Advertisement

பணியிடங்களில் பரிவு காட்டுங்கள்!

'பக்திக்கும், மரியாதைக்கும் உரியது கோயில் மட்டுமல்ல; நாம் பணி புரியும் இடமும் கூட,' என்பது அனைத்து அலுவலகங்களிலும் காணப்படும் ஓர் ஒப்பற்ற வாக்கியம். வேலை என்பது ஒவ்வொருவருக்கும், அவரவர் தகுதிக்கு ஏற்ப இறைவன் வழங்கிய உன்னத கொடை. வேலை செய்யும் அனைவரும், விடுமுறை நாட்களை தவிர அதிகமான நேரம் இருப்பது பணிபுரியும் இடங்களில் தான். அதனால் தான் பணியிடங்களை இரண்டாவது சொந்த வீடு என்பார்கள். ஒரு மலரின் அங்கீகாரம் அதன் வாசனையில் தெரிவதை போல், ஒரு மனிதனின் அங்கீகாரம் பணியிடங்களில் அவர் பணியாற்றுகின்ற பொறுப்பையும், கடமையும் பொறுத்து தெரியும்.''அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே,'' என்கிறார் தாயுமானவர்.''என் கடமை பணி செய்துகிடப்பதே,''என்றார் அப்பர் பெருமான். சிலருடைய வேலைகள் மக்களுக்கு நேரடியாக பயனளிக்கக்கூடிய வகையிலும் இருக்கலாம். ஆனால் இன்று பணிகளில் இருப்பவர்கள் தங்களுக்குரிய பணிகளை முறையாக செய்து பிறருடைய தேவைகளை உடனே நிறைவேற்றித் தருகிறார்களா என்பது கேள்வியாகி உள்ளது.பாடல் ஒன்றில்...''பல நுால் படித்து நீ அறியும் கல்விபொதுநலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் - இவைஅனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்,'' இது பணியாற்றும் அனைவரும் மனதில் வைத்து அசைபோட வேண்டிய வைர வரிகள்.பணியின் மேன்மை'செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்' என்பது போல், அனைத்து பணியிடங்களும் இறைவன் குடிகொண்டிருக்கிற புனிதமான இடம். தொழிலின் புனிதத்தை ஒரு மேல்நாட்டு அறிஞர், ''நான் ஒரு வியாபாரி, வியாபாரம் எனது மதம், வியாபாரம் செய்யும் இடம் எனது வழிபாட்டுத்தலம். வாடிக்கையாளரே கடவுள், அவருக்கு செய்யும் சேவையே எனது பூஜை, அவர் பெறும் மன நிறைவே எனது பிரசாதம்,'' என்றார். அந்தளவுக்கு அனைத்து பணியிடங்களும் வாடிக்கையாளர்களின் வரவுக்காக காத்திருக்கின்றன. அவ்வாறு தன்னை நாடி வருபவர்களுக்கு யாரொருவர் மனம் இரங்கி உதவி செய்கிறாரோ, அவருக்கு இறைவனின் அருட்கருணை கிடைக்கும்.ஒவ்வொரு மனிதனும் எதாவதொரு தேவையை சார்ந்து வாழ்வதால், தேவைகளின் அளவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு இடத்தில் ஏதாவதொரு வேலையை முடிக்க வேண்டி உள்ளது. இதற்காகவே அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், நீதிமன்றங்கள் என மக்கள் சார்ந்த அலுவலகங்கள் இயங்குகின்றன. மேற்குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் பயனாளிகள், உடனே பயனடையகிறார்களா என்பது பணியாளர்களின் மனநிலையையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் பொறுத்தது.ஒரு கவிஞன் எழுதினான்...''லஞ்சம் வாங்கினேன்; கைது செய்தார்கள்.லஞ்சம் கொடுத்தேன்; விடுதலை செய்தார்கள்,'' என்றார். என்ன ஒரு வேடிக்கை.ஒரு அலுவலகத்தில் இப்படியும் ஒரு வாசகம்.''லஞ்சம் வாங்குவதும்,லஞ்சம் கொடுப்பதும் குற்றம்,'' அதன் கீழே''வதந்திகளை நம்பாதீர்,''என எழுதப்பட்டிருந்தது.இப்படித்தான் இன்று பல அலுவலகங்கள் இருக்கின்றன. உயர் பதவியில் இருப்பவர்களுக்கும், தங்களின் சொத்து விபரங்களை கணக்கு காட்ட வேண்டும், என்ற அளவுக்கு நாடு போய் கொண்டிருக்கிறது.
கசப்பான உண்மை : ''சத்தியமே லட்சியமாய் கொள்ளடா, தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா,'' என்ற பாடல் மனித மனங்களை நிமிரச் செய்யும் தன்மான வரிகள். பணியாற்றுகின்ற ஒவ்வொருவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பிறரின் மனம் நோகும் வகையில் இருக்கக்கூடாது. ஒரு பையன் பக்கத்துடன் வீட்டில் போய் பென்சிலை தெரியாமல் எடுத்து கொண்டு வந்தான். அவனின் தாய், ஏதுடா என்றார்கள். பக்கத்து வீட்டில் எடுத்து வந்தேன், என்றான். உடனே அந்த தாய், இனிமேல் இப்படி தப்பெல்லாம் செய்யாதே, அப்பாவிடம் சொன்னால் அலுவலகத்தில் இருந்து டப்பா, டப்பாவாக கொண்டு வந்து விடுவார், என்றார்.விடுமுறை நாளில் ஒருவர் தனது வீட்டில் காலையில் இருந்து மாலை வரை துாங்கினார். உடனே மனைவி, ''ஆபீஸ் டைம் முடிஞ்சு போச்சு, எந்திரிங்க,'' என்றவுடன் படாரென்று எழுந்து உட்கார்ந்தார். ஒருவர் ஆபீஸில் அயர்ந்து துாங்கி கொண்டிருந்தார். அவரை எழுப்பிய மேலாளர் கோபத்தில், ''இப்படியெல்லாம் துாங்காதே,'' என்றார். உடனே அந்த ஊழியர், ''எல் லோரும் தான் துாங்குறாங்க,'' என்றார். உடனே மேலாளர், ''நீ போடும் குறட்டையில் என் துாக்கமல்லவா கெடுகிறது,'' என்றார். சில அலுவலகங்களில் துாங்கவே மாட்டார்கள். ஏனென்றால் வரும் லஞ்ச பணம் வேறொருவருக்கு போய் விடும் என்பதால்! இது நகைச்சுவையாக இருந்தாலும், இதிலும் சில கசப்பான உண்மைகளும் உண்டு.எல்லா அரசு அலுவலகங்களும், அரசு ஊழியர்களும் அப்படி அல்ல. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிபவர்கள் ஏராளம்.
எது வாழ்வின் உன்னதம் : ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை என்பது இறைவன் வழங்கிய மகிழ்ச்சி பெட்டகம், அந்த வாழ்க்கை உன்னதமாக அமைய, நம்மால் முடிந்தளவு பிறருக்கு தன்னலம் கருதாத உதவிகளை செய்ய வேண்டும். வாழும் வரையில் நம்மை யாரும் வெறுக்கக்கூடாது. வாழ்ந்த பிறகு நம்மை யாரும் மறக்கக்கூடாது என்று வாழ்ந்தவர்கள் தான், நமது எண்ணங்களில் என்றென்றும் வாழ்கிற உன்னத தலைவர்கள். முன்னாள் முதல்வர் காமராஜரிடம் ஒருவர் இரண்டு சினிமா தியேட்டரை கட்டி விட்டு திறப்பு விழாவிற்கு அழைத்தபோது, இரண்டு பள்ளிக்கூடங்களை கட்டி விட்டு வா, பிறகு திறப்பு விழாவுக்கு வருகிறேன் என்றார். அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கே ஆயுள் முழுவதும் சுபதினம் என ஒரு திரைப்படப் பாடல் சொன்னது. நம்மால் ஒருவர் கண்ணீர் சிந்துவதை விட நமக்காக ஒருவர் கண்ணீர் சிந்துவது தான் வாழ்வின் உன்னத நிலை.''வாழ்க்கை என்பது நாம் சாகும் வரை அல்ல; மற்றவர் மனதில் நாம் வாழும் வரை,'' என்பதை மனதில் சுடர் ஒளியாய் மிளிர விடுவோம்.- ச.திருநாவுக்கரசு,பேச்சாளர், மதுரை.98659 96189

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement