Advertisement

எது தேவை என்பதை முடிவு செய்வது யார்

?
இப்போது திடீரென, 'இந்திரா அறிவித்த அவசர நிலை, நாட்டின் ஜனநாயகத்தை அழித்த செயல்' என, ஆளும், பா.ஜ., கட்சி பேசுவது, ஏன் என்ற கேள்வி எழுந்து விவாதமாகி விட்டது.ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்சிகள் உள்ள நாட்டில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பற்றிய முரண்கள், இப்போது அரசியல் அரங்கில் பேசப்படுவது, அதை ஒரு கிரியா ஊக்கியாக பயன்படுத்தி, போராடும் முயற்சிகள் அதிகரித்திருக்கின்றன.அதற்கு, பா,ஜ., கட்சி மத்தியில் ஆட்சி பெற்றிருப்பதும், பல்வேறு மாநிலங்களில் ஆட்சி நடத்துவதும் காரணமாகக் கூறலாம். மாபெரும் கட்சியாக பல ஆண்டுகள் மக்கள் கேள்வி ஏதும் எழுப்பாமல், காங்கிரஸ் இருந்த காலம் மாறிவிட்டது. மாநிலங்களில் ஜாதிய உணர்வுகளில் ஆட்சியை வைத்திருந்த தலைவர்களிடம், எதிர்கால ஓட்டு வங்கியை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்ற அச்ச உணர்வு வந்துள்ளது.சுதந்திர நாட்டில், ஜனநாயகம் எந்த சூழ்நிலையிலும் கேள்விக் குறியாகக் கூடாது.இந்திரா பிறப்பித்த அவசர நிலைக்கான, ஜூன் 26, 1975 அறிவிப்பில், அவசர அவசரமாக கையெழுத்திட்ட ஜனாதிபதி, பக்ரூதீன் அலி அகமதுவின் செயல், சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறது.இப்போது அவசரநிலை பற்றி, 'கறுப்பு நாளாக' எதற்காக, பா.ஜ., அனுசரிக்க வேண்டும்... இந்திரா மீண்டும் பிரதமராக ஆட்சியில் இருந்தவர்; அவரும் ஒருவாறு தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டாகி விட்டது என்பது, இச்செயலுக்கான பதில் கிடையாது.ஏனெனில், எதிர்பார்த்ததை விட லோக்சபாவில், பா.ஜ., வெற்றி பெற்று மோடி பிரதமராக வந்ததும், அதற்குப் பின், அக்கட்சி, மாநிலங்கள் பலவற்றில் பெற்ற வெற்றிகளும், இன்று அக்கட்சியை இந்தியா முழுவதும் பரந்த ஒரு கட்சியாக நிறுத்தி இருக்கிறது.இவ்வெற்றி பெறும் வரை, 'காந்தியின் கொலைக்கு காரணமானவர்கள், இந்து வெறியர்கள்' என்ற அடைமொழியை, காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து, அவர்கள் மீது கூறினர். இந்தியா, 900 ஆண்டுகள் தொடர் அடிமைத் தளையில் இருந்ததால், இந்திய வரலாற்றின் பக்கங்கள் முழுவதும் ஆக்கிரமித்தவர்களின் பெருமை பேசும் வகையில் இருப்பது உண்மை. அதில், இந்தியாவின் சகிப்புத்தன்மை என்பது, 'மதச்சார்பற்ற'என்ற கருத்துடன் அரசியலமைப்பு சட்ட விளக்கமாக பேசப்படுகிறது.இன்று அதை தலைகீழாக மாற்ற வேண்டும் என்பதை விட, இந்தியாவின் பெருமை மிக்க அகிம்சையால், வந்தோரை வாழ்வித்த முறை சிறிது சிறிதாக வெளிவரும் போது, அது காங்கிரஸ் பின்பற்றிய இடதுசாரிக் கோட்பாடுகளை பாதிக்கிறது.ஒரு குடும்ப ஆட்சிக்கு இந்திரா வித்திட்டு பாதுகாத்தார் என்பதில் உண்மை உண்டு. இன்றைய காங்கிரஸ் தலைவர் ராகுலும், தன் பாட்டியை நினைவுபடுத்தி பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.அவசரநிலை அமலான போது போது, தமிழகத்தின் மிகப்பெரும் காங்கிரஸ் தலைவர் காமராஜர், இந்திராவால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். லோக்நாயக் ஜெ.பி.,யை கைது செய்ததை, காமராஜர் ஏற்கவில்லை. ஜெ.பி.,யும் அவசரநிலை அறிவிப்பை, 'விநாசகாலே விபரீத புத்தி' என்று கூறினார். 'கெட்ட காலத்திற்கு ஏற்ப புத்தியும் விபரீதமாக செயல்படும்' என்று கூறியிருந்தார். காமராஜரின் வலதுகரமாக திகழ்ந்த மூப்பனார், இந்திராவின் அதிகார கேந்திரத்துடன் சேர்ந்ததும் வரலாறு. இந்திரா பின்பற்றிய, 'ஏழ்மை ஒழிப்பு கோஷம்' ஓட்டுகளை அள்ள உதவியது உண்மை.'இன்று, பா.ஜ., ஆட்சி, ஒருவித அடக்குமுறை மனோபாவத்தை எழுப்புகிறது. ஆகவே, இது அவசரநிலையை விட மோசமானது' என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதைவிட, 130 கோடி மக்களுக்கு கவுரவப்பின்னணி இருப்பதை, உலகம் அறிந்து கொண்டிருக்கிறது.ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளை, மோடி அரசு களையெடுப்பதுடன், பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதை, உலக அரங்கம் ஆதரிக்கிறது. மாறாக, காஷ்மீருக்கு தனி ஆட்சி தர வலியுறுத்தும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான, குலாம் நபி ஆசாத் பேசிய விதம், எந்தப் பின்னணி கொண்டது என்பதை, ராகுல் விளக்கவில்லை.இன்றுள்ள நிலையில், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னோடியாக, மோடியின் நடவடிக்கைகளை விமர்சித்தாலும், 11 கோடி தொண்டர்களை, பா.ஜ., கொண்டிருக்கிறது. அதில் குடும்ப ஆதிக்கம் இன்னமும் தலைதுாக்கவில்லை. அந்த அரசு மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் தோல்வி என்றால், அதை நாடு முழுவதும் விளக்கமாக பரப்புவதில், காங்கிரஸ் பின்தங்கி விட்டது என்பதே உண்மை.மாறாக, மோடியை, 'அவுரங்க சீப்' என, காங்கிரஸ் வர்ணிப்பது மிகவும் மோசமான வெறுப்புணர்வாகும். அப்படிப்பட்ட விமர்சனம் இருக்கும் போது, அவசரநிலையை மீண்டும் நினைவு படுத்துவது, மக்களிடையே ஜனநாயகம் காக்க விரும்பிய செயலாகக் கூட கருதலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement