Advertisement

வேர்களை விசாரியுங்கள்

வீட்டுக்கு ஒரு மரமாவது நடுங்கள்... சிலருக்கு இங்கே வீடே மரங்கள்தான்!' மரங்கள் மனிதனுக்கு சுவாசத்தை வழங்குகின்றன. அவசர உலகமாக கருதிக்கொண்டிருக்கும் இன்றைய உலகில் வீடுகளைப் பற்றியே நினைக்க நேரமில்லாத போது மரங்களையும் செடி கொடிகளையும் நினைக்க எப்படி நேரமிருக்கும் என்பதே ஆதங்கம். முப்பது வருடங்களுக்கு முன்னர் தண்ணீர், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் என்று யாராவது ஆரூடம் கூறியிருந்தால் சிரித்திருப்போம்... தண்ணீரை யாராவது விற்பார்களா என்று? பாலின் விலையை விட அதிகமாக விற்கப்படுகிறது தண்ணீர் பாட்டில்கள். சுற்றுப்புறச் சீர்கேடுகளால் உலகம் மாறி வருகிறது என சொல்வதை விட உலகம் அழிந்து வருகிறது என்றே சொல்லலாம்.

பசுமையான நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்காரர்களின் வசம் போய் விட்டது என்றே சொல்லலாம். சராசரியாக ஒரு மனிதன் பிறப்பில் இருந்து இறப்பு வரை அதாவது மரத்தால் செய்யப்பட்ட தொட்டிலில் ஆரம்பித்து இறுதியாக எரிப்பதற்கு பயன்படும் சிதை வரைக்கும் சுமார் 200 மரங்களையாவது பயன்படுத்துகிறான் என்றே பசுமை ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனால் வாழ்நாளில் நாம் எத்தனை மரங்களை வளர்த்திருக்கிறோம்?
பசுமை உலகம்:
'பாலைவனம் சோலைவனமாக வேண்டும் பசுங்கிளிகள் அங்கிருந்து பாடவேண்டும்'என்பார் கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலங்களை வைத்து மிகச் சிறப்பான முறையில் தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று இலக்கியம் காட்டுகிறது. குறிஞ்சியும் முல்லையுமே ஒன்றுக்கொன்று திரிந்து காடும் மலையும் கலந்த பகுதிகளே பாலை என்று நமது முன்னோர்களின் வரலாறு கூறுகிறது. பாலைவனமாக ஒருபோதும் நம்முடைய தமிழகம் இருந்ததில்லை.

அத்தனை சிறப்பான பூமியாகவே உலகமும் இருந்தது. பசுமையான உலகமே நாம் அனைவருக்கும் நல்லது. பச்சைப்பசேல் என்ற வயல்களைப் பார்க்கும்போதெல்லாம் நமது மனம் எத்தனை சந்தோஷம் கொள்ளும் என்பதை நினைத்துப்பாருங்கள். நம்மால் மிகப்பெரிய காடுகளை வளர்க்க இயலுமா? வீட்டில் சிறிய இடத்தில் அழகான தோட்டம் வளர்க்கலாம். அந்த இடமில்லாவிட்டால் சில நல்ல செடிகளையாவது நடலாம்தானே. இந்த சிறிய முயற்சிக்கு நமக்குத் தேவை பெரிய பணமெல்லாம் இல்லை. நல்ல மனமும் இயற்கை குறித்த ஒரு விழிப்புணர்வு மட்டுமே. நாம் நட்ட செடி தளிர்க்கும்போதோ பூக்கும்போதோ அல்லது அதன் கனிகளையும் காய்களையும் ருசிக்கும் போதோ ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

'வர வர வெயில் அதிகமாயிடுச்சு மண்டைய பொளக்குற வெயிலு. ஓசோன்ல வேற ஓட்டை விழுந்திடுச்சாம்' என்ற வகையிலான பேச்சுகளை நாம் இப்போதெல்லாம் சாதாரணமாகவே கேட்டு வருகிறோம். அனைத்து விஞ்ஞான ஆராய்ச்சிகளும் பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே போகிறது என்றே சொல்லி வருகிறது. பெரிய மரங்களையும் காடுகளையும் அழித்துவிட்டோம். விலங்குகள் எல்லாம் தாகம் தேடி வயல்வெளிகளை நோக்கி வருகின்றன. இவை அத்தனைக்குமான தீர்வே நமது வீடுகளிலோ அல்லது நாம் வேலை செய்யும் இடங்களிலோ மரக்கன்றுகளை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்ப்பதுவே ஆகும்.

நமது உயிர்:
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை கண்டறிந்தவரே நம் நாட்டுக்காரர்தானே. அதைவிட முக்கியம் தாவரங்களால்தானே நமக்கும் உயிர் என்பதை உணர்ந்து கொண்டாலே போதும் நாம் தோட்டங்களை பராமரிக்கும் அற்புத பணியினை செய்ய இயலும். நம்மையறியாமலே நம் முன்னோர்கள் சில மரங்களை கோயில்களிலும் வீட்டிலும் வைத்து வளர்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அது ஆன்மிக ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் நமக்கு நல்ல பலன்களையே கொடுத்துள்ளது எனில் அது மிகையாகாது. சுவாசம் நமக்கு மிக அழகாக அமைதல் வேண்டும் என்பதற்காகவே இன்றுரை நம்முடைய பெரியவர்கள் கோயிலுக்குச் சென்றால் அங்கே ஐந்து நிமிடங்களாவது அமர்ந்து பின்பு வரவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஒவ்வொரு கோயிலிலும் அந்த ஊரின் அடையாளமாக தலவிருட்சம் அமைக்கப்பட்டிருக்கும். அதுவே அந்த இடத்தின் தன்மையை விளக்குவதாக அமையும்.

'காணிநிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்'
என்று கேட்கும் பாரதியின் அடுத்த வரிகளே அங்கு பத்து பதினைந்து தென்னை மரங்கள் வேண்டும் என்றே கேட்பான் பாரதி. மரங்களின் மகத்துவத்தை உணர்ந்தவன் பாரதி. அவனுக்கு பாடல் வாய்த்த இடமெல்லாம் பசுஞ்சோலையாகத்தான் இருந்தது. புதுவையில் அவன் பாடிய பாடல்கள் அனைத்துமே சச்சிதானந்தாசாமி கோயில் அருகே இருக்கும் கோயில் ஒட்டிய குயில்தோப்பில்தான் அரங்கேறின. மரங்களும் மலைகளும் சோலைகளுமே அவனுடைய பாடல்களுக்கு காரணமாக அமைந்தன.

சங்கிலி தொடர்பு:
நமக்கும் மரங்களுக்கும் உள்ள ஒரு சங்கிலித் தொடர்பு நீங்களெல்லாம் அறிந்த ஒன்றே ஆகும். அது பச்சையம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகையில் நமக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. நம்மிடமிருந்தே கார்பன்டை ஆக்சடை பெற்றுக் கொள்கிறது. இந்த சம நிலை, உடைய ஆரம்பித்து மரங்களும் காடுகளும் அழிய ஆரம்பித்து உள்ளதால் அதனைச்சார்ந்த பறவைகளும் விலங்குகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலத்தில் ஆக்சிஜனை அடைத்து விற்கும் நிலைக்கு கூட வந்திடலாம். நமக்கு தலையில் இருக்கும் முடியானது நம்மை எத்தனை அழகோடு வைத்திருக்கின்றன என்று நமக்கு புரியும். அது போலவே மரங்களும் இந்த பூமிக்கு அழகை சேர்ப்பது மட்டுமல்ல ஆதாரமாகவே இருக்கின்றன. நமது வாழ்க்கை நமக்கு மட்டுமல்ல அது சமூக மாற்றத்திற்கான ஒரு விதையாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும் நம்மை புத்துணர்வோடு வைத்திருக்க நமக்கு அவசியமானது சுத்தமான காற்றே ஆகும். இயற்கைதான் அந்த சுத்தமான காற்றை நமக்குத் தருபவை. ஏக்காரணம் கொண்டும் நாம் அதை இழந்துவிடுதல் கூடாது. மாதம் மும்மாரி பொழிந்த தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிப்பதை வேதனையோடு பார்க்க முடிகிறது.

மாற்றம் செய்வோம் :
பொதுவாக பெரிய அளவிலான மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதை நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். நமது வீடுகளில் நாம் நடும் ஒவ்வொரு செடியும் இந்த உலகத்தை பசுமையாக மாற்றப் போகிறது என்ற நம்பிக்கையில் நடுங்கள். தண்ணீர் ஊற்றும்போது மகிழ்ச்சியாக ஊற்றுங்கள். அருமையாக அதனுடைய தண்டு, கிளை, வேர் ஆகிய அனைத்தையும் சிறிது நேரமென்றாலும் அன்போடு பேசி அதை வருடுங்கள். அதிலிருந்து கிடைக்கும் பூக்களையும் கனிகளையும் சிறிது காலமாவது அதிலிலேயே விட்டு ரசியுங்கள். அதன்பின்னர் கைகளால் பறித்து கொண்டாடி மகிழுங்கள். ஒவ்வொரு நாளும் பூத்து மகிழும் பூக்களைப்போல மகிழ்ச்சியாக மலருங்கள். அந்த நாளை மிக மகிழ்வோடு மலர்ந்த முகத்தோடு கொண்டாடி மகிழ்வோம்! இனி, வேர்களையும் விசாரியுங்கள் மரங்கள் மட்டுமல்ல மனிதமே மலர்ச்சியடையும்!

--பேராசிரியர் சங்கர ராமன்,
எஸ்.எஸ்.எம்., கலை அறிவியல் கல்லுாரி, குமாரபாளையம்,
99941 71074

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement