Advertisement

சொல்லும் விதமே வெல்லும் விதம்

பேசாதிருந்த மனிதன் மொழிவழி பேசத்துவங்கியது ஆரம்ப கால நாகரிகத்தின் உச்சநிலை. மனிதனை தவிர உயிரினங்களில் கிளி மட்டுமே பேசுகிறது என்கிறோம். அழகாகவும், அடக்கமாகவும் அது சொல்லும் மொழி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பேச்சால் மற்றவரை கவரவும் முடியும், கலவரப்படுத்தவும் முடியும். பிறருக்கு பயன்படும் சொற்களையே பயன்படுத்துதல் வேண்டும் என்கிறார் - வள்ளுவர்.
'தீயினாற் சுட்ட புண் உள்ளாறும்ஆறாதே நாவினால் சுட்ட வடு'-என்ற வள்ளுவர். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று'- என்ற குறளில் பொய் சொல்லாமலிருந்தாலே போதும்,வேறு அறப்பணிகள் செய்வது அவசியமில்லை என்கிறார். பிறரை பழித்து பேசுவது பாவம் என்றால் அதையே லாபம் என நினைப்போரும் உண்டு. தரம் தாழ்த்தி புறம் சொல்வதை பொழுது போக்காகவே கொண்டிருப்போரும் உள்ளனர். அதனால் மனிதனை பேசத்தெரிந்த மிருகம் என்றனர். ஒரு சொல்லை சொல்வதற்கு முன் இதனால் நமக்கும், நம்மை சார்ந்தவருக்கும் என்ன பயன் விளையும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். சிதறிப்பாய்ந்த வில் அம்பும், சிந்திக்காமல் உதிர்த்த சொல்லும் கொண்ட இலக்கை அடைவதில்லை.பூங்காவிற்கு சென்ற லியோ டால்ஸ்டாய் அங்கே உட்கார்ந்திருந்தவரிடம் 'எப்படி இருக்கிறீர்கள்' எனக்கேட்டார். அதற்கு அந்த நபர் 'முன்பின் தெரியாதவர்களிடம் பேசலாமா' எனக்கேட்டு எழுந்து சென்றுவிட்டார். மறுநாளும் அங்கு சென்ற டால்ஸ்டாய் அந்த நபர் உட்கார்ந்திருப்பதை கண்டு 'நாம் நேற்றே அறிமுகம் ஆனோம். இப்போது பேசலாமா' எனக்கேட்டார். உடனே அந்த நபர் சிரித்தவாறே அன்று முதல் நண்பரானார். அந்தளவிற்கு சொல்லின் வெற்றி என்பது சொல்பவரின் நிதானத்தில் தான் உள்ளது.
பேசுவது எப்படி : ேஷக்ஸ்பியரிடம் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருந்த போது இடையில், 'ஆனால்' என்றார். இடைமறித்த ேஷக்ஸ்பியர் நண்பரிடம் 'இது வரை நீங்கள் கூறிய அனைத்தும் நன்றாகவே இருந்தது. இப்போது நீங்கள் சொல்லிய ஆனால் என்ற வார்த்தை தான் எனக்கு பிடிப்பதில்லை. அந்தளவிற்கு ஆனால் எனும் வார்த்தை நம் முயற்சிக்கும், முன்னேற்றத்திற்கும் ஒரு தடைக்கல்,' என்றார். பேசும்போது நல்ல வார்த்தைகளை பயன்படுத்துதல் வேண்டும் என்பது முன்னோர் வழி.கிளாட்ஸன் என்பவர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக நான்கு முறை பதவி வகித்தவர், என்றாலும் இவருக்கும் பேரரசி விக்டோரியா மகாராணிக்கும் கொஞ்சம் கூட ஒத்து வராது. காரணம் கிளாட்ஸன் பேசும் முறை அவருக்கு பிடிப்பதில்லை. இந்த பிரதமர் என்னிடம் நேரில் பேசும்போது கூட பாராளுமன்றத்தில் உரையாற்றுவது போலவே பேசுகிறார் என்பாராம் பேரரசி. எங்கே யாரிடம் பேசுகிறோமோ அதற்கு தக பேசுவது நன்மைதரும்.
பழித்துரைத்தல் பாவம் : மனிதனை படைத்த இறைவன் மொழியை படைக்கவில்லை. மொழியை தவறாக பயன்படுத்தலாம் என நினைத்திருக்கக்கூடும். பொருளீட்டி புதுவாழ்வு வாழ பூம்புகாரில் இருந்து மதுரை நோக்கி சென்ற கோவலனும், கண்ணகியும் வழியில் சமணத் துறவி கவுந்தியடிகளை சந்திக்கின்றனர். மூவரும் நடைபயணம் செல்லும் போது எதிரே ஒரு தம்பதியர் வருகின்றனர். கோவலன், கண்ணகியின் நிலையை பார்த்த இருவரும் கேலி பேசுகின்றனர் இதை கண்ட சினமே அறியாத கவுந்தியடிகள் சினம் கொண்டு 'முள்ளுடைக்காட்டில் முதுநரியாகுக', என சபித்து விடுகிறார். கேலி பேசிய இருவரும் கிழட்டு நரிகளாக மாறி காட்டிற்குள் ஓடி மறைந்தனர். மற்றவர் தாழ்வை கண்டு நெகிழாமல், இகழ்ந்து மகிழ்வோர் இத்தகைய நிலை அடைவர் என்கிறார் இளங்கோவடிகள்.
சொல்லும் விதம் : அசோக வனத்தில் சீதையை கண்டு திரும்பிய அனுமன், ராமபிரானிடம் 'சீதையை கண்டேன்' என்று சொல்லாமல் 'கண்டேன் சீதையை' என்று சொல்வதில் கண்டேன் எனும் நேர்மறை வார்த்தையை கம்பன் உடன் முன் வைப்பதை பார்க்க முடியும். நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் விளைவுகளுக்கு உரியது. தந்தை, தன் மகனை சிரமப்பட்டு படிக்க வைத்தார். மகனும் நன்றாக படித்து தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றான். ஒரு வேடிக்கைக்காக தந்தையிடம் தான் தேர்வில் தோல்வி அடைந்து விட்டதாக கூறுகிறான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார்.இன்னொரு சம்பவம் வித்தியாசமானது. மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததும் தந்தை சுரேந்திரா மகனுக்கு ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும் என ஆறுதல் கூறியதுடன் ஆடிப்பாடி தோல்வியை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு தோல்வியினால் என் மகன் மனம் துவண்டு விடக்கூடாது என்பதற்காகவும், வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும் என்பதற்காகவும், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனக்கூறியிருக்கிறார். இதை பார்த்த மகனும் படிப்படியாக கவலையிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு வந்துள்ளான். இது சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் சாகர் என்ற இடத்தில் நடந்த சம்பவம்.
பயனில சொல்லற்க : வீட்டில் இன்று டி.வி., மூலம் நாள் முழுவதும் சினிமாவும், சீரியலும் பார்ப்பதால் சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும் நேரமில்லாமல் போய்விட்டது. நடை முறைக்கான நல்லுரைகள் வழங்கி வந்தவர்கள் பலர் இன்று இல்லை. நல்லதோர் வீணையை மீட்டவும் ஆளில்லை. மீட்டினாலும் கேட்பதற்கு யாருமில்லை. நல்லவர்கள் போதனைகளை பின்பற்றி நேர்வழி நின்று சாதனை படைத்தோர் வாழ்வில் உயர்வடைந்தனர். இன்று போல் உடல் நலத்தையும், உழைத்த பணத்தையும், இழக்க காரணமான மதுப்பழக்கம் அன்று இல்லை. இலைமறைகாயாக இருந்தவைகள் எல்லாம் இன்று வீதிக்கு வந்துவிட்டன. நல்லதுக்கு காலமில்லை என திரைப்படம் ஒன்றிற்கு பெயர் வைத்தார்கள். இப்படி பெயர் வைத்தால் நல்லது செய்ய யாரும் முன் வரமாட்டார்கள் என்றதுடன், 'நல்லவன் வாழ்வான்' என எம்.ஜி.ஆர்., படத்தின் பெயரை மாற்றினார். சொல்லுகின்ற சொல் நல்லவையாகின், செய்யவிருக்கின்ற செயலும் நல்திசை நோக்கியே நகரும். பேசும்போது பெரியோரிடம் பணிவும், இளையோரிடம் கனிவும் காட்டவேண்டும். கடுஞ்சொல் வீசி வெறியாளராவதை தவிர்த்து, கனிவான சொற்களை பேசி வெற்றியாளராக முயல்வோம்.--
ஆர். சுகுமார்நில அளவை ஆய்வாளர் (ஓய்வு)சிவகங்கை77087 85486

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement