Advertisement

வலிமையான வாழ்க்கை எளிமையான முறையில்!

இன்றைய சமூக சூழலில் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், ஆண், பெண், இளைஞர், முதியவர் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஏதாவது ஒரு வகையான வக்கிர உணர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அது மிகையாது. காமம், குரோதம், வன்முறை போன்ற மிருக உணர்வுகள் மனித இனத்தை ஆரம்ப காலம் முதல் ஆட்டி வைத்து கொண்டிருந்த போதிலும் கலை, இலக்கியம், ஓவியம், பண்பாடு, ஆன்மிகம் போன்ற வலிமையான இயக்கங்கள் மனித உணர்வுகளையும், அவர்களின் வக்கிர எண்ணங்களையும் இதுவரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. ஆகையால் மனித இனம் முற்றிலுமாக இந்த வக்கிர உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருந்து வந்தது. பல்வேறு நாகரிகங்களால் உருவாக்கப்பட்ட மனித இனம் அன்பு, மகிழ்ச்சி, வளர்ச்சி, எழுச்சி என்று அனைத்து துறைகளிலும் செழித்து விளங்கியது. அதீத வளர்ச்சி கண்ட மனித இனம் இன்று அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்ல முடியாமல் மீண்டும் பழைய மிருக நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருக்கிறது.இன்று சமூகத்தில் நாம் காணும் மதரீதியான தாக்குதல்கள், இனப்படுகொலைகள், தனிப்பட்ட கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், தற்கொலை ஆகிய செயல்கள் இன்றைய மனித இனத்தின் வக்கிர உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது.காரணம் என்னமனிதனுக்கு இலக்கியத்தில் உள்ள தொடர்புகள் மற்றும் ஆன்மிக உணர்வுகளில் உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் தகவல் தொழில் நுட்ப துறைகளில் பல்வேறு புரட்சிகள் நடந்து முகநுால், இமெயில், டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்ற அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் வந்த போதிலும் இன்று மனதளவில் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி தீவுகளாகவே இருந்து வருகின்றனர் என்பது ஸ்டீபன் பிங்க்கர், ரேமான், வில்லியம்ஸ் போன்ற உளவியலாளர்களின் கருத்து.கூட்டுக் குடும்பங்களின் சிதைவு இன்று பல்வேறு பாதகமான விளைவுகளை முக்கியமாக குழந்தை வளர்ப்பில் உருவாக்கி உள்ளது. கூட்டுக் குடும்பங்களில் உள்ள தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவினர்கள் குழந்தை வளர்ப்பில் மிகப்பெரிய பங்காற்றினார்கள். குழந்தைகளிடம் அதிக நேரம் செலவளிப்பது, அவர்களிடம் பல விஷயங்களை பற்றி பேசுவது, இசை, ஓவியம் என்று அக்குழந்தைகள் எளிதாக அறிவதற்கு ஏற்ற சூழ்நிலை இருந்தது. கூட்டுக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் மன வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் இயற்கையான பன்முக தன்மையும் கொண்டவர்களாக இருந்தனர்.தற்போது குழந்தை வளர்ப்பு மிகவும் கடினமாக உள்ளது. தாயும், தந்தையும் பணிக்கு செல்ல வேண்டிய நிலையில், பெருவாரியான குழந்தைகள் காப்பகத்தில் தான் வளர வேண்டிய நிலை. வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் இரவு நேரங்களில் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களின் நிலைமை மோசம். இவ்வீட்டில் வளரும் குழந்தைகள் அப்பாக்களை பார்ப்பதே அரிது. அபூர்வமாக எப்போதாவது அப்பாக்களை இக்குழந்தைகள் சந்திக்க நேர்ந்தாலும் அவர்கள் துாங்கிக் கொண்டிருப்பார்கள்; இல்லாவிட்டால் அலைபேசியில் எதையாவது தேடிக் கொண்டிருப்பார்கள்.குழந்தை வளர்ப்புகுழந்தையை வளர்க்கும் முழுச்சுமையும் இன்று தாயாரிடமே உள்ளது. பள்ளியில் அட்மிஷன் வாங்குவதிலிருந்து, குழந்தை களை பள்ளிக்கு கூட்டிச் செல்வது, ஆசிரியர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்வது, அவர்களுக்கு வீட்டுப்பாடம், உணவு, மருந்து, உடை போன்ற அனைத்து விஷயங்களுமே தாயாரை சார்ந்திருக்கும் சூழ்நிலை உள்ளதால் குழந்தைகள் கண்டிப்புடன் வளர்க்கப்படுவதில்லை. அன்பின் மிகுதியால் தாய்மார்கள் தங்களது குழந்தைகளை செல்லமாக வளர்ப்பது இயற்கையே. நல்லொழுக்கம், கண்டிப்பு, அறிவு மற்றும் உலக விஷயங்களை சொல்லித்தரும் அப்பாக்களின் பங்கு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றன. அதிக நேரம் தனிமையில் இருக்கும் இக்குழந்தைகளுக்கு பல கொடூரமான பயங்கர சத்தத்துடன் கூடிய கம்யூட்டர் விளையாட்டுக்கள் தான் துணையாக இருக்கின்றன. அவ்விளையாட்டுகள் அனைத்துமே மனிதனின் வக்கிர உணர்வுகளை துாண்டும் வகையாக இருக்கின்றது. இளம் வயதிலேயே இது போன்ற வக்கிர உணர்வு களுக்கு அறிமுகப்படுத்தப்படும் நம் குழந்தைகள் ஒரு சில வருடம் சென்ற உடனே பல்வேறு உளவியல் பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அதிகமாக கோபப்படுவது, கத்துவது, சக மாணவர்களை தாக்குவது, கொலை உணர்வுடன் நடந்து கொள்வது, வீட்டிலுள்ள பொருட்களை போட்டு உடைப்பது, தாயாரை, நண்பர்களை, ஆசிரியர்களை கையில் கிடைக்கும் கூர்மையான பொருட்களை வைத்து தாக்குவது, தன்னை தானே கொடூரமாக காயப்படுத்திக் கொள்வது, தற்கொலை, போதை பழக்கம் போன்றவற்றிற்கு ஆட்கொள்ளப்படுகிறார்கள். பெற்றோருக்கு பயப்படும் குழந்தைகள் முன்பு இருந்தனர். ஆனால் இன்று குழந்தைகளுக்கு பயப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.ஒரு குழந்தைஇன்றைய பெற்றோர் பொருளாதார வளம் கருதி ஒரு குழந்தை போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவ்வாறு ஒரு குழந்தை உள்ள பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் தனிக்கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இக்குழந்தைகள் எப்பொழுதும் தனிமையில் இருப்பதால் அதிக அளவு பசி மற்றும் பசியின்மையால் கஷ்டப்படுகின்றனர். வீட்டிலோ அல்லது வெளியிலோ சென்று நண்பர்களுடன் விளையாடக் கூடிய சூழ்நிலை இக்குழந்தைகளுக்கு கிடையாது. இன்று உருவாகி உள்ள 'அபார்ட்மென்ட் கலாசாரத்தினால்' ஒவ்வொரு மனிதனும் தனிமையில் தான் இருக்க வேண்டிய நிலை உள்ளது. உறவுகள் சுருங்கி மனிதன் மிகக்குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளான். தன்னலமில்லாத, நம்பிக்கைக்குரிய குடும்ப நண்பர்கள் குறைந்து கொண்டே வருவதால் வீட்டில் தனிமை என்பது அதிகமாகி கொண்டு இருக்கிறது.ஆகவே, ஒரு குழந்தை உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அவர்களது ஒத்த வயதுள்ள நண்பர்களுடன் நன்கு பேசி பழகி விளையாடக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கித்தர வேண்டும்.திருமணம், நிச்சயதார்த்தம், கோவில் திருவிழா போன்ற பொது இடங்களுக்கு தங்களது குழந்தைகளை அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். பலதரப்பட்ட மனிதர்களிடம் கலந்து பேசும் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 24 மணி நேரமும் வீட்டிலேயே பெற்றோரிடம் மட்டும் இருக்கும் குழந்தைகள் தங்களது வளர்ச்சிக்கு தேவையான பன்முக அனுபவங்களை இழக்கின்றனர். குழந்தைகள் பிற்காலத்தில் வளர்ந்து இளைஞர்களாக வரும் போது பல்வேறு சமூக பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளது.நட்பில் நம்பிக்கைஇன்றைய இளைஞர்களுக்கு அந்த காலத்தில் இருந்தது போன்று ஆழமான நட்பிலும் அதிக நம்பிக்கை இல்லை. இவர்களுக்கு ஆயிரக்கணக்கான நண்பர்கள்; ஆனால் 'உற்ற நண்பன்' என்ற நண்பர் எவரும் கிடையாது. முகநுால் நண்பர்கள் என்பவர்கள் முகத்திற்கு மட்டுமே அன்றி இதயத்தை என்றும் தொட முடியாது. இன்றைய இளைஞர்கள் தங்களது திருமணத்திலும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டி உள்ளது. தாழ்வு மனப்பான்மை, உறவுகளில் சந்தேகம், முடிவுகள் எடுப்பதில் சிக்கல், தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடான எதிர்பார்ப்புகள் என்ற பல பிரச்னைகளை இவர்கள் எதிர் கொள்ள வேண்டி உள்ளது. சுருக்கமாக சொன்னால் எளிமையாக, இனிமையாக பெற்றோர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் அரவணைப்பில் இயற்கையான சூழலில் உள்ள குழந்தை வளர்ப்பு முறை தான் இன்று அனைத்து சமூக பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.நம்முடைய வேதங்கள் மற்றும் ஆன்மிக கோட்பாடுகள் சுட்டிக்காட்டும் எளிமையான வாழ்க்கை முறை தான் நமக்கு எக்காலத்திலும் அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கும். எவ்வளவு அதிகமாக பணம் சம்பாதித்தாலும், எவ்வளவு பெரிய பதவிக்கு நாம் சென்றாலும் அவற்றை அற வழியில் அடைந்தால் என்றும் மகிழ்வுடன் வாழலாம்.ஏழைகளுக்கு உதவும் மனப்பாங்கு, கடவுள் வழிபாடு, தனி மனித ஒழுக்கம், உண்மை, உடற்பயிற்சி மற்றும் இரக்கம் போன்ற நல் உணர்வுகள் என்றும் நம்மை மகிழ வைத்திருக்கும். “மனிதனும் தெய்வமாகலாம்” என்று மாணிக்கவாசகர் கூறியுள்ளார். அத்தகைய வல்லமை படைத்த மனிதன் தன்னுடைய அறிவாற்றலால் இந்த இனிமையான வாழ்க்கையை, புனிதமான இந்த உடலையும் அனைத்து வகையிலும் கெடுத்து கொள்வது எந்த வகையில் நியாயம்?ஆகவே, இனிமையான, எளிமையான வாழ்விற்கு திரும்புங்கள் இளைஞர்களே! இனிய இசையை அனுபவியுங்கள், இப்பூவுலகில் கடவுள் படைத்துள்ள ஒவ்வொரு விஷயமும் அற்புதமானது என்று உணருங்கள். அன்பை தேடுங்கள், அன்பை கொடுங்கள். வல்லமையான வாழ்க்கையை எளிமையாக இனிமையாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.-முனைவர். மு. கண்ணன்முதல்வர், சரசுவதி நாராயணன் கல்லுாரி, மதுரை99427 12261

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement