Advertisement

டிரம்ப் - கிம் காட்டிய அசாதாரண நட்பு!

நீண்ட காலமாக, வெறுப்பை காட்டிய நாடான, வடகொரியா மீது, திடீர் நட்பை, அமெரிக்க அதிபர், டிரம்ப் காட்டியது புதுமை அல்ல, மாறாக அனைவரையும் வியக்க வைக்கும் தகவலாக மாறியிருக்கிறது.அமெரிக்கா மிகப்பெரிய முதலாளித்துவ நாடு. அதை எதிர்த்து அல்லது புறந்தள்ளி வாழ்வது, உலக நடைமுறையில், சுலபம் அல்ல. கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ, எப்படி அதன் பிடியில் சிக்கினார் என்பதும், 1972ல் சீன விஜயத்தை மேற்கொண்ட அதிபர் நிக்சன் நடந்த விதம், இதற்கான சில உதாரணங்கள்.இன்று அமெரிக்காவை மட்டும் முன்னிறுத்தும் அல்லது அதன் நலனை மட்டும் பேணும் சுபாவம் உடைய, அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புகள் சில நகைப்பை ஏற்படுத்தலாம். ஆனால், சர்வாதிகாரியாக இருந்த, ஈராக்கின் சதாம் உசேன் உடன் பேச்சு நடத்தியதும், அப்புறம் அவரை குழி தோண்டிப் புதைத்ததும், அமெரிக்க வரலாற்றில் அடங்கும் தகவல்கள்.சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில், வடகொரிய அதிபர் கிம் உடன், அதிபர் டிரம்ப், 12 நிமிடங்கள் கைகுலுக்கி பேசிய விதம், இருவரும் சம அந்தஸ்தில் உள்ள தலைவர்கள் போலக் காட்டியது. ஆனால், ஆறு மாதங்களுக்கு முன், பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சிறு பிள்ளைத்தனமாக பேசியதை உலகம் அறியும்.ஆனால், இனி, வடகொரியா தன் அணு ஆயுதங்களை கட்டுப்பாட்டில் வைப்பதுடன், அதற்கான மூலக் கூறுகளை சேமிக்காது என்பது, இப்பேச்சில் முடிவான பெரிய விஷயம். தென் கொரியா, வடகொரியா மோதல் குறையலாம்.ஆப்கனில், அமெரிக்க ராணுவ வீரர்கள் காத்திருப்பதைத் தவிர்த்த டிரம்ப், இப்போது, இதன் மூலம் பாதுகாப்பு என்ற பெயரில் இப்பகுதியில் உள்ள, அமெரிக்க ராணுவத்தினரை தன் நாட்டிற்கு திரும்ப அழைத்துச் சென்று விடுவார்.அணு ஆயுதங்கள் தயாரிப்பு நிறுவனங்களை மூடச்சொல்லி, அதற்கான ஆவணங்களை முடிவு செய்வது அல்லது எவ்வாறு வடகொரியா அணு ஆயுதங்களை முடக்கும் என்ற கருத்தை, சில நிபுணர்கள் கேள்வியாக்குகின்றனர்.ஏற்கனவே, வடகொரியாவின் அத்துமீறல்களை, ஐ.நா., சாடி, சில நிபந்தனைகளை விதித்தது. அதை, வடகொரியாவின் நட்பு நாடான சீனா ஏற்க வேண்டியதாயிற்று.தற்போதும், சிங்கப்பூரில் அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்திக்கும் முன், கிம் சில ஆலோசனைகளை சீனாவிடம் பெற்றிருக்கிறார்.வடகொரியா, தென்கொரியா மக்களிடையே, நட்புணர்வு மலர வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான பனிப்போர் நிற்க வேண்டும் என்ற கருத்தை, சீனா உட்பட, பல நாடுகள் உணர்ந்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த நட்புறவை தெரிவித்த விதம், அமெரிக்க கொள்கைகள், மாற்றங்களை நோக்கி நகர்கின்றன என்பதன் அடையாளமாகும்.வடகொரியாவும், தன் வறட்டு பிடிவாதத்தை அமலாக்குவதில் உள்ள சிரமங்களை, மாறும் உலகில் அமல்படுத்த முடியாது என்பதை உணர்கிறது என்பதே, ஜூன், 12ல் நடந்த, இந்த உச்சி மாநாட்டின் வெற்றியாகும்.மற்றொரு முக்கிய அம்சமாக, நம் வெளியுறவு இணை அமைச்சர், ஜெனரல் வி.கே.சிங், வடகொரிய தலைநகரான, பியாங்கியாங்கிற்கு சென்று, கிம்மை ஏற்கனவே சந்தித்து பேசினார். அதன் பின்னணியில், வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள், பாகிஸ்தானுக்கு பயன்படும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டியது முக்கிய கருத்தாகும்.சீனாவின் ஆதரவுடன், வடகொரியா இதுவரை பல்வேறு மோதல் பிரச்னைகளை அமல் செய்து உள்ளது. சீனா, பாகிஸ்தான், வடகொரியா இணக்கம் அனாவசிய பிரச்னைகளின் களமாகும்.இதை, நீண்ட காலமாகவே, ஜப்பான் விரும்ப வில்லை. அதனால், இப்போது அணு ஆயுதக் குறைப்பிற்கு முன்வந்த, வடகொரியாவின் செயலை, ஜப்பான் ஆதரித்திருக்கிறது. முக்கியமான ஏவுகணை தளத்தை தகர்க்க, வடகொரியா ஒப்புக் கொண்டிருக்கிறது.இது, அமலாகும் பட்சத்தில், அதிபர் டிரம்ப் முயற்சிக்கு கிடைக்கும் முதல் வெற்றியாகும். மேலும், கொரிய தீபகற்ப பகுதியில் அமைதி தவழும் பட்சத்தில், அது, இந்தியாவுக்கு நல்லது.பாகிஸ்தானும், இதனால், அணு ஆயுத உட்கட்டமைப்பில் தன் இஷ்டத்திற்கு தேவைப்படும் தளவாடங்களை சேர்க்க முடியாத கால கட்டம் உருவாகி, அமைதியான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement