Advertisement

கேவலமாகி விட்டது காவல் துறை!

சென்னையில் சில தினங்களுக்கு முன், இரவு ரோந்து சென்ற போலீஸ்காரரை சூழ்ந்த ரவுடிகள், அவரை சரமாரியாக தாக்கியதுடன், தலையில் மட்டும், 16 முறை வெட்டியுள்ளனர். இந்த தாக்குதல், கஞ்சா கடத்தல், 'குட்கா' கடத்தல், செம்மரம் கடத்தல் அல்லது ஆள் கடத்தலின் போது நடக்கவில்லை. நகரின் முக்கிய பகுதியில், தெருவில் வருவோர், போவோரை மிரட்டிய ரவுடி கும்பலை தடுக்க முயன்ற போது நடந்துள்ளது. போலீஸ்காரரை வெட்டுகிறோமே என்ற பயம், எந்த ஒரு ரவுடிக்கும் ஏற்படவில்லை. ஏனெனில், ஏற்கனவே பல வெட்டு, குத்துகளை அவர்கள் சந்தித்தவர்களாகவும், பல பிரச்னைகளை காவல் நிலையத்தில் சாதித்தவர்களாகவும் இருந்ததால், பழகி விட்டிருக்கிறது; காவலர்கள் மீதான பயம் போய் விட்டது.கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடியிசம் பெருகுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் சொல்லப்படும் காரணம், 'போலீஸ் கிட்ட போனா நியாயம் கிடைக்காது; கோர்ட்டுக்குப் போனா நீதி கிடைக்காது... அப்படியே கிடைத்தாலும் அஞ்சு பத்து வருஷம் ஆகும்' என்ற கருத்தும் ஒன்று.இந்த மன நிலையில் இருப்பவர்கள், படித்தவர்களாக இருந்தாலும், படிக்காதவர்களாக இருந்தாலும், பிரச்னையை உடனே முடிக்க, ரவுடி மற்றும் தாதாக்களிடம் செல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு யார் காரணம்...போட்டிக்குத் தயாராகும் பந்தயக் குதிரைகளுக்கு ஒருவர் தண்ணீர் காட்டுவார்; மற்றவர் தடவி விடுவார்... இப்படித்தான், ரவுடியிசம் என்ற குதிரைக்கு அரசியல்வாதிகள் தண்ணீர் காட்டுகின்றனர்; காவல் துறையினர் தடவி விடுகின்றனர். வழக்கறிஞர்களும் தங்கள் பங்குக்கு, 'வாய்தா' வாங்கி கொடுத்து, ரவுடிகளை தட்டிக் கொடுக்கின்றனர்.காவல் துறை கட்டமைப்புக்காக, அரசு பல கோடி ரூபாயை கொட்டு கிறது; நவீன வாகனங்களை வாங்கித் தருகிறது; அதிகாரத்தை அள்ளிக்கொடுக்கிறது. ஆனால், பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இருக்க வேண்டிய இணக்கமும், நெருக்கமும் துாரமாகவே இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால், காவல் நிலையங்களில் ரவுடிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், பெரும்புள்ளி களுக்கும் இருக்கும் மரியாதை, பொதுமக்களுக்கு இருப்பதில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்கு முன்பும், பிறகும், ஒரு பெரும் புள்ளியின் உதவியைத் தேட வேண்டியுள்ளது.போலீசார் மீதான மதிப்பு, மரியாதை குறைவதற்கு, தமிழ் திரைப்படங்களும் ஒரு காரணம். பல ஆண்டுகளாகவே, தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில், 100க்கு, 90 விழுக்காடு, காவல் துறை களங்கப்படுத்தப்படுகிறது. ஏட்டு முதல், 'ஏசி' வரை, 'காமெடியன்'களாகவும், வில்லன்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். திரைப்படம் ஒன்றின் சிரிப்பு காட்சியில், காவல் துறை உயரதிகாரியிடம் பிச்சைக்காரர், 'அய்யா... நான் பிச்சை எடுத்த காசை, இந்த ஏட்டு பிடுங்கிட்டாரு' என்பார். உடனே, அந்த அதிகாரி, 'உனக்கு வெட்கமாக இல்லை... பிச்சைக்காரனிடம் காசு பிடுங்கி, பிரியாணி சாப்பிடலாமா...' என, அந்த போலீஸ்காரரை கடிந்து கொள்வார். அதற்கு அந்த ஏட்டு, 'சார்... நேத்து நைட்டு நீங்க சாப்பிட்ட பிரியாணி, அந்த காசில தான் வாங்கினது' என்பார். காவல் துறையினரை இதை விட மோசமாக, திரைப்படங்களில் சித்தரிக்க முடியாது. அது போல, வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிந்திருக்கும் போக்குவரத்து காவலர்கள், அஞ்சுக்கும், பத்துக்கும் கையேந்தும் காட்சிகள், பல திரைப்படங்களில் இடம்பெற்று வருகின்றன. இவையெல்லாம் சினிமா காட்சிகளாக இருந்தாலும், ஆங்காங்கே அத்தகைய காவலர்களும் இருக்கவே செய்கின்றனர். அதனால் தான், சினிமா படங்களில் வரும் அவதுாறு காட்சிகளை போலீசார் கண்டுகொள்வதில்லை. இது போல, வேறு எந்த அரசு துறையினரையோ அல்லது ஏதாவது ஒரு ஜாதியினரையோ அவதுாறாக சினிமாவில் காட்ட முடியுமா? 'போலீஸ்னா நாங்க பயந்துடுவோமா...' என, சிறார் கூட, போலீசாரை மடக்கும் அளவுக்கு, காவல் துறையினரின் போக்கு உள்ளது. 'கோர்ட்டுக்கு போறீயா... போ... எனக்கும் போகத் தெரியும்' என்ற ரீதியில், போலீசாரை சாதாரணமானவர்களும் உருட்டும், மிரட்டும் காட்சிகள், 'வாட்ஸ் ஆப்'களில், 'வீடியோ' காட்சிகளாக வந்த வண்ணமாக உள்ளன.அதற்கு முக்கிய காரணம், போலீசாரின் கையூட்டு பழக்கம் தான். ஐந்து ரூபாயை கூட, சில போலீசார் லஞ்சமாக பெறுகின்றனர் என்ற அசிங்கமான தகவலும் உலா வருகிறது.போலீசார் என்றால், எளிதில் கண்டு கொள்ளும் வகையிலான உடல் அமைப்பு, தோரணை, பேச்சு, செயல், நடத்தை போன்றவை, தமிழக போலீசாரிடமிருந்து விடை பெற்று, 30 - 40 ஆண்டுகள் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். மது பானம் அருந்தி விட்டு, 'சைடு டிஷ்' ஆக, சுண்டல் வாங்கக்கூட காசில்லாமல் வீட்டுக்கு திரும்பும், 'குடி' மகன்களின் வாயை ஊதச்சொல்வது தான், பெரும்பாலான போலீசாரின் இரவு நேரப் பணியாக இருக்கிறது. இந்த அசிங்கம் பிடித்த வேலையை, இப்படித் தான் செய்ய வேண்டுமா... நாற்றம் பிடித்த வாயில் இருந்து வரும் கெட்ட வாடையை, மூக்கால் முகர்ந்து பார்க்கும் ஈனத் தொழிலில், 99 சதவீத போலீசார் ஈடுபடுகின்றனர். ஏன் இந்த இழிநிலை... கருவிகளை பயன்படுத்தலாமே!காலம் காலமாக காக்கிச்சட்டை கறை தொடர காரணம், போலீசார் மீதான களங்கத்தை துடைக்க, அத்துறை உயர் அதிகாரிகளான, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் முன் வருவதில்லை என்பதும் தான். வந்தாலும், அவர்களின் பேச்சை, சாதாரண போலீசார் கேட்பதில்லை. 'படிச்ச திமிரை காட்டுகிறான்' என கூறி, அதிகாரிகளின் அறிவுரையை புறம் தள்ளுகின்றனர். நாளிதழ்களை திறந்தால், 'பிரபல ரவுடிக்கு வலைவீச்சு; பிரபல ரவுடி சுட்டுக் கொலை; பிரபல ரவுடி தலைமறைவு' என்பன போன்ற, 'பிரபலமான' செய்திகள் வருகின்றன. ரவுடிகளே, பிரபலம் ஆகும் போது, அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய போலீஸ் அதிகாரிகள், ஏன் பிரபலம் ஆகாமல் உள்ளனர்?தெருவில் ஏதாவது பிரச்னை என்றால், அருகில் நிற்கும் ஒருவர், 'என்னப்பா இங்க பிரச்னை... வீட்டுக்கு போங்கப்பா...' என, சமரசம் செய்ய முயற்சிப்பார். ஆனால், அதை கண்டும், காணாமல், சாலையின் ஓரங்களில் அமர்ந்திருக்கும் இளம் காவலர்கள், அதற்கும், நமக்கும் சம்பந்தம் இல்லை... என்பது போல, கூட்டமாக அமர்ந்த படி, மொபைல் போனை நோண்டிக் கொண்டிருப்பர்.கொலை செய்து வந்தால் தான், போலீஸ் தலையீடு, எப்.ஐ.ஆர்., என்ற ரீதியில் போலீசாரும், காவல் நிலையங்களும் இருக்கின்றன. இந்த நிலை மாறி, கண்காணிப்பு நிலையங்களாக, உளவு கேந்திரங்களாக, உண்மையான ஊழியர்களின் கூடாரங்களாக காவல் நிலையங்கள் மாற வேண்டும்.எந்தெந்த இடங்களில் குற்றம் நிகழும் என்பதை அறிந்து, சந்து, பொந்துகளில் கூட, ரோந்து செல்ல வேண்டும். காவல் துறையும், நீதித்துறையும் சமூக பாதுகாப்பின் இரு கண்கள். இருப்பினும், இத்துறைகளில் நேர்மையாளர்கள் வெகு குறைவாகவே இருக்கின்றனர். குற்றங்கள் பெருகுவதைப் பார்க்கும் போது, காவலர்கள் பயிற்சி முறையை மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது.ஆண்டான் - அடிமை உறவு போல தான், காவல் துறையில் உயர் அதிகாரி களுக்கும், கீழ் நிலை அதிகாரிகளுக்கும், அதிகாரத் தோரணைகள் இருக்கின்றன; இந்நிலை மாற வேண்டும்.மேலும், காவல் துறையில், இளம் போலீசார் சிலர், தங்களுக்கு மன அழுத்தம், வேலைப்பளு இருப்பதாக கூறி, தற்கொலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இது, கவலை அளிக்கிறது. சியாசின் போன்ற கடும் குளிர் பிரதேசங்களில், இரவு - பகலாக, நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு அல்லவா, மன அழுத்தம் வர வேண்டும்...காவல் துறை இருந்தும், நாட்டில் இவ்வளவு ரவுடிகள், திருட்டுகள், வழிப்பறி கொள்ளைகள், நில அபகரிப்பு மற்றும் ஆள் கடத்தல் குற்றங்களை கண்டு அதிர்ச்சியுறும் பொதுமக்களுக்கு தான், மன அழுத்தம் வர வேண்டும்! எனவே, காவல் துறை இனியாவது, புதிய மாற்றத்திற்கு வர வேண்டும். இதற்கு காவல் துறையில் ஓய்வுபெற்ற, நல்ல, நேர்மையான அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களை வைத்து, ஆய்வுகள் மேற்கொண்டு, துறையை மேம்படுத்தலாம்.காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், காவல் துறைக்கு சங்கங்களை கூட உருவாக்கலாம். குற்றங்கள் நடந்த பின், குற்றவாளிக்கு ஆதரவாக, 'வட்டம், ஒன்றியம், மாவட்டம்' வந்தாலும், மந்திரியே வந்தாலும், பாரபட்சம் பார்க்காமல், காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது, ரவுடியிசம், தாதாயிசம், கேங்கிசம் போன்ற, 'இசங்கள்' அங்குசத்திற்கு அஞ்சும் யானை போல, அடங்கி ஒடுங்கி விடும்.காவல் துறையில், வாய்மையும், நேர்மையும் கொண்ட பல உயர் அதிகாரிகள் இருந்தனர்; இருக்கின்றனர். இருப்பினும், ஆட்சி அதிகார விலங்கை, காவல் துறைக்குத் தான் முதலில் போடுகின்றனர், அரசியல் வாதிகள். சில அதிகாரிகள் நெஞ்சை நிமிர்த்தி, விலங்கை உடைக்கின்றனர்; பலர் நெஞ்சுக்குள்ளே உடைந்து போகின்றனர்.'ஒரு பெண் தனியாக பயமின்றி, இரவு, 12:00 மணிக்கு சாலையில் நடந்து செல்வது தான் உண்மையான சுதந்திரம்' என்றார், மஹாத்மா! ஆனால், ஒரு ஆண் காவலர் தனியாக, இரவு, 12:00 மணிக்கு ரோந்து செல்ல முடியுமா என, எழுந்துள்ள கேள்விக்குறி, முறிக்கப்பட வேண்டும்.ஒட்டுமொத்த காவல் துறையையும் குறை கூறுவது நம் நோக்கமல்ல... காவல் துறையின் மாண்பு பெருக வேண்டும்; மாசு மறைய வேண்டும் என்பது தான் நோக்கம். கையூட்டு வாங்காத, கம்பீரம் குறையாத பல அதிகாரிகள், காவல் துறையில் இருக்கத் தான் செய்கின்றனர். அவர்கள் நல்லவர்களாக இருந்து என்ன பயன்... அதிகாரத்தில் இருப்பவர்கள், அநியாயங்களை எதிர்க்கும் வல்லவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நன்மை கிடைக்கும்.காவல் துறைக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்... உங்கள் கையில் உள்ள அதிகாரம், மக்கள் கொடுத்தது. அந்த அதிகாரம், குற்றவாளி களுக்கு ஆதரவாகவும், குற்றமற்றவர்களுக்கு அச்சம் தருவதாகவும் இருக்கக் கூடாது.

சிந்து பாஸ்கர்
பத்திரிகையாளர்
இ - மெயில்: sindhubaskarwritergmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  போலீஸ் மந்திரி தான் முதல் மந்திரி. முதல் மந்திரி தான் போலீஸ் மந்திரி. மந்திரிக்கு தெரியுமே லஞ்சம் எவ்வளவு, அசிங்கம் எவ்வளவு, அக்கிரமம் எவ்வளவு நடக்குதுன்னு.

 • LAX - Trichy,இந்தியா

  'காவலர்கள் பயிற்சி முறையை மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது' - தேர்வு முறையையும் கட்டாயம் மாற்ற வேண்டும்.. ஏனெனில் திருட்டு/கொள்ளை/வழிப்பறி போன்ற குற்ற செயல்களிலிலும் காவல்துறையைச் சேர்ந்த சிலர் ஈடுபடுவதை இன்றைக்கு பார்க்க முடிகிறது.. வெறும் கல்வி, உடற்க்கூறு தகுதி, எழுத்துத் தேர்வு என்றில்லாமல் காவல்துறைக்கு விண்ணப்பித்தவர்களின் குடும்பப் பின்னணி மற்றும் அவர்களது செயல்பாடுகள் பற்றி விசாரித்து, ஆராய்ந்து அறிந்து பின்னர்தான் அவர்களைத் தேர்வு செய்யும் முடிவை எடுக்க வேண்டும்.. இன்று தனியார் நிறுவனங்களே அதுபோன்ற முறைகளை பின்பற்றி தங்களது ஊழியர்களைத் தேர்வு செய்யும் நிலை வந்துவிட்டது..

 • Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  நன்றாக பதிவு செய்ய பட்டுள்ளது. இதற்க்கு முக்கிய காரணம் தொடர்ந்து வந்த அரசாங்கங்களே. போலீஸ் கையை கட்டிபோட்டு விட்டார்கள். அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் தான் நிலைமை மாறும்.

 • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  வெளிநாட்டில் வசிக்கும் எல்லோருக்கும் சென்னை என்றால் ரவுடிகள் ராஜ்ஜியம் என்று பெயர்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இதுக்கு உங்களை பிடிச்சி லாடம் காட்டுவாங்களே தவிர்த்து, ஏவல்துறை தனது தப்பை திருத்திக்கொள்ளாது..

 • Aravintraj Lalitha - Srivilliputtur,இந்தியா

  நான் ஒரு முறை இரவு வீடு திரும்பிய போது காவலர் ஒருவர் என்னை குடித்து விட்டு வண்டி ஓட்டுவதாக சந்தேக பட்டு அவரது மூஞ்சியில் என்னை ஊதச் சொன்னார் . என்னால் அது முடியவில்லை . சார் நான் குடிக்கவில்லை குடிப்பழக்கம் எனக்கு கிடையாது என்றேன் . அவரோ ஊதுடா என்றால் ஊதுடா என என்னை மிரட்ட வேறு வழியின்றி அவர் முகத்தில் ஊதினேன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement