Advertisement

டீ கடை பெஞ்ச்

ரூ.6 லட்சம் லஞ்சத்தை திருப்பி தந்த போலீசார்!''நிழல் கலெக்டராவே வலம் வராரு பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''தமிழகத்தின் மேற்கு மாவட்டம் ஒண்ணுல, கலெக்டரின் பர்சனல் கிளார்க்கா இருக்குறவர் தான்... ஆர்.ஐ., அந்தஸ்துள்ள இந்த அதிகாரி, தினகரன் அணியின், 'மாஜி' அமைச்சர் பழனியப்பனின் விசுவாசி பா...

''இவர், நெடுஞ்சாலை, பொதுப்பணி, கனிமவளம், வருவாய், ஊரக வளர்ச்சி துறைகளின் அதிகாரிகள், மாசா மாசம், தன்னை, 'கவனிக்கணும்'னு கண்டிப்பா உத்தரவு போட்டிருக்கார்... ''கவனிக்காத அதிகாரிகளை, கலெக்டரிடம், தப்பு தப்பா, 'போட்டு' குடுத்துடுறார்... இப்படி சம்பாதிச்ச பணத்துல, அந்தப் பகுதியில, ரெண்டு பங்களா கட்டிட்டாரு பா...

''இவரால, டி.ஆர்.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளே பாதிக்கப்பட்டிருக்காங்க... அதிகாரியோ, 'நான் சொல்றதை தான், கலெக்டர் கேட்பாங்க'ன்னு மார் தட்டிட்டு ஹாயா வலம் வராரு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''வாரும் துரைவேல்... தர்மபுரியில இருந்து எப்ப வந்தீர்...'' என, நண்பரை வரவேற்ற அண்ணாச்சியே, ''சபாநாயகர் தெருவுக்கு மட்டும் ரோடு போட்டுட்டு, மத்த தெருக்களை, 'அம்போ'ன்னு விட்டுட்டாவ வே...'' என்றபடி, விஷயத்திற்கு வந்தார்.

''சபாநாயகரின் சொந்த ஊர்லயா ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''இல்லை... சபாநாயகர் தனபாலுக்கு, சென்னை, அண்ணா நகர் மேற்கு, 'சி செக்டார்' பகுதியில சொந்த வீடு இருக்கு... ஆனா அவர், அடையாறு, அரசு பங்களாவுல தான் குடியிருக்காரு வே... ''அவரது அண்ணாநகர் வீட்டுக்கு போற தெருக்கள், குண்டும், குழியுமா இருந்திருக்கு... சபாநாயகர் வீட்டுல, அவரது சொந்தக்காரங்க குடியேற போறாவ வே...

''அதனால, அவர் வீட்டுக்கு போற, ஆறாவது, ஒன்பதாவது தெருக்களுக்கு மட்டும், ஒரே நாள்ல பளபளன்னு புதுசா ரோடு போட்டுட்டாவ... ஏழு, எட்டாவது தெருக்களை கண்டுக்கலை... அந்தத் தெரு மக்கள், புலம்பிட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''வாங்குன பணத்தை திருப்பி குடுத்துட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.''ஏதாவது கடன் விவகாரமா வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''இல்லை... வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாக இருந்த துணிகளை திருடிட்டு போன மூணு லாரிகளையும், ரெண்டு பேரையும், சென்னைக்கு பக்கத்துல, சமீபத்துல போலீசார் பிடிச்சாங்க... இதை மூடி மறைக்க, ரெண்டு போலீஸ் அதிகாரிகள், ஆறு லட்சம் ரூபாய் வாங்கிட்டாங்க...

''லாரிகள் பிடிபட்டது, உயர் அதிகாரிகளுக்கு தெரிஞ்சுட்டதால, வேற வழியில்லாம, ரெண்டு பேரையும் கைது பண்ணி, வழக்கும் பதிவு பண்ணிட்டாங்க... அதனால, கைநீட்டி வாங்குன, ஆறு லட்சம் ரூபாயை, கமுக்கமா திருப்பி குடுத்துட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

ஒலித்த மொபைல் போனை எடுத்து, ''கருணாகரனும், சதீஷும் நேத்து வந்திருந்தாவ... செங்குன்றத்துல ஏதோ ஜோலின்னு சொன்னாவளே...'' என, யாரிடமோ பேசியபடியே அண்ணாச்சி நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இதே மாதிரி, பணி நியமனம், மாற்றம் என்று 'வாங்கிவிட்டு' வேலை நடக்காதவர்களும் 'நேர்மையாக' திருப்பித் தருவார்களா ?

Advertisement