Advertisement

யோகாவில் '8' போடுவோம்! : இன்று சர்வதேச யோகா தினம்

'யோகா' என்பது பல நாடுகளையும் கவந்து வரும் வார்த்தை. மத்திய அரசு யோகாவை உலக நாடுகளில் பிரபலப்படுத்தி வருகிறது. மன அழுத்தம், மனச்சோர்வு, பல்வேறு நோய்களின் ஆதிக்கம், இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகுதல், கோபம், வன்முறை என தனி மனித காரணம் மட்டுமின்றி, சமூகம் சார்ந்த காரணங்களும் இன்று உலக நாடுகளை, மன அமைதியின்றி தவிக்க வைத்து விட்டது. இதனை தவிர்க்க அமைதியான வாழ்விற்கு யோகாதான் வழி என்பதை உணர்ந்து, அனைத்து நாடுகளும், இந்தியாவின் யோகக்கலையை பின்பற்ற தொடங்கியுள்ளன. யோகா என்றால் கை, கால்களை துாக்கி, மடக்கி, நிமிர்ந்து, குனிந்து, உட்கார்ந்து, எழுந்து செய்யும் ஆசனங்கள் மட்டும்தான் என்ற எண்ணம் காணப்படுகிறது.
ஜீவ சமாதி அடைதல் : உட்காரும் நிலை, நிற்கும் நிலை, கை, கால் விரல்களை வைத்திருக்கும்நிலை, சுவாசம், மனதின் சிந்திக்கும் திறன், என அனைத்தையுமே ஒன்றுபடுத்தி, இணைத்து, ஒரே புள்ளியில் கொண்டு வருவதுதான் திருமூலர் கூறும் யோகக்கலை. விரும்பும் செயலை அடைவதற்கு, நாம் விரும்பும் ஒன்றை அடைவதற்கு யோகக்கலை அவசியமாகிறது. பிடிவாதம் பிடிப்பவர்களை பார்த்து நமது முன்னோர்கள் சொல்வர், 'ஒற்றை காலில் நிற்கிறான்; தலைகீழாய் நிற்கிறான்,' என்று. ஆம், நாம் விரும்பும் எந்த ஒரு பொருளும் கிடைக்கும் வரை பிடிவாதமாக நின்று, அதில் வெற்றி அடைவது யோகக்கலையின் முதல் அம்சம். பிறருக்கு தீமை செய்யாமல் இருத்தல், ஒழுக்கமான வாழ்க்கையை பின்பற்றுதல், மனம் அங்கும், இங்கும் அலைபாயாமல் தடுத்தல், அவ்வாறு நிலைநிறுத்திய மனதை நீண்ட காலம் ஒருங்கிணைத்தல், அமைதியை விரும்புதல், பல இருக்கை நிலைகளில் உடலை வலிமையாக வைத்து கொள்ளுதல்,சீரான சுவாசம் செய்தல், இறுதியாக இறப்பே வேண்டாம் என இருந்த நிலை மாறி, தானாக ஜீவ சமாதி அடைதல் ஆகியன யோகா கலைகளின் '8' நிலைகளாக திருமூலர் குறிப்பிடுகிறார்.
யோகா தரும் சுவாசம் : திருமூலர் யோகாக்கலையின் அடிப்படையை வலியுறுத்தும் போது, 'யோகாவின் அனைத்து நிலைகளிலும் மூச்சை கட்டுப் படுத்தும் பயிற்சிகளை பின்பற்ற வேண்டும்' என குறிப்பிடுகிறார். நாம் உள்ளிழுக்கும் சுவாசமானது, நுரையீரலின் அடிப்பகுதி வரை சென்று, வியாபித்து, அனைத்து காற்று குமிழங்களிலும் பரவி, பின் சிறிது நேரம் சென்று வெளியேறுகிறது. இதனை அவர் எளிய முறையில் புருவ மத்தியிலிருந்து 12 அங்குலம் கீழாக, அதாவது நுரையீரல் கீழ் பகுதி வரை சுவாசம் செல்கிறது என்றும், ஆனால் நாட்கள் செல்ல செல்ல நமது இளமை காலம் மாறி பருவ வயது, நடுத்தர வயது, முதுமை என பல பரிணாமங்களை எடுக்கும் பொழுது, இந்த ஆழமானது குறைந்து 8 அங்குலமாக மாறுவதால் நுரையீரல் காற்று கொள்ளளவு குறைந்து, நமது செல்கள் காற்றை கிரகித்து வைத்து ஆற்றலாக மாற்றும் தன்மை நிலை குறைகிறது. இதுவே முதுமையின்காரணமாக அமைவதால், இந்த காற்றை 12 அங்குலம் நுரையீரலில் செல்வது போல் நாம் நிலை நிறுத்தினால், நிச்சயமாக ஆயுளை வெல்லலாம் என்று 'யோகம் தரும் சுவாசம்' என குறிப்பிடுகிறார்.
மனத்துாய்மை : மனதை சுத்தமாக வைத்திருப்பதே யோகாவின் முதல் படியாக கருதப்படுகிறது. மனதை சுத்தமாக, கெட்ட எண்ணங்களும் மனதை தீண்டாமல் பாதுகாத்து கொள்பவர்கள், பிறருக்கு தீமை செய்ய மாட்டார்கள். தங்களுக்கு கிடைக்கும் உணவு, பொருள்களை பிறருக்கு கொடுப்பர். மது அருந்தலை தவிர்ப்பர், காமவெறி குறையும். மனதை துாய்மையாக வைத்திருப்பதன் மூலம் மனம் தெளிவு பெறலாம்.நாம் செய்யும் செயல்களில் உண்மையாக பிறருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் நன்மை ஒன்றே குறிக்கோளாக கொண்டு இருக்கும் நிலை 'நியமம்' எனப்படும். வேதம் மற்றும் தங்கள் சமயங்களில் ஈடுபாடு அதிகரித்து, அவற்றின் கருத்துக்களை பின்பற்றுபவர்கள், நியமத்தை பின்பற்றுவார்களாக கருதப்படுகின்றனர்.மனம் தெளிந்து, தான் செய்யும் செயல்களில் நல்லதொரு நியதியை கடைப்பிடிப்பவர்களுக்கு உடலை பலப்படுத்தும், மனதை ஒருங்கிணைக்கும், உடலையும் மனதையும் ஒன்றுபடுத்தும் ஆசனம் அவசியமாகிறது. ஆசனங்களால் மனம் தெளிவடைவதுடன் சோர்வு நீங்குகிறது. பத்மாசனம் - தாமரை போல் அமர்ந்திருத்தல், சகாசனம் - சம்மணம் இட்டு அமர்ந்திருத்தல், பத்திராசனம் - கால் மேல் கால் போட்டு அமர்ந்திருத்தல், சிங்காசனம் - சிங்கம்போல் கண்களை கூர்மையாக பார்த்து அமர்ந்திருத்தல், கோமுகாசனம் - பசுமாட்டை போல் அமைதியான பார்வையுடன் இருத்தல், வீராசனம் - எதையும் வெற்றி கொள்ளும் நிலையுடன், வெற்றி பார்வையுடன் இருத்தல் போன்ற ஆசனங்களை திருமூலர் அடிப்படை ஆசனங்களாக குறிப்பிட்டுள்ளார்.பிரணாயாமம் என்ற மூச்சு பயிற்சிகாற்றை இடது நாசி துவாரம் மூலமாக முழுவதுமாக உள்ளே இழுத்து, சற்று நேரம் நிலை நிறுத்தி, பின்பு வலது நாசி துவாரம் மூலமாக வெளியேற்றுதல் பிரணாயாமம் என்று சொல்லக்கூடிய மூச்சுப்பயிற்சியின் முதல் கட்டமாகும். இதேபோல் நாசி துவாரத்தை மாற்றி மீண்டும் செய்ய வேண்டும். இவ்வாறு மூச்சு பயிற்சியை சீரான முறையில் செய்வதால் நுரையீரல் எங்கும் காற்று வியாபித்து அனைத்து உறுப்புகளுக்கும் சீரான அளவில் காற்று செல்கிறது.நமது மனமானது அங்கும், இங்கும் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே நேரங்களில் இரண்டு வேலை செய்வது அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வேலைகளை செய்வது அதில் கவனம் செலுத்துவது தற்போது அதிமாகி வருகிறது. மனம் வெளியே செல்ல விடாமல் தடுத்து, மனதில் அமைதியை ஏற்படுத்தி, மனதை நிலை நிறுத்துதலே பிரித்தியாகாரம் என்ற மனக்கட்டுப்பாடு ஆகும்.படிக்கும் பொழுது மருத்துவராக வேண்டும். பொறியாளராக ஆக வேண்டும் என்ற கனவு காணும் நாம், அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்றால், அதில் வெற்றி காண முடியாது. அதுபோல் இடை விடாது சிந்தனையை நிலை நிறுத்தி, முயற்சியை கை விடாமல் அதில் வெற்றி காண்பதே தாரணை எனும் விடா முயற்சியாகும்.
நம்மை சுற்றி இருக்கும் ஓசை, இரைச்சல் என அனைத்துமே நம் செவி வழியாக மூளையை அடைந்து, நமக்கு தேவையற்ற கோபத்தையும், எரிச்சலையும், மனது தடுமாற்றத்தையும் உண்டாக்குகின்றன. இதனை கட்டுப்படுத்தும் நிலையே தியானம் என்ற மவுன நிலையாகும்.சமாதி நிலை எனும் இறை நிலைஅட்டாங்க யோகம் என்று சொல்லக்கூடிய திருமூலரின் எட்டு யோக நிலைகளின் இறுதியான நிலை சமாதியாகும். ஏழு யோக நிலைகளையும் கடந்த ஒருவர், இறுதியாக யோகத்தின் பூரண நிலையான ஜீவசமாதியை அதாவது உடலுக்கு எவ்வித வருத்தமும் இல்லாமல் தானாகவே இந்த உடலை விட்டு, இந்த உயிரை வெளியேற்றும் நிலை தான் ஜீவசமாதி ஆகும். 'வந்தவர் யாரும் தங்கியது இல்லை' என திருமூலர் இந்த உடலை குறிப்பிடுகிறார்.இந்தியாவின் பெரும் சொத்து யோகா. இந்து சமய கடவுள்கள் யோக நிலையிலேயே இருக்கின்றனர். நமது புராணங்களும், இதிகாசங்களும், கூறும் உருவங்களும், வடிவமைப்புகளும், யோக இருக்கை நிலைகள், முத்திரைகள் ஆகியவற்றையே குறிக்கின்றன. ஆரோக்கியமான, அமைதியான சமுதாயத்திற்கு திருமூலரின் எட்டு யோக நிலைகள் பெரிதும் துணை புரியும். யோகாவை பின்பற்றுவோம்; நோயின்றி வாழ்வோம்; ஆரோக்கியமான... அமைதியான சமுதாயம் படைப்போம்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்சித்த மருத்துவர், மதுரை98421 67567

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement