Advertisement

பல்கலைக்கழகங்களின் பரிதாப நிலை!

பல்கலைக் கழகங்கள் என்ற அமைப்பை, உலகிலேயே முதன் முதலில் நிறுவிய வரலாற்று பெருமை வாய்ந்த நம் நாட்டில், ஒரு உயர்கல்வி நிறுவனம் கூட, உலகளவில் முதல், 200 இடங்களை பெற தற்போது இயலவில்லை. இதற்கு என்ன காரணம்... யார் பொறுப்பு... இழந்த அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை அனைவரும் அறிய வேண்டியது அவசியம். தமிழக பல்கலைக் கழகங்கள் அல்லது கல்லுாரி களில் படித்தவர்கள், உலகின் புகழ் பெற்ற நிறுவனங்களில் விண்ணப்பித்ததும், வேலை கிடைத்த காலம் இருந்தது. அதனால் தான், உலகம் முழுக்க, பல நிறுவனங்கள் மட்டுமன்றி, அரசு துறைகளிலும் கூட, உயர் அதிகாரிகளாக, தமிழர்கள் பலர் கோலோச்சுகின்றனர். ஆனால் இன்றைக்கு, அதில் சுணக்கம், இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகளில் புகுத்தப்பட்ட ஜாதி, மத, இன, மொழி அரசியல். இவற்றால் சீர்குலைந்து நிற்கிறது, தரம். கடைநிலை ஊழியர் முதல், ஆட்சி மன்றக் குழு, துணைவேந்தர் நியமனம் வரை, அனைத்திலும் தலை விரித்தாடுகிறது, அரசியல். பணம், ஜாதி, அரசியல் தலையீட்டால், தகுதியும், திறமையும், விலை பேசப்படுகிறது. இதனால், பல்கலைக் கழகத்தின் அச்சாணியாகக் கருதப்படும், துணைவேந்தர் எனும் உயர் பொறுப்பிற்கு, தகுதியானவர்கள் வர முடிவதில்லை; பல்கலைக் கழகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. துணை வேந்தராக, 27 ஆண்டுகள் இருந்து, அந்த பதவிக்கு பெருமை சேர்த்த, ஏ.எல்.முதலியார், நெ.து.சுந்தர வடிவேலு, வா.செ.குழந்தைசாமி, மு.ஆனந்த கிருஷ்ணன், துணை வேந்தராகப் பொறுப்பேற்கும் போதே, பதவி விலகல் கடிதத்தை, அறைக்கு வெளியே வைத்துச் சென்ற தமிழறிஞர், வ.ஐ.சுப்ரமணியன் போன்றோரால், அந்த பதவிக்கு மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களுக்கும் பெருமை கிட்டியது. மார்க்ஸ் எனும் மாமேதையைத் தந்தது, ஜெர்மனி நாட்டின் பெர்லின் பல்கலைக்கழகம். 'சர்வபள்ளி' ராதாகிருஷ்ணன், முன்னாள் ஜனாதிபதிகள் அப்துல் கலாம், ஆர். வெங்கட்ராமன், முதல் இந்திய கவர்னர் ஜெனரல், மூதறிஞர் ராஜாஜி போன்ற மகத்தான தலைவர்கள்; சர்.சி.வி. ராமன், கணிதமேதை ராமானுஜன், சந்திரசேகர் உள்ளிட்ட அறிவியலாளர்களைத் தந்தது, சென்னைப் பல்கலைக்கழகம். பாடங்களைத் தாண்டி, வாழ்க்கையின் பல யதார்த்த தத்துவங்களை இவர்கள் விவாதித்ததால், சிந்தனைகளின் ஊற்றுக்கண்ணாக பல்கலைக்கழகங்கள் விளங்கின. அன்றைய நிலையில், அரசியல் என்பது, ஓட்டுகளை பெறுவதாகவோ அல்லது ஜாதியை முன்னிறுத்துவதாகவோ இருக்கவில்லை. மாறாக, தத்துவங்களைப் பயில்வது; அதன் மூலம் சமூகத்தைப் பார்ப்பது; பிரச்னைகளைப் புரிந்து கொள்வது; தீர்வைத் தேடுவது என்றிருந்தது. ஆனால் இன்று, கொள்கையின்றி கோஷமிடும் கட்சிகள், அருவருக்கத்தக்க ஜாதிய உணர்வுகளை கையிலெடுக்கும் ஜாதி சங்கங்களின் கூடாரமாக பல்கலைக் கழகங்கள் மாறி வருவது வேதனைக்குரியது. இத்தகைய அமைப்புகள், மாணவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன. மேலும், மாணவர்களின் தலைவராக வருபவர்கள், மாணவர்களின் நலனுக்காகவோ அல்லது கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டிற்காகவோ, ஆக்கப்பூர்வமான முறையில் எதையும் விவாதிப்பதில்லை. மாறாக, கட்சிகளின் கருத்தியல்களை, தொலை நோக்கற்ற நடவடிக்கைகளை, சுயநலப்போக்குடன், மாணவர்களின் மனங்களில் விதைக்கின்றனர்; மூளைச் சலவை செய்கின்றனர். ஜாதி, அரசியல் சாயம் பூசப்பட்டு, திசை மாறுவதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. கல்விச் சூழல் முடக்கப்பட்டு, போராட்டக் களங்களாக, அரசியல் களங்களாக பல்கலைக் கழகங்கள் மாற்றப்படுகின்றன.