். கால்கள் இரண்டையும் அகற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது மனதால் ஒவ்வொரு உறுப்புக்கும் கட்டளையிட வேண்டும். முதலில் காலின் பெருவிரல் நுனியிலிருந்து தொடங்க வேண்டும்.என் கால் கட்டைவிரல் ஓய்வு எடுக்கிறது என்று சில முறை மனதுக்குள் கட்டளையிட வேண்டும். அவசரம் கூடாது. நிதானமாகச் செய்ய வேண்டும்.பிறகு காலின் பிற விரல்கள். அவைகள் ஓய்வெடுக்கின்றன… சில முறைகள் சொல்ல வேண்டும். பிறகு பாதங்கள். பிறகு பாதத்தின் மேல்புறம். அப்புறம் குதிங்கால், அப்புறம் கணுக்கால், பிறகு காலின் ஆடுசதை, அப்புறம் முழங்கால்கள். ஒவ்வொரு உறுப்புகளும் ஓய்வெடுக்கின்றன என்று சொல்லிக்கொண்டே வரவேண்டும். இப்படி சொல்லிச் சொல்லியே முகம் வரை வரவேண்டும். பிறகு வாய், மூக்கு, கண்கள், நெற்றி, உச்சந்தலை. இதற்குள் ஏறக்குறைய அரைமணி நேரம் ஆகும். அதற்குள் துாக்கம் வரலாம்.இந்த யோகநித்ராவை எல்லோரும் செய்து பயனடையுங்கள். வீட்டில்தான்; அலுவலகத்தில் அல்ல!மாணவர்களுக்குமாணவர்களின் துாக்கத்தில் வித்தியாசமான அணுகுமுறை வேண்டும். இரவு வெகுநேரம் வரை கண்விழித்துப் படிப்பதைத் தவிர்க்க வேண்டும். பகலெல்லாம் மூளைக்குள் அனுப்பிய தகவல்கள் குப்பையாகக் குவிந்து கிடக்கும். அதோடு இன்னும் படித்தால் மூளை திணறிப் போகும். இரவில் துாக்கம் வர மாலையில் நன்றாக விளையாட வேண்டும். பாடம் படிப்பதற்கு சரியான நேரம் எதுவென்று கல்வியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுதான் காலை 4:00 மணி - 6:00 மணிவரை. இரவு துாக்கத்தின் பயனால் மூளை துடைத்துவைக்கப்பட்ட சிலேட் போல இருக்கும். நாம் பதிவு செய்ய வேண்டியதைப் பதிவு செய்யலாம்.காலை 4:00 மணிக்கு எப்படி எழுந்திருப்பது என்று கேட்கும் மாணவர்களுக்கு இதுதான் பதில். பழக்கந்தான் நம்மை ஆட்படுத்துகிறது. 4:00 மணிக்கு அலாரம் வையுங்கள். எழுந்து முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள். படிக்கக்கூட வேண்டாம். துாக்கம் வராமல் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்தால் பழக்கமாகிவிடும். அப்போது நீங்கள் துாங்க நினைத்தாலும் மூளை துாங்கவிடாது. விரும்பியதை ஆழ்ந்து படிக்கலாம். மனதில் பதியும். பிறகு வாழ்நாளெல்லாம் இது உங்களுக்கு உதவியாக இருக்கும். அதிகாலையின் அற்புதம் அப்படி; அதை அனுபவியுங்கள்!- முனைவர் இளசை சுந்தரம்வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்மதுரை. 98430 62817

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement