Advertisement

தன்னம்பிக்கை மட்டுமே போதுமா

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க! தன்னம்பிக்கை இருந்தால், எந்த தோல்வியிலிருந்தும் யாரும் எளிதில் மீண்டு விடலாம் என்பதை வலியுறுத்துகிறது இந்த சினிமா பாட்டு.கேட்கும் போதே, யாரையும் நெஞ்சை நிமிர்த்தி, தலையை நிமிர்த்தி சிங்கநடை போட வைக்கும். முயற்சிகளில் தடைகள், தோல்விகள், எதிர்ப்புகள், குழப்பங்கள் இப்படி பல விதமான சுழல்கள், சூறாவளிகள், சுனாமிகளை சந்தித்துத் தான் உலகில் பலர் வென்றிருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கையானால், முடித்துக் காட்டுவேன் என்பது தீவிரம் கொண்ட தீர்மானம். உள்ளுக்குள் எரியும் நெருப்பு. இந்த நெருப்பு அணையாமல் இருந்தால் தான், எதிர்படும் எந்த சோதனைகளையும் எதிர்த்து சாம்பலாக்க முடியும். இடையூறுகள் என்னும் இருளை ஓட்டி முன்னோக்கி நடக்க முடியும்.
மனித உறவு : எதிர்ப்படுகிறவர்களை எல்லாம் எதிரியாக்கி விட்டால், பார்க்கிறவர்களை எல்லாம் பகைத்து கொண்டால், பயணத்தின் அடுத்த அடியே கேள்விக் குறியாகிவிடுமே. ஒவ்வொரு உறவிலும் விரிசல் விழுந்து கொண்டே இருந்தால், சச்சரவுகள், சண்டைகளைசமாளிப்பதற்கே சக்தி அனைத்தும் செலவாகி விடுமே. நமக்கு குறிக்கோள் பெரிதா? குடுமிப்பிடி சண்டை பெரிதா? காரியம் பெரிதா, வீரியம் பெரிதா? யாரும் நமக்கு உபத்திரவம் தராதபடியாவது பார்த்துக் கொள்ள வேண்டாமா? ஆக, நடிப்புக்காகவாவது இணக்கம் காட்டத்தான் வேண்டும்.எப்பேர்ப்பட்ட கெட்டிக்காரனாக இருந்தாலும், தனியொருவனாக சாதிப்பது சற்றே சந்தேகம் தான்.'' தம்பியுடையான் படைக்கஞ்சான்'', ''மலையேறப் போனாலும் மச்சான் துணை வேண்டும்'' இதெல்லாம் எவ்வளவு அர்த்தமுள்ள, அனுபவம் செறிந்த பழமொழிகள். காலை 5:00 மணிக்கு பேருந்து நிலையமோ, ரயில் நிலையமோ செல்ல வேண்டும். உங்களால் வண்டியை எடுக்க முடியாது. நடந்தே செல்லலாமா? நேரம் வீணாகாதா?சரியான நேரத்திற்குசெல்லமுடியுமா? இந்த நிலையில் ஆட்டோவை அழைப்பீர்களா? பஸ் வருகிறதா என்று பார்ப்பீர்களா இல்லையா? ஒன்றும் கிடைக்கவில்லை என்றால், கட்டை விரலை உயர்த்தி 'லிப்ட்' கேட்பீர்களா இல்லையா? அதுதானே ஆதரவு?
சுயபலம் : வெளியிலிருந்து எத்தனைஆதரவுகள் வந்தாலும், அவை சரியான நேரத்தில் கிடைக்காமல் போகலாம். உதாரணமாக, வங்கியில் உங்கள் கணக்கில் 2 லட்சம் ரூபாய் இருக்கிறது.நான்கு நாட்கள் வங்கிக்குதொடர் விடுமுறை. அந்த நேரம் பார்த்து அவசரமாக, ஐந்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. கையில் இருப்பதோ வெறும் ஆயிரம் ரூபாய். பக்கத்து வீட்டுக்காரும்கையை விரிக்கிறார். சொந்த கையிருப்பு இல்லாத போது, கதை சோக கதை தானே!. அது தான் சுயபலத்தின் அருமை.சுயபுத்தியும் அது போலத்தான். என்ன தான் மற்றவர்களின் புத்திமதியும், வழிகாட்டுதலும் வண்டி வண்டியாக கிடைத்தாலும், அதையெல்லாம் அவரவர் கோணத்தில் தான் சொல்வார்கள். நமது சூழ்நிலை, நமது பின்னணி, பலம், செயல் திறன் இவையெல்லாம் நமக்கு தானே நன்றாக தெரியும். விளைவுகளையும் நாம் தானே அனுபவிக்க வேண்டும். அதற்கு தேவை சுயபுத்தி அல்லவா? சொல்லப் போனால் முதல் தேவை சுயபுத்தி. அது இல்லாத போது தான் சொல் புத்தி.நாம் இருக்கும் சூழ்நிலை சாதகமாக இருந்தால், வளர்ச்சிக்கு அதுவே பெரும் துணை. ஆனால், பலருக்கு அது பாதகமாகவே அமைந்து விடுகிறது. முதலாவதாக அந்தசூழ்நிலையைமாற்றலாம்.இரண்டாவதாக, அந்த சூழ்நிலை நமது வளர்ச்சியை பாதிக்காமல்பார்த்து கொள்ள வேண்டும். மூன்றாவதாக அதை விட்டு விலகி விட வேண்டியது தான். நமக்கு நம் லட்சியமல்லவா முக்கியம்.
திறமைகள் : வெற்றியடைய வேண்டு மானால், அதற்கான திறமை இல்லாமல் எப்படி முடியும்? திறமை என்றால், அது லட்சியம் சம்பந்தமான அறிவுத்திறன், திட்டமிடும் திறன், செயலாற்றும் திறன், தளர்ந்து போகும் தருணங்களில் தாக்கு பிடிக்கும் திறன், அருகில் இருப்பவர்களை அரவணைத்து செல்லும் திறன்.. என வெற்றிக்கு தேவையான அத்தனையும் உள்ளடக்கியது தான். தொழிலில் நஷ்டம் வந்தால் பணத்தை தான் இழக்கிறோம். மீண்டும் அதை பல மடங்காகப் பெற்றுவிடலாம். திறமைகளை யாரும் திருட முடியாது. அதனால் அது தான் சக்தி வாய்ந்த முதலீடு. உடல் துாய்மைக்காக தினமும் குளிக்கிறோம். மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக நல்ல ஆடைகளை அணிகிறோம். வீடும் வேலை செய்யும் இடமும் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டாத விஷயங்களை வெளியே எறிகிறோம். அதே போல, நம்மால் முடியுமா? விட்டு விடலாமா? போன்ற அவநம்பிக்கையான மற்றும் எதிர்மறை எண்ணங்களை மனதிலிருந்து எடுத்தெறிய வேண்டாமா? பயனற்ற பழக்க வழக்கங்களை விட்டுவிட வேண்டாமா? நம்மை நாமே சீரமைத்து கொள்ளாமல் வெற்றி சிலையை எப்படி செதுக்குவது?
மனோ திடம் : இதுவும் வெற்றிக்கு தேவை. ஜோராகத்தான் செல்கிறது கார் பயணம். திடீரென்று கார் மக்கர் செய்கிறது. குறுக்கே ஒரு அறிவிப்பு. '' மாற்று வழியில் செல்லவும்'' அல்லது ''இடதுபுறம் இரண்டு கிலோ மீட்டரில் நீர் வீழ்ச்சி'' மனம் சற்றே பலப்படுகிறது. அருவியில் குளித்து விட்டு அப்புறம் பயணத்தை தொடரலாமே! என்று. இப்படி பல இடையூறுகள். தாமதங்கள், சபலங்கள். இதனாலெல்லாம் சோர்ந்து விடாமல், முனைப்புடன் முன்னே செல் வைப்பது எது? மனோதிடம் தானே. மனோ திடம் இருந்தால் மகத்தான சாதனைகளையும் எளிதாக எட்டி விடலாமே!வெற்றி பயணத்தின் போது உயரமான சுவர் தான் தடையாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறிய கல் கூட நம்மை இடறிவிடும். தடுமாறி விழ வைத்து விடும். உடல் என்றால் நோய் வரத்தான் செய்யும். மருந்து கொடுக்க வேண்டும். உள்ளம் என்றால் தளர தான் செய்யும். ஊக்கம் கொடுக்க வேண்டும். ஒரு சின்ன எதிர்மறை செய்தி கூட மனதை சிதறி அடித்து விடக்கூடும். அது இயல்பு. மனம் சோர்வடையும் போதெல்லாம், லட்சிய பயணத்தை நிறுத்தி விடலாமா? அப்போது ஊக்கம் என்ற டானிக்கை உள்ளத்தில் ஊற்றுங்கள்.முயற்சிகள்எல்லாம் சரி. நீந்துவது எப்படி என்ற புத்தகத்தை கரைத்து குடித்து விட்டால் போதுமா? ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாமா? சாரி. அங்கு தான் தண்ணீரே இல்லையே. நீச்சல் குளத்துக்கு செல்ல வேண்டாமா? நீந்த வேண்டாமா? அளவு கடந்த ஆர்வம்,திறமை, ஆதரவு எல்லாம் இருந்தாலும் முயற்சிகள் எடுக்காமல் முன்னேற்றம் காண முடியுமா? ஆற்றில் இறங்காமல் அணையை கட்ட முடியுமா? சேற்றில் இறங்காமல் செந்நெல் விளையுமா? செயலில் இறங்காமல் சாதனைகள் சாத்தியமா?எதிர்பார்த்த பதவியை எட்டி பிடித்து விட்டீர்கள். ஆசைப்பட்ட இடத்தை அடைந்து விட்டீர்கள். சரி அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே. அதற்கு தேவை ஆளுமைத் திறன். அது இல்லையா? எல்லாமே வீண். எப்படி?ஒரு கடையையோ நிறுவனத்தையோ தொடங்குவது பெரிதல்ல. தொடர்ந்து வெற்றிகரமாக, லாபகரமாக நடந்து பல கிளைகளை விட்டு அது வளர வேண்டும். அதற்கு முறையான, சிறப்பான நிர்வாக திறமை. அதாவது ஆளுமை திறன். அதுதானே நிதர்சனம்!'உடைத்தும் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முறிந்தார் பலர்.'தன்னுடைய திறமைகளைஅறியாமல் தன்னம்பிக்கை மிகுதியால் ஒரு செயலில் இறங்கி, பிறகு தடுமாறி விழுந்தவர்கள் பலர். தன்னம்பிக்கை மிக அவசியமானது தான்.வெற்றிகரமான, வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை தவிர்க்க முடியாததுதான் என்றாலும், அதற்கு மேலே சொன்ன அத்தனை விஷயங்களும், சொல்லப்படாத இன்னும் பல விஷயங்களும் கூடுதலாக தேவைப்படும் என்பதை உணரவேண்டும்.
-தங்கவேலு மாரிமுத்துஎழுத்தாளர், திண்டுக்கல்9360327848.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement