Advertisement

வெளிநாடு செல்கிறார் பன்னீர்செல்வம்?

துணை முதல்வர், பன்னீர்செல்வம், விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அமைச்சர்கள் வெளிநாடு செல்ல வேண்டுமானால், மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி, பன்னீர்செல்வம் சிங்கப்பூர் செல்ல, மத்திய அரசுக்கு பைல் அனுப்பப்பட்டுள்ளதாம். மத்திய அரசும் அனுமதி வழங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அரசு வேலையாக, பன்னீர்செல்வம் இந்த சிங்கப்பூர் பயணத்தை மேற்கொள்கிறாராம். இதற்கிடையே இன்னொரு தகவலும் டில்லியில் சொல்லப்படுகிறது. பன்னீர்செல்வம் சிங்கப்பூரில் என்ன செய்யப் போகிறார்? யார் யாரைப் பார்க்கிறார் என, முதல்வர் பழனிசாமி தரப்பு தெரிந்து கொள்ள விரும்புகிறதாம். அதற்காக சிலர் சிங்கப்பூர் செல்வர் என தெரிகிறது. என்ன தான் பன்னீர் - பழனிசாமி இணைப்பு நடந்துவிட்டாலும், மனதளவில் இணையவில்லை என, பன்னீர்செல்வம் தரப்பு சொல்வது உண்மை தான் போலிருக்கிறது.பாவம் நாராயணசாமி!
டில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்து வரும் அதிகார மோதல் குறித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. 'சில விஷயங்களைத் தவிர்த்து, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு, டில்லி துணை நிலை கவர்னர், அனுமதி தேவையில்லை' என, அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்தது. மொத்தம், 535 பக்கங்கள் உடைய அந்த தீர்ப்பு, உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியாவதற்கு முன், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி, 'அந்த தீர்ப்பு புதுச்சேரிக்கும் பொருந்தும்; இனி, துணை நிலை கவர்னர், கிரண் பேடி எங்கள் திட்டங்களைத் தடுக்க முடியாது' என, சொன்னார். இது, டில்லி உள்துறை வட்டாரங்களில் கிண்டலடிக்கப்படுகிறது. 'தீர்ப்பு என்ன? எதைப் பற்றி உச்ச நீதிமன்றம் அலசி ஆராய்ந்துள்ளது என தெரிந்து கொள்ளாமலேயே, ஏன் முதல்வர் இப்படி அவசரப்பட்டு பேசிவிட்டார்' எனக் கேட்கின்றனர், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள். உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அரசியல் சாசன பிரிவு - 239 ஏஏவைப் பற்றியே விவாதித்துள்ளது. இந்த ஷரத்து, டில்லி சட்டசபைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு, மற்ற சட்டசபையுடன் உள்ள யூனியன் பிரதேசங்களுக்கு செல்லாது. குறிப்பாக, புதுச்சேரிக்கு இது பொருந்தாது. '239 ஏ' பிரிவு தான் புதுச்சேரிக்கு பொருந்தும்; எனவே, '239 ஏ மற்றும் 239 ஏஏ ஆகிய இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்' என, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 'அப்படியிருக்க, முதல்வர் நாராயணசாமி, அவசரப்பட்டு அறிக்கையை வெளியிட்டு கேலிக்கூத்தாகிவிட்டாரே' என்கின்றனர் அதிகாரிகள். இன்னொரு பக்கம் நாராயணசாமியின் பேட்டி வெளியான அன்று இரவே, 'இது தவறான வாதம்; உண்மை அதுவல்ல' என, புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண் பேடி, டில்லியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலம் தகவல் அனுப்பினாராம். இந்த வழக்கில், மத்திய அரசுக்காக வாதாடிய சீனியர் வக்கீல், தீர்ப்பு என்ன சொல்கிறது என்பது குறித்து, மூன்று பக்க அறிக்கையை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப, அது, கிரண் பேடிக்கும் அனுப்பப்பட்டதாம். இதன் அடிப்படையில் தான், வாட்ஸ் ஆப் மூலம் தகவலை அனுப்பினாராம் பேடி.


என்னாச்சு சுஷ்மாவிற்கு?
டில்லி அரசியல் வட்டாரங்களில் தற்போது அதிகமாக பேசப்படும் நபர், மத்திய அமைச்சர், சுஷ்மா சுவராஜ். இதற்குக் காரணம், 'டுவிட்டர்' சமூக தளம். ஒரு ஹிந்து - -முஸ்லிம் தம்பதிக்கு பாஸ்போர்ட் வழங்கும் விவகாரத்தில், ஒரு அதிகாரி தேவையில்லாமல் கேள்வி கேட்டார் என, டுவிட்டரில் புகார் செய்தார், முஸ்லிமை மணந்த ஹிந்து மனைவி.உடனே, அந்த அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்த சுஷ்மா, அவரை பதவி மாற்றம் செய்தார்.உடனே, சுஷ்மாவிற்கு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஒரு சிலர் மிகவும் மோசமாக, சுஷ்மாவின் சமீபத்திய சிறுநீரக மாற்று ஆப்பரேஷன் குறித்தும் மோசமாக தாக்கி, டுவிட்டரில் கருத்து பதிவிட்டனர். உடனே, தன்னை எதிர்ப்பவர்களின் டுவிட்டர் பக்கங்களில் லைக் போட்டு, பிரச்னையை பெரிதாக்கி விட்டார் சுஷ்மா.காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் சுஷ்மாவிற்கு ஆதரவளிக்க, பா.ஜ., அமைதியாக இருந்தது. பா.ஜ., ஆதரவாளர்கள் தான் சுஷ்மாவை எதிர்த்து டுவிட்டர் போரைத் துவங்கினர் என, காங்., குற்றம் சாட்டியது.மோடிக்கு அடுத்தபடியாக, பா.ஜ.,வில் புகழ் பெற்றவர் சுஷ்மா தான் என, ஒரு பத்திரிகை எழுதியது. இது, பா.ஜ.,விற்குள் புகைச்சலைக் கிளப்பியது.'எதற்கு தேவையில்லாமல், டுவிட்டரில் ஏன் லைக் போட்டார்; காங்கிரஸ், சுஷ்மாவை பாராட்டுகிறது என்றால் ஏதோ சரியில்லை' என, பா.ஜ., அமைச்சர்கள் கோபப்பட்டனர். ஆனால் சுஷ்மாவோ, 'சக அமைச்சர்கள் ஏன் என்னை ஆதரிக்கவில்லை' என, கேள்வி எழுப்பினாராம்.ஒரு வேளை, 'காங்கிரஸ் பக்கம் போகிறாரா சுஷ்மா' என, செய்திகள் அடிபட்டன. உடனே, பா.ஜ.,வின் சீனியர் தலைவர், ராம் மாதவ், 'சுஷ்மா 40 ஆண்டுகளாக கட்சியில் உள்ளார். அவர் மரியாதைக்குரியவர். அவரை சந்தேகப்படக் கூடாது' என்கிற அர்த்தத்தில் ஒரு பத்திரிகையில் எழுதிவிட்டார். இதுவும் கட்சிக்குள் சந்தேக அலையை ஏற்படுத்தியுள்ளது. 'கட்சி தலைவர் அமித் ஷா சொல்லி தான் ராம் மாதவ் எழுதியிருப்பார்... ஒருவர் மீது சந்தேகப்படக் கூடாது என எழுதினால்... என்ன அர்த்தம்; அந்த நபரின் நேரம் சரியில்லை' என்கின்றனர், பா.ஜ.,வினர்;

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement