Advertisement

இன்றைய தேவை 'கனவு ஆசிரியர்களே'!

கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி' என்கின்றார் அவ்வையார். சேமித்து வைத்திருக்கும் பொருட் செல்வத்தை விட உயர்ந்தது கல்விச் செல்வம். உடல் இருக்கும் வரை அழியாது. உடன் இருக்கும் மெய்ப் பொருள் கல்விச் செல்வம். அந்த கல்வியை குழந்தைகளுக்கு முழுமையாகக் கொண்டு செல்லும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது.

கண்ணைக் கவரும் வண்ணத்தில் வந்திருக்கும் புதிய பாடப் புத்தகங்களைச் சுமந்தபடி, ஆனந்தமாய் வகுப்பறையின் வண்ணத்துப்பூச்சிகள் வட்டமடித்து திரிவதைப் பார்க்கும் போது மனம் துள்ளிக் குதிக்கிறது. அதேவேளையில் கொஞ்சம் பதற்றம் கொள்கிறது. அட்டை வழிக்கல்வி துாக்கி எறியப்பட்ட இச்சமயத்தில் குழந்தை மையக்கல்வி குறித்து அச்சம் ஏற்படுகிறது! கல்வியை குழந்தைகளுக்கு பிடித்த முறையில் கொடுக்க வேண்டும். அதனை 'கனவு ஆசிரியர்களே' சாத்தியப்படுத்த முடியும்.

ஆசிரியர்கள், மூடிய கதவை தட்டி திறப்பவர்கள்; வெளிக்காற்றை சுவாசிக்கக் கற்றுத் தருபவர்கள். ஆம்! அதற்கு குழந்தைகளை நேசிப்பவர்களாக ஆசிரியர்கள் இருத்தல் அவசியம். அப்படிப்பட்ட 'கனவு ஆசிரியர்களே' இன்றைய தேவை!

யார் கனவு ஆசிரியர்கள்?தான் கற்பிக்கும் கருத்தை புரிய வைப்பதுடன் வாழ்க்கையையும் புரிய வைப்பவராக இருக்க வேண்டும். தான் மட்டும் பேசாமல் மாணவர்களையும் தன்னுடன் பேச வைப்பவராக இருக்க வேண்டும். ஏனெனில் உரையாடல்கள் மட்டுமே வகுப்பறையை ஆரோக்கியமானதாக நகர்த்திச் செல்லும். மாணவர்களிடம் அன்பாக பேசுபவராக இருக்க வேண்டும். ஆம்! பள்ளிக்கூடம் காவல்நிலையம் இல்லை. மிரட்டும் குரல்கள் என்றும் மாணவர்கள் மனதை நொறுங்கச் செய்யுமே தவிர ஆசிரியருடன் நெருங்கச் செய்யாது.

ஆசிரியரின் குரல் நட்போடு இருக்க வேண்டும். சினேகிதனுடன் பேசுகிற தொனியில் இருக்க வேண்டும். நட்புக்குரல் மட்டுமே ஆசிரியரின் வார்த்தைகளை ஏந்திக் கொண்டு மாணவர்களின் ஆத்மாவுக்குள் கொண்டு சேர்க்கும். அன்பு ஒன்றே இருவழிப் போக்குவரத்தை சாத்தியமாக்கும். அன்பைத்தரும் ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களால் நேசிக்கப்படுகின்றார்கள். நல்ல பண்டிதம் பெற்று மாணவர்கள் உளவியல் குறித்து கவலைப்படாமல், சதா கற்பிப்பு பணியில் ஈடுபடுபவரால் குழந்தைகளுடன் ஒன்ற இயலாததுடன் தாமும் தோல்வி அடைவர்.

தொலைநோக்கு பார்வை :வானவியல் சாஸ்திரத்தில் பண்டிதம் பெற்ற ஒருவர் தன் மாணவர்களை காட்டு வழியாக அழைத்து கொண்டு வானத்தில் விண்மீன்கள் இயல்புகளையும், இருப்பு நிலைகளையும் குறித்து பாடம் நடத்தியப்படி சென்றார். விண்மீன்களின் போக்குகளை விளக்கி கொண்டே வந்தவரை திடீரென்று காணவில்லை; மறைந்துவிட்டார். அனைவரும் வியந்து வந்த வழியே திரும்ப நடந்தனர். பாதையின் நடுவே இருந்த பள்ளத்திலிருந்து அபயக்குரல் ஒலித்தது.

'ஐயோ! துாக்கிவிடுங்கள்!' என்று அவர் கத்தினார். 'மேலே இருக்கிற விண்மீன்களின் போக்குகளை பக்குவமாய்ப் பார்த்துச் சொல்லும் அவருக்கு கீழே இருக்கிற சிறுகுழியை பார்க்க தெரியவில்லையே!' என பலரும் முணுமுணுத்தனர். இப்படித்தான் பாடக்கருத்துகள் குறித்து ஆழ்ந்த அறிவு கொண்ட ஆசிரியர்கள் பலரும், அதனை தன்னைவிட கீழ்நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு எப்படி எடுத்து சொல்வது எனத் தெரியாது வீழ்ந்துவிடுகின்றனர். இதுமாதிரிதான் கல்விமுறையில் பல அணுகுமுறைகள் அண்ணாந்து பார்ப்பதாகவே உள்ளன. நிகழ்காலத்தின் தொடர்ச்சியாக தொலைநோக்குப் பார்வைகள் இருப்பின் நல்லது.

மகிழ்ச்சி ஆசிரியர் :'கனவு ஆசிரியர்' மகிழ்ச்சியுடன் இருப்பவர். அவர் பிரதிபலன் கருதிப் பணியாற்றுவதில்லை. குழந்தைகளிடம் தனக்கென்று எந்த எதிர்பார்ப்புமின்றி பணியாற்றுபவர். குழந்தைகளின் வெற்றியில் இருந்து மகிழ்ச்சி அடைபவர். குழந்தைகளின் வெற்றியே அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. குழந்தைகளின் மகிழ்ச்சியே அவரை இயக்கும் உந்துவிசை. கற்பித்தல் வழியாக மாணவர்களின் தனித்திறனைக் கண்டுபிடித்து உதவுவார். அதனால்தான் அவர் கல்லில் சிலைகளைக் கண்டுபிடிக்கின்றார். மூங்கிலைப் புல்லாங்குழலாக்குகிறார். 'கனவு ஆசிரியர்' உளவியல் உணர்ந்தவர். அவர் புலம்புவதில்லை. சபிப்பதில்லை. சினம் காட்டுவதில்லை.

'கனவு ஆசிரியர்' மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவர். 'உன்னால் முடியும்' என உற்சாகப்படுத்துபவர். அவரே வானத்தையும் காட்டுகிறார். சிறகிற்கும் வலுவூட்டுகிறார். 'கனவு ஆசிரியர்' மாணவர்கள் தடுக்கி விழுந்தால் தாங்கி நிறுத்துபவர்.

வளர்த்து கொள்பவர் :'கனவு ஆசிரியர்' தன்னை தொடர்ந்து வளர்த்து கொள்பவராக இருக்கின்றார். தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே தொடர்ந்து கற்பிக்க முடிகிறது. அதனால் தான் கற்பித்தலை 'கற்றுக் கொடுத்தல்' என்கின்றோம். யார் கற்பதை நேசிக்கிறார்களோ அவர்களால் மட்டுமே கற்பித்தலை நேசிக்க முடிகிறது. கற்பது, கற்பித்தலுக்கு உதவியாகிறது. அதனால்தான் 'கனவு ஆசிரியர்' தொடர்ந்து தன்னை வளர்த்து கொள்கின்றார்.

'கனவு ஆசிரியர்' தனது மாணவர்களை உன்னிப்பாக கவனிப்பவர். கல்வி முறை குறித்து தொடர்ந்து அலசுபவர். அமெரிக்க கல்வியாளரான பள்ளி ஆசிரியர் ஜான் ஹோல்ட் இவ்வாறாக தன்னிடம் பயிலும் குழந்தைகளை உன்னிப்பாக கவனித்து 'நம் பள்ளிக்கல்வி முறை, சிந்திக்கும் திறனை ஒடுக்குகின்றது' என முடிவுக்கு வந்து, 'குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர்' என்ற நுாலை எழுதினார். 'கற்றல், சிறுவர்களுக்கு இயற்கையாக வருவது. இத்திறன் பள்ளியில் சீரழிக்கப்படுகிறது' என்பது இவர் வருத்தம். இப்படிப்பட்ட 'கனவு ஆசிரியர்கள்' சிறுவர்களை வருத்தாமல், கற்றுக் கொள்ளும் திறனையும் சிந்திக்கும் பழக்கத்தையும் தரும் கல்விமுறையை வலியுறுத்துபவர்களாக இருப்பார்கள்.

ஏ.எஸ். நீல் எழுதிய 'சம்மர் ஹில்' புத்தகமும் இதையே வலியுறுத்துகிறது. தமிழகத்திலும் ஆசிரியர்கள் தமது வகுப்பறை நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து எழுதுகிறார்கள். ஆனால் நமது கல்வி முறை குறித்து கருத்துக்களை ஆராய்ந்து வெளிப்படுத்துவதில்லை. அந்த ஆராய்ச்சி மனப்பான்மையுடன் 'கனவு ஆசிரியர்கள்' தோன்றினால் பள்ளிக் கல்வி இன்னும் வளரும்!

தொடரும் உறவு :ஒருவர் முகத்தைப் பார்த்து பேசுவது, இன்னொருவர் நம்மிடம் பேசும் போது கவனித்து கேட்பது. ஏதாவது வேண்டுமென்றால் கேட்பது, தனக்கு பிடிக்காததை யாராவது செய்தால் அப்படி செய்ய வேண்டாம் என்று கூறுவது இம்மாதிரியான எளிமையான திறமைகளை குழந்தைகளுக்கு கற்று கொடுப்பவர்களாக இக் 'கனவு ஆசிரியர்' இருக்க வேண்டும். இத்திறமைகள் சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான அங்கமாக இயங்க சிறுவர்களுக்கு தேவையான ஒன்றாகும்.

ஆசிரியர்,- மாணவர் உறவு வகுப்பறைக்குள் தொடங்கி வாசலில் முடிந்து விடுவதில்லை. வாழ்நாள் முழுவதும் தொடரும் நட்பு. எனவேதான் 'கனவு ஆசிரியர்கள்' எப்போதும் குழந்தைகள் குறித்தே சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். வாடிய முகத்தை வாசிக்கத் தெரிந்த ஆசிரியரால்தான் வழித்துணையாய் நின்று வழிகாட்ட முடியும். தோழமையோடு தோள்கொடுக்க முடியும். 'கனவு ஆசிரியர்' வானத்தில் இருந்து மழையாய்ப் பொழிபவர் அல்ல. நிலம் அறிந்து விதைப்பவர். தேவை அறிந்து உரம் போடுபவர். வேலி அமைத்துப் பாதுகாப்பவர். அறுவடை வரையில் அரவணைப்பவர்.

இந்த 'கனவு ஆசிரியர்களே' தமிழகத்தின் இன்றைய தேவை!

--க.சரவணன்,
தலைமை ஆசிரியர்,
டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி, மதுரை
99441 44263

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Natarajan Arunachalam - TRICHY,இந்தியா

    ஒருமைக்குள் தான் கற்ற கல்வி ஏழு பிறப்பிற்கு ஏழு தலைமுறைக்கு இல்லை காலம் முழுமைக்கும் நமக்கு அப்படி இருக்க அரசு கல்வியை எப்படி நோக்க வேண்டும் ? சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாமா ?? இடஒதுக்கீடு என்றும் , லஞ்சம் பெற்றும் கொள்ளை போகலாமா ???அரசு பள்ளிகள் தோற்பது எதனால் ?? இது ஒன்றே முக்கிய காரணம் அமைச்சர்களே கல்வி அறிவில்லா பன்னாடைகள் எனும் போது கல்வித்திட்டம் எப்படி செயல்படும் ?? மக்களே சிந்திப்பீர் கல்விக்காக உங்கள் ஆன்மாவை ஈடுபடுத்துங்கள் உங்கள் தலைமுறை வெல்லும் எதற்காகவும் அரசை நம்பி இருக்காதே சுய சிந்தனை மாற்று எண்ணம் கொண்டு செயல்படு மக்களே

  • Agrigators - Chennai,இந்தியா

    பல ஆசிரியர்கள் தன்னலம் கருதாமல் உழைக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை பாதம் தொட்டு வணங்குவோம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement