Advertisement

நல்லவர்..கெட்டவர்...

நல்லவர் யார் கெட்டவர்” என்பதுதான் இப்போதைக்கான கேள்வி. இதற்கு மிகச் சுலப
மாக பதில் சொல்லிவிடலாம். யாரை நமக்குப் பிடித்திருக்கிறதோ அவர் நல்லவர். யாரைப் பிடிக்கவில்லையோ அவர் கெட்டவர். இக்கேள்விக்கு இன்னொருமாதிரியும் பதில் சொல்லலாம். 'நல்லது செய்கிறவர்கள் நல்லவர்கள்; கெட்டது செய்கிறவர்கள் கெட்ட
வர்கள்'. இந்தப் பதிலைத் தொடர்ந்து எது நல்லது எது கெட்டது என்று மீண்டும் வினா எழுந்தால் நல்லவர்கள் செய்வது நல்லது. கெட்டவர்கள் செய்வது கெட்டது என்று குழப்பலாம்.
நல்லவர்கள் கெட்டது செய்ய மாட்டார்களா? அல்லது கெட்டவர்கள்தான் நல்லது செய்யமாட்டார்களா? என்று மறுபடியும் கேட்டுத் தொலைத்துவிட்டால் பேசாமல் மவுனம் சாதிக்கலாம்.
இப்போதெல்லாம் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்பதைவிடவும் நல்ல பெயர் வாங்க
வேண்டும் என்பதே முக்கியமாக இருக்கிறது. பொய் பேசுவது நல்ல
தல்ல. நல்லவர்கள் பொய் பேச
மாட்டார்கள். ஆனால் கொள்ளை
யடித்தவன் கொள்ளையடிக்கவில்லை என்று பொய் சொன்னால்
கொள்ளையடித்தது, பொய் சொன்னது ஆகிய இரண்டு குற்றங்
களைச் செய்தவனாயினும் அவற்றை மறைத்ததால் நல்லவனாகிறான்.
ஆனால் திருடியது நான்தான் என உண்மையை ஒப்புக்கொண்டால் திருடிய ஒரே ஒரு குற்றத்தோடு தீயவனாகிறான். பொய்கள் பலரை நல்லவர்களாக்கிவிடுகின்றன. பலர் இன்று குற்றங்கள் வெளித்தெரியாத காரணத்தால்தான் நல்லவர்களாக நமக்குத் தெரிகிறார்கள்.
நன்னடத்தை
இன்றைக்கு அவசரப்பட்டு யாரையும் நல்லவர் என்று சொல்ல முடியவில்லை. எனக்குத் தெரிய ஒரு படித்த பையன், பெரிய வேலை
யிலிருந்தான். புகை கிடையாது. யாரிடத்திலும் பகையும் கிடையாது.
குடி கிடையாது. நான் கொடுத்த சான்றிதழை நம்பி ஒரு பெரிய இடத்தில் பெண் கொடுத்து
விட்டார்கள். திருமணமான மறுவாரம் அந்தப் பெண் வந்து
என்னிடம் அழுது முறையிட்ட
போதுதான் தெரிந்தது ஒரு
அயோக்கியனை நல்லவனென்று நம்பியிருந்த என் அறியாமை.
இந்த நாட்டில் இப்போதும் சில இடங்களில் ஒரு பழக்கம்
இருக்கிறது. எங்காவது வேலைக்கு
போவதென்றால் அல்லது மேற்
படிப்பில் சேர வேண்டும் என்றால்
பிரமுகர் ஒருவரிடமிருந்து
நன்னடத்தைச் சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்கிற நிபந்தனை. பிரமுகர் என்றால் பெரும்பாலும் பொறுப்பில் இருக்கிற அரசியல்
வாதிகள்தான் பளிச்சென்று
நினைவுக்கு வருவார்கள்.
இப்படித்தான் ஒருமுறை
வலம்புரிஜானிடம் ஒரு பட்டதாரி
இளைஞர் வேலைக்குச் சேர்வதற்கான நடத்தைச் சான்றிதழ் கேட்டு வந்திருக்கிறார். “என்னைப்
போலின்றி இவர் நல்லவர்” என்று சான்றிதழ் கொடுத்தார். நல்லவர்
என்று சான்று கேட்டு நாம்
நல்லவர்களிடம் போவதில்லை என்பதைப் புலப்படுத்த வலம்புரியார் இப்படி ஒரு வேடிக்கை செய்தார். உண்மைதானே? சான்றிதழா ஒருவனை நல்லவனாக்குவது?
பொல்லாதவர்கள்
சிலநேரங்களில் கையில்
சில்லறை இருக்கிறவர்களை நல்லவர்களாகவும் இல்லாதவர்களைப் பொல்லாதவர்களாகவும் சமூகம்
சித்தரித்துவிடும். எப்போதோ படித்த கதை ஒன்று. பெரியவர்
ஒருவர் தம் தள்ளாத வயதில் ஓர் உணவு விடுதியில் ரொட்டியைத் திருடிவிடுகிறார். காவலர்களிடம் ஒப்படைக்கப்படும் அவர் திருட்டு
குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில்
நிறுத்தப்படுகிறார்.
“ஊனமுற்ற மகன், நோய்வாய்ப்பட்ட மனைவி பசி காரணமாகத் திருட வேண்டியதாயிற்று” என்ற அந்தப் பெரியவரின் வாதத்தை
நீதிபதி ஏற்கவில்லை. சந்தேகத்துக்கு
இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதற்காக முந்தைய
வாரம் ஒரு அமைச்சரை விடுதலை
செய்திருந்த அந்த நீதிபதி,
பெரியவருக்கு 5000 ரூபாய்
அபராதம் விதிக்கிறார்.
“அபராதம் கட்ட பணமிருந்தால் ஏன் ரொட்டிக்காகத் திருட்டைச் செய்யவேண்டும்?” என்று புலம்பிய
அப்பெரியவரிடம் “அபராதம் வேண்டாம்; ஆறுமாதம் சிறைக்கு
செல்கிறீர்களா?” என்று கேட்டபோது அந்தப் பெரியவர் “ஆறு மாதம் நான் சிறைக்குப் போய்
விட்டால் என்னை நம்பியிருக்கும் என் மகனையும் மனைவியையும்
யார் காப்பாற்றுவது?” என்று
அரற்றியதும் நீதிபதி யோசிக்கிறார்.
“குற்றங்களைக் காரணங்களால் நியாயப்படுத்திவிடக் கூடாது
என்றாலும் ஒருவனைத் திருடுவதற்கு நிர்ப்பந்திக்கிற சமூகமே குற்ற
வாளியாகிறது. சமூகமென்றால் யார்… நாம்தானே… என்னையும் சேர்த்து இங்கிருக்கிற எல்லோரும் இணைந்து அவருக்கென்று உதவி செய்வோம்” என்று ஒரு தொகையைத் திரட்டி அறிவுரை தந்து அனுப்புகிறார்.
நன்றாக இருக்க வேண்டும்
நாமெல்லாம் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோமே தவிர நல்லவனாக இருக்க வேண்டும்
என்று விரும்புவதில்லை.
“சென்னையில் என் பிள்ளை 'நல்லா' இருக்கிறான்” என்று
பெருமைப்படுகிற பெற்றோர்
அவன் அங்கே வசதியாக
இருக்கிறான் என்றுதான் கூறி வருகிறார்களே தவிர “சென்னையில் அவன் நல்லவனாக இருக்கிறான்” என்று கருதிச் சொல்வதில்லை. சொல்லப்போனால் இந்த நாட்டில் பெரும்பாலும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நல்லவனாக இருக்கமுடியாது.
இன்றைய இளைஞர்களில் யாரை வேண்டுமானாலும் நிறுத்தி “நீ என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டுப்பாருங்கள். 'மருத்து
வராக விரும்புகிறேன்', 'மந்திரியாக
விரும்புகிறேன்', 'விமானியாக விரும்புகிறேன்' என்றுதான் சொல்வானே தவிர நல்ல மனிதனாக இருக்கப் போகிறேன் என்று நா தவறிக்கூடச் சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் சொல்பவனை ஏற இறங்கப் பார்ப்போம்.
நல்லவனாக இருப்பதே நல்லதல்ல
என்கிற கருத்து நாட்டில் வலு
வடைந்துவிட்டது.
அன்று எல்லோரும் நல்லவர்
களாக இருந்தார்கள். அரிதாகத்
தீயவர்கள் இருந்தனர். இன்று நல்லவர்களைப் பார்ப்பதே அரிதினும்
அரிதாக இருக்கிறது. நல்லவர்கள் என்று கருதப்படுகிறவர்கள்கூட சில நேரங்களில் இடறிவிடுகிறார்கள். நல்லவர்கள்கூட யாரிடத்தில் நல்லவர்கள் எப்போது நல்லவர்கள்
என்று அறுதியிட்டுச் சொல்ல
முடியாமல் போய்விடுகிறது.
பலவீனங்கள்
பலவீனங்கள் சகஜம் தானே என்று சிலர் சப்பை கட்டுவதும்கூட உண்டு. சகஜ
மென்று எதையும் - குறிப்பாக அரசியலில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. கக்கன், காமராஜரெல்லாம் அப்படியா இருந்தார்கள்? அப்போதென்ன அரசியல்
இல்லையா… ஆட்சிகள்
நடக்கவில்லையா… நல்லவர்கள் இல்லாத சமூகத்தில் இன்று நாம் வாழ்வதே அசிங்கம், அவமானம்.
இன்றும்கூட அன்று வாழ்ந்த பல நல்லவர்களைத்தான் நாம் உதாரண புருஷர்களாகக் கூறிகொண்டிருக்கிறோமே தவிர நம்மோடு வாழ்கிறவர்களில் யாரை நல்லவர்கள் என்று சொல்லிப் பெருமைப்பட முடிகிறது? இன்று நல்லவர்களாக
இருப்பதைக் காட்டிலும்,
நல்லவராக தோன்றுவதற்கே நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம்.
சரியானவர்களைத் தேர்ந்தெடுக்காமல் சரியில்லை என்று புலம்புவது சரியல்ல.
அரசியல் என்றால் இப்படித்
தான் இருக்கும் என்று அரசியல்வாதிகளுக்கு அங்கீகாரம் தந்து
விடுகிற நாம்தான் நாடு நன்றாக
இல்லை என்று நாளும் புலம்பி
கொண்டிருக்கிறோம். நிகழ்ச்சி
யொன்று நினைவுக்கு வருகிறது. இப்படியொரு நிகழ்ச்சி மகா
பாரதத்திலும் வரும்… கிரேக்கத்
தலைநகரமான ஏதென்ஸ்
மாநகருக்கு வெளிநாட்டு
இளைஞன் ஒருவன் வருகிறான்.
பேரறிஞர் சாக்ரட்டீஸை
சந்திக்கும் அவன் “ஏதென்ஸ் நகர மக்கள் எப்படி நல்லவர்களா… கெட்டவர்களா…?” என்கிறான். “உங்கள்
நாட்டு மக்கள் நல்லவர்களாக கெட்டவர்களா?” என்று சாக்ரடீஸ்
திருப்பிகேட்டபோது “எல்லோரும்
அயோக்கியர்கள்” என்கிறான் அவன். “அப்படியானால் இங்கும்
நீ அயோக்கியர்களைத்தான்
சந்திப்பாய்” என்கிறார் சாக்ரட்டீஸ்.
இந்தியாவிலிருந்து ஒரு
இளைஞன் சென்றிருக்கிறான். இதே கேள்விகளின் பரிமாற்றத்
திற்குப்பின் “எங்கள் நாட்டில் எல்லோரும் நல்லவர்கள்” என்கிறான் அந்த இளைஞன். “அப்படியானால்
இங்கும் நீ நல்லவர்களைச்
சந்திப்பாய்” என்கிறார் சாக்ரட்டீஸ்.
நல்லவர்களாக நாம் இருந்தால்
நல்லவர்களைச் சந்திப்போம். இல்லையென்றால் அயோக்கியர்களைத்தான் சந்திப்போம்.
-ஏர்வாடி
எஸ். இராதாகிருஷ்ணன்
எழுத்தாளர். 94441 07879

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement