Advertisement

விஜய்சேதுபதி...ஹேப்பி அண்ணாச்சி

ரவுத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற படங்களால் கோலிவுட் உலகின் தனித்துவ ஆளுமையாக வளர்ந்திருக்கும் இயக்குனர் கோகுல், தற்போது இயக்கியிருக்கும் 'ஜுங்கா' படத்தின் ரிலீஸ் வேலைகளுக்கு மத்தியில் அளித்துள்ள நேர்காணல்...

* கோகுல் - இயக்குனர் கோகுல் ஆனது எப்படி?நான் இயக்குனர் ஆவதற்கு முன்பாக, நடிகராகவே ஆசைப்பட்டேன். ஆனால், ஆசைப்பட்டதெல்லாம் கிடைப்பதில்லையே... எனவே கிடைத்ததை ஆசையுடன் செய்தேன். ஆசைப்படாததும் கூட கிடைத்துக் கொண்டிருக்கிறது.

* ஆசைப்படாததா... என்ன அது?முதல் படம் 'ரவுத்திரம்' என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது; விஜய்சேதுபதி என்கிற மாபெரும் பிம்பம் எனக்கு கிடைத்தது; இரண்டாவது படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் தமிழ் சினிமாவின் 'ட்ரெண்ட் செட்டர்' ஆனது; 3வது படம் 'காஷ்மோரா' நான் நினைக்காத விளைவுகளை ஏற்படுத்தியது; ஏன்... இப்போது என் நான்காவது படம் 'ஜுங்கா'வின் டிரெய்லர் இவ்வளவு பெரிய 'ஹிட்' ஆனது கூட நான் ஆசைப்படாதது தான்.

* ஏன்...?காஷ்மோரா படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு முழு வரலாற்றுப் படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சின்ன ஏமாற்றத்தை படம் கொடுத்ததாக பேசிக் கொண்டார்கள். எனவே, 'ஜுங்கா'வில் அந்த தவறு நிகழ்ந்து விட வேண்டாம் என்று, சுமாரான ஒரு டிரெய்லரை தயாரித்தோம். ஆனால், அதுவும் இவ்வளவு ட்ரெண்டாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
* அப்படியென்றால் 'ஜுங்கா'வில் நாங்கள் எதை எதிர்பார்க்க வேண்டும்?எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பதே என் எதிர்பார்ப்பு. காரணம் விஜய்சேதுபதி என்கிற ஒரு மகாநடிகர் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவர். அவரது அசுர நடிப்பிற்கு தீனி போடும் கதையாக 'ஜுங்கா' இருக்கிறது.


* 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - 2' தான் ஜுங்காவா?சத்தியமா இல்லங்க. 'ஜுங்கா'விற்கு முன்னாடியே 'இ.ஆ.பாலகுமாரா-2' தான் பண்ணனும்னு நினைச்சுட்டு இருந்தோம். அதற்கு முன்னாடியே ஜுங்கா கதை கிடைச்சுடுச்சு. அதான் சிறப்பா பண்ணிட்டோம்.
* என்ன மாதிரியான கதை?ஒரு கஞ்ச 'டான்', ஆடம்பரமான வாழ்க்கை நோக்கி தள்ளப்பட்டால் என்ன செய்வான், எப்படி ரியாக்ட் பண்ணுவான் என்பதை காமெடி, காதல், களேபரம் கலந்து காட்சிப்படுத்தியிருக்கோம். கண்டிப்பாக 'ஜுங்கா' விஜய்சேதுபதியை ரொம்ப புதுசா, ப்ரெஷ்ஷா பீல் பண்ணுவீங்க. 'டான்'ஆக விஜய்சேதுபதி செய்திருக்கும் பெர்பார்மன்ஸ் வேற லெவல் என உருகுவீர்கள்.

* 'ஜுங்கா'விற்காக விஜய்சேதுபதியா இல்லை விஜய்சேதுபதிக்காக 'ஜுங்கா'வா...நான் எந்த ஐடியாவும் இல்லாமல் வெறுமனே கதையை மட்டும் தான் எழுதிக் கொண்டிருந்தேன். இடையில் ஒருநாள் விஜய்சேதுபதியே, 'நாம் ஒரு படம் பண்ணலாம்னு தோணுது, ஏதாவது கதை ரெடியா இருக்கா'னு கேட்டார். அப்போ தான் 'ஜுங்கா' ஒன்லைன் சொன்னேன். அதை மட்டுமே கேட்டவர், உடனே படத்தை ஆரம்பிப்போம்னு சொல்லிட்டார். அப்படி வந்தவன் தான் ஜுங்கா.

* உங்களோட ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு ஒளிப்பதிவாளர்... என்ன காரணம்?ஒரே காரணம்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். என் பார்வையில் இருக்கும் கதையில் அவங்களோட பார்வையும் சேரும் போது, இயல்பாகவே காட்சிகள் புது வடிவம் பெற்று விடுகின்றன. அவ்வளவு தான்.
* அதெல்லாம் சரி... நீங்க ரவுத்திரம் கோகுலா, பாலகுமாரா கோகுலா...உண்மையை சொல்லணும்னா நான் இரண்டும் தான். இந்த இரண்டும் எதிர் எதிர் உணர்ச்சி நிலைகள். இந்த இரண்டில் ஏதோ ஒண்ணுல தான் எப்பவும் இருப்பேன். எனக்கு இந்த இரண்டுக்கும் நடுவுல இருக்க தெரியலை; இருக்க முடியலை.

* விஜய்சேதுபதி-கோகுல் கெமிஸ்ட்ரி ரகசியம் சொல்லுங்களேன்...எங்களுக்குள்ள ரகசியம் இல்லை; அதான் ரகசியம்! விஜய்சேதுபதியை முதலில் ஒரு நடிகனாக பார்த்தேன், பின் நண்பனாக பார்த்தேன், இப்போது ரசிகனாக பார்த்து அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். ஏன்னா அவர் அவ்வளவு நேர்மையான நடிகர். அவரோட நேர்மை தான் அவரை இந்த அளவிற்கு வளர்த்திருக்கு.
அவருக்கு என்ன வரும்னு எனக்கு தெரியும், எனக்கு என்ன வேணும்னு அவருக்கு தெரியும்... இதுக்கு மேல ஒரு நல்ல உறவுக்கு வேற என்ன வேணும். அவர் கூட படம் பண்றது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. என் கூட படம் பண்றது அவருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு. மொத்தமா எங்க ஸ்டைல்ல சொல்லனும்னா... 'விஜய்சேதுபதி ஹேப்பி அண்ணாச்சி!'
மேலும் பேச: gofargokulgmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement