Advertisement

போட்டு முடிக்கும் முன்னே புரட்டிப்போட்டது மழை...புட்டுவிக்கி...'புட்டுக்கிச்சு!' போக்குவரத்தை திருப்பி விடுவதால் மக்கள் அவதி!

போத்தனுார்:புதிதாக போடப்பட்டு வந்த புட்டுவிக்கி ரோடு, தொடர்மழை காரணமாக, படுமோசமாகியுள்ளது; இதனால், பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், போலீசாரால் வேறு வழியில் திருப்பி விடப்படுவதால், உரிய நேரத்துக்கு எங்கும் போக முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, உக்கடம் - ஆத்துப்பாலம் வரை, உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக பஸ், லாரி உள்ளிட்ட உக்கடம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும், குனியமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே, ராஜவாய்க்காலை ஒட்டி புதிதாக போடப்பட்டுள்ள புட்டுவிக்கி ரோட்டில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
தற்காலிகமாக போடப்பட்ட இந்த ரோடு, தொடர்மழையால் சின்னாபின்னமானது; பெரிய பெரிய குழிகள் உண்டாகி, வாகனங்களை பதம் பார்த்தன.கனரக வாகனங்கள் அடிக்கடி சிக்கிக்கொண்டன; பஸ், லாரிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது; மிகவும் மெதுவாக போக வேண்டியிருந்ததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், இவ்வழியே வாகனங்கள் செல்ல, போலீசார் அனுமதிக்கவில்லை; இவ்வழியே வந்த வாகனங்களை, கோவைப்புதுார் வழியாக செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர்.ரோட்டின் நிலை பற்றி, மக்களிடம் கடும் விமர்சனம் எழுந்தது; ரோடே போட்டு முடிக்கப்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.
இந்த ரோட்டை உடனே சீரமைக்கக்கோரி, கோவை மாநகர் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் முத்துசாமி தலைமையில், தி.மு.க.,வினர் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். ஆனாலும், தொடர்மழை காரணமாக, ரோட்டை சீரமைக்கும் பணியை, மாநகராட்சியால் துவக்க முடியவில்லை.ஆத்துப்பாலத்திலிருந்து நேர் வழியாக, 1.5 கி.மீ., துாரமுள்ள உக்கடத்துக்கு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் கூட, அரை மணி நேரத்தில் சென்று விடலாம்.தற்போது மேம்பாலப் பணியால், புட்டுவிக்கி ரோடு வழியாக செல்வபுரம் பை - பாஸ் ரோடு வந்து உக்கடத்தை அடைய அதிகபட்சம் ஐந்து கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும். அதற்கும், 40 நிமிடங்களுக்கு மேலாக வாய்ப்பே இல்லை.
ஆனால், புட்டுவிக்கி ரோடு படுமோசமாக இருப் பதால், கோவைபுதுார் வழியாக சுண்டக்காமுத்துார் - செல்வபுரம் பை - பாஸ் ரோட்டை அடைந்து, உக்கடம் வரவேண்டியுள்ளது; இதற்கு, 10 கி.மீ., துாரத்துக்கும் அதிகமாக சுற்றிச் செல்ல வேண்டி இருப்பதால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிறது.இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புட்டுவிக்கி ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, 'தினமலர்' எதிர்பார்க்கிறது.
இன்னும் ஒரு மாசமா?மாநகராட்சி நிர்வாக பொறியாளர் ஞானவேலிடம் கேட்டபோது,''புதிதாக போடப்படும் ரோடுகள், வாகனங்கள் அதிகளவு செல்லும் போது நன்றாக இறுகிவிடும். ரோட்டில் பலம், அதிகமாகும்; எதிர்காலத்தில் எந்தவொரு இடத்திலும் ரோடு, எளிதில் பழுதாக வாய்ப்பில்லை. தற்போது ஆத்துப்பாலம் மேம்பாலப்பணி நடப்பதால், புட்டுவிக்கி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணி, முழுமையாக முடிவடைய இன்னும் ஒரு மாதமாகும்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • rincy - coimbatire,இந்தியா

    செட்டிபாளையம் ல் இருந்து போத்தனுர் செல்லும் வழியில் பெட்ரோல் பம்ப் ல் இருந்து புதிதாக ரோடு போடப்பட்டு உள்ளது இந்த ரோடு போட்டு சில மாதங்களே ஆனது இதற்க்கு முன்னாள் போட்டிருந்த ரோடே பரவாயில்லை என்னும் அளவிற்கு உள்ளது புதிதாக போடப்பட்ட ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதிக போக்குவரத்து உள்ள ரோடு மோசமாகி மாதங்கள் ஆனது கவனிப்பார் யாருமில்லை குறிப்பாக ஈஸ்வரன் நகர் பஸ் ஸ்டாப் முதல் மிகவும் மோசம். இதில் விழுவார் அதிகம் . இங்குள்ள ஆட்டோ ஓட்டுநர் அனைவரும் சேர்ந்து ரோடு ல் குழிகளில் மரம் நட்டு வைத்து சாலை பாதுகாப்பில் ஈடுபட்டு பலர் விழுவதை தடுத்துள்ளனர் தினமலர் இதை கவனித்து இதை பற்றிய செய்தி வெளியிடுமாறும் தக்க நடவடிக்கை எடுக்க வகை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்

Advertisement