மேலை நாடுகளில், குறிப்பாக, அமெரிக்காவின் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான ஹார்வர்டு, யேல், மேரிலாந்து, பென்சில்வேனியா போன்ற பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள், நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்து செல்கின்றன. பல்கலைக் கழகங்களின் கட்டமைப்பு வசதிகள், வகுப்பறை, நுாலகம், மாணவர்களுக்கான வசதிகள் என, அனைத்தும் வியப்பைத் தருகின்றன. ஒரு கட்டுப்பாட்டு அறைக்குள் அமர்ந்த படி, பல்கலைக் கழகத்தின் பாடங்களைப் பதிந்து, உடனுக்குடன் இணையத்தில் ஏற்றி, பல்கலைக் கழகத்திற்கு வர இயலாத மாணவர்களுக்கும், பாடங்களைத் தடையின்றி படிப்பதற்கு வழங்கும் வசதிகள், நம்மை மலைக்க வைக்கின்றன. எனவே தான், 'நோபல்' அறிஞர்களை உருவாக்கிய, உருவாக்கும் பெருமையைத் தக்க வைப்பதுடன், உலகின், 200 பல்கலைக் கழகங்களின் தர வரிசைப் பட்டியலில், ஹார்வர்டு பல்கலைக்கழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.அந்த பல்கலைக்கழகங்களில் அரசியல் தலை துாக்குமா என்றால், இல்லை என்ற பதிலின் மூலம், அவர்களின் கல்வி, அரசியல் கலப்படமற்ற கல்வியாக உள்ளது என்பதை அறிய முடிகிறது.உழைப்பிற்கு தனி மதிப்பும், மரியாதையும் இருப்பதால், மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதிலும், பகுதி நேர வேலைகளில் பணியாற்றியபடியே, படிப்பைத் தொடர்வதிலும், தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.மாணவர்களை அறிவாளிகளாக, உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களாக மாற்றுவதற்குரிய சூழலும், வசதிகளும் பல்கலைக் கழகங்களில் உள்ளன. கற்பதும் அதன் வழி நிற்பதும் தான், மாணவர்களின் கடமையாக்கப்பட்டுள்ளது.பணி நியமனங்களில் கீழ்நிலை துவங்கி, மேல்நிலை வரை, தகுதி ஒன்றை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றனர். இங்கு போல், துணைவேந்தர் பதவி அங்கு இல்லை; தலைவர், துணைத் தலைவர், பேராசிரியர், முதல்வர் பொறுப்புகள் உள்ளன.தலைவராக உள்ளவர், கல்வி, ஆராய்ச்சி, நிர்வாகம் என, அனைத்திலும் முதலிடம் பெற்றிருந்தால் தான், பதவி வகிக்க முடியும். நம்மூரைப் போல, ஜாதிச்சான்றும், கட்சி உறுப்பினர் அடையாள அட்டையும், அரசியல் பின்புலமும், பண வசதியும் உள்ளவர்களால் பதவிக்கு வர முடியாது.ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போது, தலைமறைவாகும் துணைவேந்தர்களோ அல்லது கல்வியாளர்களோ அமெரிக்காவில் இல்லை.பேராசிரியர்கள் தங்கள் திறமையை உறுதிப்படுத்தும் வகையில், பாடம் நடத்த வேண்டும்; ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகத்துறையினர், தாங்கள் விரும்பும் பாடங்களை, பல்கலைக் கழகங்களில் கேட்க முடியும். அந்த அளவில், பல்கலைக்கழகப் பாடம் என்பது, திறந்த நிலையில் இருப்பதால், பேராசிரியர்கள் விழிப்பாக இருப்பர்.ஆனால், நம் நாட்டில், பல்கலைக்கழகப் பணியில் இணைந்து விட்டால், இனி நம்மை அசைக்க ஆள் இல்லை என்றும், ஏதாவது பிரச்னை என்றால், ஜாதி சங்கங்கள், அரசியல் சார்பு அமைப்புகள் பார்த்துக்கொள்ளும் என்றும், வாழப் பழகி விட்டோம். பேராசிரியர்களுக்கு இடையே, அறிவுத் தளத்தில் கருத்து வேறுபாடுகள், மாறுபாடுகள் தோன்றுவது இயல்பு.இன்னும் சொல்லப் போனால், தோன்ற வேண்டும். அப்போது தான், அறிவும், ஆராய்ச்சியும், புதுமைத் தேடலின் வெளிப்பாடாக அமையும்; கல்வியும் எழுச்சியுறும்.ஆனால் அதுவே, தான் என்ற எண்ணத்தால், தனி மனித மோதலாக மாறி விடுமானால், நிறுவனச் செயல்பாட்டிற்கும், கல்வி வளர்ச்சிக்கும், பெரும் தடையாக இருப்பதுடன், ஆக்கப்பூர்வமான நடைமுறைகளையும் ஏற்படுத்தாது. மேலை நாடுகளில், ஜாதி, மத, இன, அரசியல் பேதங்களுக்கு அப்பால், தகுதி ஒன்று மட்டுமே பார்க்கப்படுவதால், உயர் கல்வியின் தரமும், பல்கலைக் கழகங்களின் மதிப்பீடும், உயர்ந்து கொண்டே உள்ளது. ஆனால், தகுதிக்கு அப்பால், ஜாதி, மதம், இனம், அரசியல், பணம், இங்கு முக்கியப் பங்கு வகிப்பதால், பெரும் கல்விமான்கள் அமர்ந்த இடத்தில், எந்தத் தகுதியும் இல்லாதோர் எளிதில் நுழைந்து, பல்கலைக் கழகத்தையே புரியாத புதிராக்கி விடுகின்றனர்.கல்வித் தகுதி கண்டு கொள்ளப்படாமல், அரசியல்வாதிகள், பண முதலைகள், மணல் கொள்ளையர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் வாரிசுகள் உலவும் இடங்களாக, இந்தியப் பல்கலைக் கழகங்கள் மாறி வருகின்றன என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. பணமிருப்பவர்கள், நிழலுக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர்கள், கல்வித் தந்தைகளாகவும், வேந்தர்களாகவும் இந்தியா முழுவதும் உலா வருகின்றனர். எனவே தான், பல்கலைக்கழக நியமனங்கள், குதிரை பேரங்களாக மாறின. யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகள், மிகச் சாதுர்யமாக மீறப்படுகின்றன; சங்கங்களும், சட்டங்களும், விழி பிதுங்கி நிற்கின்றன. அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர், தேவையற்ற அதிகாரக் குறுக்கீடுகளால், கல்வியாளர்களை அடக்கி, ஒடுக்காத நிலை இருந்தால் தான், உயர் கல்வியின் தரம் உயர்வதற்கு வழி ஏற்படும். நாட்டை வளப்படுத்தவும், நலப்படுத்தவும் உதவுவது, அறிவு சார்ந்த சமூகத்தையும், நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க உதவுவது, உயர்கல்வி. அப்படிப்பட்ட கல்வி, வளமாக இருக்க வேண்டுமானால், உயர் கல்வியின் களங்களான பல்கலைக் கழகங்கள், ஜாதி, மத, அரசியலை வார்த்தெடுக்கும் களங்களாக செயல்படாமல், அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்திற்கான திறவுகோல்களாக இருக்க வேண்டும். தற்கால சூழலுக்கேற்ப, போதுமான வெற்றிகளை பெறவும், தர வரிசைப் பட்டியலில், தகுதியான இடத்தை தக்க வைப்பதற்கும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அரசியல் ஆதிக்கம், அதிகார வர்க்கத்தின் தேவையற்ற குறுக்கீடுகளில் இருந்து விடுபட்ட, சுதந்திரமான கல்விச் சூழல், பல்கலைக் கழகங்களில் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். கருத்து வேறுபாடுகள், சுயநலப்போக்கு, பழி வாங்கும் தன்மை போன்றவைகளுக்கு அப்பாற்பட்டு, துளியும் அரசியலின்றி, உயர் கல்வியின் பங்குதாரர்களாகக் கருதப்படும் பேராசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகத்தினர் பொதுத் தளத்தில் ஒருங்கிணைய வேண்டும். அதுவே, பார் போற்றிய பல்கலைக் கழகங்களை மேலும் பாழ்படாமல் காக்கும்.ரா.வெங்கடேஷ்உதவி பேராசிரியர், சென்னை பல்கலைக்கழகம்இ-மெயில்:rvsh76gmail.com

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (1)

  • Siva_Muscat - Muscat,இந்தியா

    அருமையான கட்டுரை. கல்வி ஒரு வியாபாரம் ஆன பிறகு இதை பற்றி யார் கவலை பட போகிறார்கள். ஆனால் நல்ல கருத்தை விதைத்து கொண்டே இருப்போம் என்றாவது ஒரு நாள் விடிவு பிறக்கும். திரு வெங்கடேஷ் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். இதை மாதிரி எழுதிக்கொண்டே இருங்கள் அடுத்த தலைமுறையினருக்காக

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement