Advertisement

வளரட்டும் விவாதம்...

பிரிட்டிஷ் அரசு பின்பற்றிய, ஓரினச் சேர்க்கை வாழ்க்கை குறித்த அணுகுமுறையில், மாற்றம் வரப்போகிறது. நமது இந்திய தண்டனை சட்டம், 377வது பிரிவு, ஓரினச் சேர்க்கை என்ற உறவை, கிரிமினல் குற்றமாக கருதுவது நீங்கும்.
இந்த உறவு பற்றி, ஏராளமான கருத்துக்கள் தற்போது அலசப்பட்டு வருவது நல்லது. இது, தேவையா அல்லது வேண்டாமா என்பதை, பல்வேறு மதப்பிரிவுகள் அல்லது சில கோட்பாடுகளை பின்பற்றுவோர், தாங்களாகவே முடிவு செய்ய வேண்டும்.முன், 'எய்ட்ஸ்' நோய் பாதிப்பு கருத்து வெளி வந்ததும், நோய் எதிர்ப்பு சக்தி அற்ற பலரும், இந்த நோய் தாக்குவதாக அஞ்சிய காலம் உண்டு. ஆனால், இப்போது உடலுறவு அல்லது எச்சில் போன்றவற்றால் மட்டும் பரவும் என்ற பின், பயம் குறைந்து மக்கள் வாழ்கின்றனர்.
மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட, பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் உடைய நாட்டில், மிகக் குறைந்த நபர்கள் பின்பற்றும் உறவு குறித்து, சுப்ரீம் கோர்ட் வரையறைக்குள் வந்தது நல்லது. திடீரென இரு ஆண்டுகளாக பாலியல் தொடர்பு செய்திகள் ஆயிரக்கணக்கில் வருவதற்கு, 'மிக மோசமான நிர்பயா சம்பவம்' அரங்கேறியது காரணமாகும்.
மனது ஒருமித்து இருவர் இடையே தோன்றும் உறவு, அல்லது ஓரினச் சேர்க்கை, மற்ற பொருந்தாத உறவுகள், காலம் காலமாக உள்ளவை.இப்போது, இந்த ரக உறவு வைத்திருப்பவர்கள் கிரிமினல் சட்டப்பிரிவில் இருந்து தப்பி, இயல்பாக வாழ வழி வந்து விடும். எப்படி இரு மனமொத்தவர் வாழ்வு அல்லது பணத்திற்காக உறவு அல்லது சினிமா போன்ற தொழிலில், நடிகர், நடிகையர் ஆகிய இருபாலரும் விட்டுக் கொடுத்து உறவை ஏற்பதும், பின் கால சூழ்நிலையால் மாறுவதும் இயல்பானதே.
இவ்வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிக் காலத்தில், முடிவைக் காணப் போகிறது. இந்த அமர்வில் உள்ள பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா, 'தன்பால் உறவு முரண்பாடானது அல்ல; இது வேறுபட்ட உறவு' என கூறியிருக்கிறார். மேலும், 'ஓரினச் சேர்க்கை என்பது மிருக உலகில், 150 பிரிவுகளில் உள்ளது' என்ற தகவலையும் தந்திருக்கிறார்.
இவ்வழக்கில், கிறிஸ்தவ அமைப்பின் ஆஜரான மனோஜ் ஜார்ஜ், '377 சட்டம் தொடர வலியுறுத்தி' உள்ளார். முஸ்லிம் விஷயத்தில், அவர்களது தனிப்பட்ட மதச்சட்டம் அனுமதிப்பதைத் தவிர வேறு ஏதும் வாழ்வுக்கு ஏற்றதல்ல. இவை எல்லாம் சுட்டிக்காட்டப்பட வேண்டிய காலகட்டம் இது.
மத்திய அரசு, இந்த வழக்கில், நீதிபதிகள் எடுக்கும் முடிவை ஏற்பதாக கூறி விட்டது. ஆனால், மத சம்பிரதாயங்களை, அதன் நம்பிக்கைகளில் தலையிடாதவாறு, குற்றவியல் சட்ட நடைமுறைகளிலும், தண்டனைச் சட்டத்தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்களை மட்டும் இவ்விஷயத்தில் அணுக, நீதிபதிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
அதேபோல, தலைமை நீதிபதி மிஸ்ராவும், 'திருமணம், மணவாழ்வில் ஏற்படும் சொத்து பிரச்னைகள்' தனியாக ஆராயப்பட வேண்டியது என, தெளிவாக்கி விட்டார்.தவிரவும், தம்பி, தங்கை இடையே சகோதரர் திருமணம், வாரிசு தேர்வு மற்ற சில இயற்கையான சிவில் நடைமுறைகள் இந்த நாட்டில் பின்பற்றப்படுகின்றன. அதில் தலையிடாமல், இத்தீர்ப்பு அமைய, மத்திய அரசு கோர்ட்டில் வலியுறுத்தியிருக்கிறது.
'ஓரினச் சேர்க்கையை நம்புவோர், சுதந்திரமாக கடற்கரையில் உலாவலாம்; இது ஒன்றும் பாலியல் குற்றம் அல்ல' என்பதும், இவ்வழக்கில் வைக்கப்பட்ட கருத்துகளில் ஒன்று. அத்துடன் தகாத உறவு, தக்க உறவு என்ற இரு அம்சங்களில், எது தேவை என்பதை இருபாலரும் உணருவதை, இவ்வழக்கு பெரும் விவாதத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தலாம்.
அதே சமயம், பாலியல் புகார் வழக்காக மாறும் போது, ஆண்கள் மட்டும் அதிக கிரிமினல் சட்ட வளையத்தில் வருவது போல, பெண்களும் வரும் முடிவு ஏற்படலாம். அது கடைசியில், 'திருமணம் என்ற சிறப்பான பந்தம், அதனால், சமூக வாழ்வில் செம்மையான போக்கு' என்ற கருத்தை மாற்றி விடலாம் என்ற அச்சமும் உள்ளது.
எனவே, கலாசாரம், ஆன்மிக உணர்வுகள், தனி மனித ரகசியங்களை பேணும் வரைமுறைகள் ஆகியவற்றுடன் இணைந்து, மக்களிடையே விவாதங்கள் அமைந்தால், அது சிறப்பான பயனைத் தரும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement