Advertisement

பார்லிமென்டில் அ.தி.மு.க., நிலை என்ன?

பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், கூச்சலும், குழப்பமுமாக, எந்த ஒரு ஆக்கப்பூர்வ வேலையும் நடக்காமல் முடிந்து போனது. மோடி அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட, தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல், காவிரி விவகாரத்தில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பதில் கோஷமிட, பார்லிமென்ட் பல நாட்கள் முடங்கியது. இந்நிலையில், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், 18ல் துவங்க உள்ளது. 'பா.ஜ., அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்' என, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான, சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கடந்த முறை நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர விடாமல், பா.ஜ., அரசைக் காப்பாற்றிய, அ.தி.மு.க., இந்த முறையும் அதை பின்பற்றுமா?
இப்போது, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மழை இருப்பதால் அணைகள் நிரம்பி வருகின்றன; அதனால், காவிரி பிரச்னை இப்போதைக்கு இல்லை. அப்படியிருக்க, எதை வைத்து பார்லி.,யை, அ.தி.மு.க., முடக்க முடியும்? தெலுங்கு தேசம் - எம்.பி.,க்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தால், பார்லிமென்ட் நடவடிக்கைகளை, அ.தி.மு.க., முடக்காது எனச் சொல்லப்படுகிறது. 'காவிரியை வைத்து முடக்கினோம்; இப்போது எதுவுமில்லை; எனவே, அமைதி காப்போம்' என, அ.தி.மு.க., தரப்பில் சொல்லப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அ.தி.மு.க., ஆதரிக்காவிட்டாலும், தங்களுடைய கோபத்தை வெளிக்காட்ட இந்த சந்தர்ப்பத்தை அக்கட்சி பயன்படுத்திக் கொள்ளும் என்ற பேச்சு அடிபடுகிறது.
இதற்கு காரணம், சமீபத்திய, பா.ஜ., தலைவர் அமித் ஷாவின் தமிழக விசிட். 'தமிழக அரசு ஊழல் அரசு' என, அமித் ஷா சொல்லியிருந்தார். இது, பழனிசாமிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். வெளிப்படையாக, பா.ஜ.,விற்கு எதிராக எதுவும் சொல்ல முடியாத நிலை. அதனால் பார்லி.,யில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அமைதியாக இருப்பர் எனச் சொல்லப்படுகிறது.
'பா.ஜ., அரசுக்கு எதிராக செயல்பட்டால் என்ன ஆகும் என்பது, அ.தி.மு.க., தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் நன்றாகத் தெரியும்; எனவே, எதைச் செய்தாலும் அதன் விளைவுகளை நினைத்து பார்த்து செயல்படுவர் என எதிர்பார்க்கிறோம்' என, எச்சரிக்கை விடுக்கின்றனர், பா.ஜ.,வினர்.மம்தாவின் ஆசைமத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வின் சீனியர் தலைவருமான, ராஜ்நாத் சிங் பிறந்த நாள், சமீபத்தில் டில்லியில் கொண்டாடப்பட்டது. முன்பெல்லாம், தலைவர்கள் வந்து வாழ்த்து சொல்வது, மலர் மாலைகள் என ஒரே அமர்க்களமாக இருக்கும். இப்போது அனைத்தும் மாறிவிட்டது. வாழ்த்துகள், 'டுவிட்டர்' சமூக தளத்திலேயே சொல்லப்படுகின்றன. நேரில் வாழ்த்து சொல்ல, தலைவர்கள் யாரும் வருவதில்லை; சில தொண்டர்கள் மட்டுமே வருகின்றனர். ராஜ்நாத் சிங்கின் பிறந்த நாள் விழாவிலும் இதே நிலை தான். பா.ஜ., தலைவர்கள் அனைவரும், டுவிட்டரில் வாழ்த்து சொல்ல, ராஜ்நாத்தும் டுவிட்டரிலேயே நன்றி தெரிவித்துவிட்டார். பா.ஜ.,வைத் தவிர, ராஜ்நாத்திற்கு வாழ்த்து சொல்லியவர்களில் குறிப்பிடத்தக்கவர், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி. மோடியையும், பா.ஜ.,வையும் கடுமையாக விமர்சித்து வரும் மம்தா, ஒரு சில, பா.ஜ., தலைவர்களுடன் நல்ல பழக்கத்தில் உள்ளார். அவர்களில் ஒருவர் ராஜ்நாத். அடுத்த ஆண்டு தேர்தலில், பா.ஜ., குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டால், பிரதமர் பதவியில் மோடி நீடிக்க முடியாது.
அப்போது, மோடிக்கு பதில் பிரதமராகும் வாய்ப்பு, ராஜ்நாத் சிங்கிற்கு கிடைக்கும் என யோசிக்கிறார், மம்தா. அதனால், ராஜ்நாத்துடன் மம்தா நட்பில் இருப்பதாக திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.


காங்., - -தி.மு.க., கூட்டணி தொடருமா?
கமல், திருமாவளவன் ஆகியோரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார், காங்., தேசிய தலைவர் ராகுல். இது, தி.மு.க.,வில் குழப்பத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. சமீபத்தில், காலா பட இயக்குனர், பா.ரஞ்சித்தை சந்தித்துள்ளார், ராகுல். இந்த சந்திப்பு, டில்லி தமிழ் மீடியாவிற்கு தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ராகுல், 'டுவிட்டரில்' இந்த சந்திப்பு படத்தை வெளியிட்ட பிறகே தெரியவந்தது. இந்த சந்திப்பின் அரசியல் காரணம் என்ன? காலா படத்தில், ஒரு இந்துத்வா கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார் ரஞ்சித். 'அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், ரஞ்சித் போன்றவர்கள், காங்., பிரசாரத்திற்கு உதவுவர் என்ற எண்ணத்தில் இவரை ராகுல் சந்தித்துள்ளார்' என, காங்கிரஸ் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
அத்துடன், இன்னொன்றும் சொல்லப்படுகிறது. 'ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் மீது அதிக நம்பிக்கையில்லை; தேர்தல் சமயத்தில் கூட்டணி என, அவர் சொல்லி வருகிறார்; எனவே, ஒரு வேளை இந்த கூட்டணி நீடிக்காவிட்டால், அதற்கான மாற்று தேவைப்படுகிறது; அதனால், கமல், திருமா, ரஞ்சித் சந்திப்பு' என்கின்றனர் காங்கிரசார். இதை உண்மையாக்கும் வகையில், டில்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வரும் ஆகஸ்டில், தமிழகத்தில் மாநில சுயாட்சி மாநாட்டை, தி.மு.க., நடத்துகிறது; அதற்காக, அனைத்து எதிர்க்கட்சியினரையும் தேசிய அளவில் அழைத்துள்ளது. இதற்கான அழைப்பிதழ், முதலில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 'தி.மு.க., ஒரு ஊழல் கட்சி' என, கமல் கட்சி துவக்க விழாவில் சொன்னவர், கெஜ்ரிவால்; அவருக்கு முதல் அழைப்பிதழ். ஆனால், காங்., தலைவர் ராகுலுக்கு, அதன் பின்னரே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. இது குறித்த புகைப்படமும் கால தாமதமாக, தி.மு.க.,வால் வெளியிடப்பட்டது. இப்படி, காங்-., - தி.மு.க., லடாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement