Advertisement

நிதின் கட்கரி...நிதியை தருவாரா வாரி?

கோவையின் கோரிக்கைகளுடன் செல்கிறது குழு...  சாலைகள் மேம்பாடுக்கு உதவ மத்திய அரசு உறுதி!

கோவை மாநகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், சாலைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியுதவி வழங்க, மத்திய அரசு தயாராகவுள்ளதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது; இதற்காக, நிதின் கட்கரியை சந்திக்க, கோவை சிட்டிசன் கவுன்சில், விரைவில் டில்லி செல்லவுள்ளது.
மத்திய அரசால் உடனடியாக நிறைவேற்றக்கூடிய சில திட்டங்கள் குறித்து விளக்கும் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு, கோவை சிட்டிசன் கவுன்சில் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழில் மற்றும் வர்த்தக சபை அரங்கில் நேற்று காலையில் நடந்த இந்நிகழ்ச்சியில், மத்திய நிதி மற்றும் சாலை போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ., கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளீதர ராவ், பா.ஜ., மாநில செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

மூன்று விஷயங்கள்...வர்த்தக சபை கோவை கிளை தலைவர் வனிதா மோகன் வரவேற்றார்; 'கொடிசியா' தலைவர் சுந்தரம், 'ஆர்க்கிடெக்ட்' அருண் பிரசாத், சதீஷ் ஆகியோர், வான்வழி போக்குவரத்து, சாலை மேம்பாடு, ரயில்வே தேவைகள் என மூன்று தலைப்புகளில் கோவையின் தேவைகள் குறித்து பட்டியலிட்டு, காணொளிக்காட்சி மூலமாக விளக்கினர். அப்போது, வலியுறுத்தப்பட்ட முக்கிய விஷயங்கள்:
கோவையில் இருந்து, காலையில் டில்லி செல்லும் வகையில், ஏர் இந்தியா விமானம் இயக்க வேண்டும்; அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு, இந்த விமானம் உதவியுடையதாக இருக்குமென விளக்கப்பட்டது. தமிழகத்தில், சென்னை விமான நிலையம் மட்டுமே, 'ஹப் அண்ட் ஸ்போக்' விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது; ஆனால், கேரளாவில் மூன்று விமான நிலையங்களுக்கு, இந்த அந்தஸ்து தரப்பட்டுள்ளது.
கோவைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தால், உலகம் முழுவதும் செல்வதற்கு, இங்கிருந்தே விமான டிக்கெட் பதிவு செய்யலாம்; குடியுரிமை சோதனை, பொருட்களை ஏற்றுவது போன்றவற்றையும் இங்கே முடித்துக் கொள்ள முடியும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.27 கி.மீ., நீளமுள்ள 'எல் அண்ட் டி' பை-பாஸ் ரோட்டை, ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்; நீலம்பூரிலிருந்து சரவணம்பட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் வரை, 27 கி.மீ., துாரத்துக்கு, கிழக்கு உள் வட்டச்சாலையும், சூலுார் காங்கேயம்பாளையத்திலிருந்து வெள்ளானைப்பட்டி, சரவணம்பட்டி, கீரணத்தம், வெள்ளமடை, வீரபாண்டி, காரமடை, பெள்ளாதி வரை, 30.1 கி.மீ., நீளத்துக்கு கிழக்கு வெளிவட்டச்சாலையும் அமைக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலையான என்.எச்.181ல், திருச்சி ரோட்டில், சுங்கம்-ராமநாதபுரம், சிங்காநல்லுார் மற்றும் சிந்தாமணி புதுார் ஆகிய இடங்களிலும், மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில், கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், துடியலுார் ஆகிய இடங்களிலும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்; இவற்றுடன், அவிநாசி ரோடு மேம்பாலம் மற்றும் லங்கா கார்னர் பாலம் ஆகியவற்றை விரிவாக்கம் செய்வதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்.

'எமு' ரயில்கள்...கோவை-மதுரை ரோட்டில், பல்லடம்-ஒட்டன்சத்திரம் இடையிலும், கோவை-திருச்சி ரோட்டில், திருச்சி-குளித்தலை வரையிலும் நான்கு வழிச்சாலையாக்க வேண்டும்; ரயில்வே தேவைகளில், கோவை-பெங்களூரு இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும்; மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட கோவை-ராமேஸ்வரம், கோவை-மதுரை பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையிலிருந்து பொள்ளாச்சி-உடுமலை, பாலக்காடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு, ஒரு மணி நேர இடைவெளியில், 'எமு' எனப்படும் 'எலக்ரிக்கல் மல்டிபிள் யூனிட்' ரயில்களை இயக்க வேண்டும்; இந்த ரயில்களுக்கு, வடகோவை ஸ்டேஷனை 'ஹப் ஸ்டேஷன்' ஆக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைளை நிறைவேற்ற, நிச்சயமாக முயற்சி எடுப்பதாக பொன் ராதாகிருஷ்ணன், முரளீதர ராவ் உறுதியளித்தனர்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து, சாலை மேம்பாடுக்கான நிதியைப் பெற்றுத்தரவும், மற்ற துறை அமைச்சர்களைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்வதாக, அவர்கள் தெரிவித்தனர். அடுத்த வாரத்தில், இதற்காக சிட்டிசன் கவுன்சில் நிர்வாகிகள், டில்லி செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், கோவைக்கு பல நல்ல திட்டங்கள், மிக விரைவில் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள், பிரகாசமாகி வருகின்றன.

அடுத்த ஆண்டில் தெரியும்!கோவைக்கென, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பல நல்ல திட்டங்களும், நிதி ஒதுக்கீடு இல்லாமல் தடை பட்டுள்ளன; மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கிய பின்னும் பணிகள் துவங்கியபாடில்லை. அடுத்த ஆண்டில், லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், கோவை மக்களிடம் எந்த ஆளுங்கட்சிக்கு ஆதரவு அதிகம் கிடைக்கப்போகிறது, எந்த கட்சி எதிர்ப்பைச் சம்பாதிக்கப்போகிறது என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
-நமது நிருபர்-

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement