Advertisement

குளங்களை நிரப்புது வெள்ளம்; குதூகலிக்குது உள்ளம்!

கோவையை ஒட்டிய, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை தொடர்வதால், நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது; குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில், நொய்யல் நீர் வழித்தடத்தில், 24 குளங்கள் அமைந்துள்ளன; கூடுதுறையில் துவங்கும் நொய்யல் ஆறு, சித்திரைச்சாவடி அணைக்கட்டை சந்தித்ததும், இரண்டாக பிரிகிறது. ஒரு வழியில் புதுக்குளம், கோளாரம்பதி, நரசம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன் (குமாரசாமி) குளம், செல்வ சிந்தாமணி குளத்துக்கு நீர் வரும்.


மற்றொரு பிரிவாக, குனியமுத்துார் அணைக்கட்டுக்கு வந்து, கங்கநாராயணசமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, பேரூர் சுண்டக்காமுத்துார் குளம் மற்றும் செங்குளத்துக்கும், கோயமுத்துார் அணைக்கட்டு (சேத்துமா வாய்க்கால்) வழியாக, உக்கடம் பெரிய குளம் மற்றும் புட்டுவிக்கி அணைக்கட்டுக்கு தண்ணீர் செல்லும். இங்கிருந்து வழிந்தோடி வந்து, வெள்ளலுார் அணைக்கட்டில் பிரிந்து, குறிச்சி குளத்துக்கும், வெள்ளலுார் குளத்துக்கு ராஜவாய்க்காலிலும் பிரிந்து செல்லும்.கடந்த மே, 28ல் தென்மேற்கு பருவமழை துவங்கியது; கடந்த சனிக்கிழமையிலிருந்து வலுத்துள்ளது. கோவை குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், சின்னாறு, பெரியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நொய்யலின் நீர் வழித்தடத்தில் முதல் குளமான, உக்குளம் நிரம்பி வழிகிறது. நீலி வாய்க்காலில் இருந்து இக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாதை தடுக்கப்பட்டுள்ளதால், சுற்றிலும் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.


வாழை மரங்கள் மற்றும் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதி விவசாயிகள் இன்னும் ஆறு மாதத்துக்கு விவசாயம் செய்ய முடியாத சூழல் உருவாகி உள்ளது. சித்திரைச்சாவடி அணைக்கட்டு, கடந்த சனிக்கிழமை முதல், நான்காவது நாளாக நேற்றும் நிரம்பி வழிந்தது.


அணைக்கட்டை கடந்து, கால்வாயில், ஒன்றே கால் அடி உயரத்துக்கு, நீர் பாய்கிறது. சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து குனியமுத்துார் தடுப்பணைக்கு செல்லும் கால்வாய் மிகவும் குறுகலாக இருப்பதால், குறைந்தளவே நீர் செல்கிறது.


சேத்துமா வாய்க்கால் புதர்மண்டி இருப்பதாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், செல்வபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறும் நீர், உக்கடம் பெரிய குளத்துக்கு
வரும்போது, சேத்துமா வாய்க்காலில் கலக்க வேண்டும். இதை துார் வாராமல் இருப்பதால், கோயமுத்துார் அணைக்கட்டை கடந்து, புட்டுவிக்கி வழியாக, வெள்ளலுார் அணைக்கட்டை கடந்து, குறிச்சி குளத்துக்கு வரும் வகையில் திருப்பி விடப்பட்டுள்ளது.


ஆத்துப்பாலத்தை கடந்து குறிச்சி பிரிவு வழியாக, செல்லும் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பாலும், புதர் மண்டி இருப்பதாலும், நீர் செல்வது தடைபட்டுள்ளது. தடைகளை மீறி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், ராஜவாய்க்காலை துார் வாரினர். இதன் பயனாக, நேற்று மாலை, 4:00 மணியளவில், வெள்ளலுார் குளத்துக்கு ஓரளவுக்கு நீர் வந்தது. பருவமழை நன்றாயிருக்குமென வானிலை ஆய்வுகள் கூறுவதால், இந்த ஆண்டில் எல்லா குளங்களும் நிரம்பிவிடும் வாய்ப்பு அதிகமுள்ளது.


துார்வார நடவடிக்கை! சேத்துமா வாய்க்கால் மற்றும் வெள்ளலுார் ராஜவாய்க்காலில் நீர் செல்ல ஏற்பட்டுள்ள தடை தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில், விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், துணை கமிஷனர் காந்திமதி, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் திருச்செந்தில்வேலன், உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நேற்று கள ஆய்வு செய்தனர். வெள்ளலுார் ராஜவாய்க்காலில், 750 மீட்டர் நீளத்துக்கு அளவீடு செய்யப்பட்டது. இதில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, நீர் செல்லும் வகையில், புதரை அகற்றி, வழி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.


- நமது நிருபர் -

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • San - Madurai ,இந்தியா

  Ayyakkanu please do strike against for saving water and make awareness rather than making agitation in Delhi

 • San - Madurai ,இந்தியா

  Instead of not saving the rain water, we are begging all the time to the nearest state

 • mindum vasantham - madurai,இந்தியா

  கோவை பகுதி குடகு மலை அளவு தண்ணீர் கொடுக்கலாம் , அதன் காடுகளை நாம் பாதுகாத்தால்

 • CBE CTZN - Chennai,இந்தியா

  இந்த நீர் வழி கட்டமைப்பு கோயம்பத்தூர்க்கு கிடைத்த பொக்கிஷம்.. இதை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டும்... துரிதமாக செயல்பட்டு தண்ணீரை சேமிக்க வேண்டும்... தினமலர் இதை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லவேண்டும்.. இதை செய்தால் கோவை மக்கள் தினமலரை நினைத்து பெருமை கொள்வர்... அதை செயல் படுத்தும்வரை தினமலர் ஊடக தர்மத்திற்கு உட்பட்டு போராடவேண்டும்..

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  கடந்த 4வருஷங்கால் மழைபெய்யவேயில்லீங்க , எல்லாக்குளம் ஏரி களையெல்லாம் தூர்வாரவேண்டிய PWD இலாகா என்ன செய்தாங்க ?இப்போதும் பொதுஜனம் தான் இந்த நற்செயலை செய்றானுக எந்த அரசும் செய்யவே இல்லீங்க இருக்கும் தோப்புத்துரவுகளையும் அழிச்சு வீடுகள் வந்ததுண்டு இருக்கே அதுதான் மாபெரும் கொடுமை

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ////.....வெள்ளலுார் ராஜவாய்க்காலில், 750 மீட்டர் நீளத்துக்கு அளவீடு செய்யப்பட்டது. இதில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, நீர் செல்லும் வகையில், புதரை அகற்றி, வழி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.///// - ஆக, மழை வெள்ளத்தை காரணமாக வைத்துத்தான், ஆக்கிரமிப்பிப்புக்களை அகற்ற வேண்டிய நிலையில், தமிழ்நாடு அமைஞ்சி போச்சி?, இன்றைக்கு. முதலிலேயே அதை செய்தா?, போராட்டம், அது இது, அதில் டுபாக்கூர் போராளீஸ் பங்களிப்பு என ஆகிப்போகுது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement