Advertisement

பிளாஸ்டிக் அபாயம் 50 ஆண்டு ஆதிக்கம்!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. இது அமலாக, இன்னும், 170 நாட்கள் இருக்கிறது.
பிளாஸ்டிக் என்பது வேகமாக பரவிய, மிக மோசமான பயன்பாட்டுப் பொருள். கையில் பை எடுத்துச் செல்லாமல், விளம்பர யுக்திகளை விளக்கும் இந்த பிளாஸ்டிக் பயனானது, உணவைப் பாதுகாத்து, பிரிட்ஜில் வைக்க உதவும் சாதனம் வரை பல விஷயங்களிலும் பரவி விட்டது. தண்ணீர் பயன்படுத்தும் பலரும், பிளாஸ்டிக் பாட்டில்களை சுமப்பதும் வாடிக்கையாகி விட்டது.
பிளாஸ்டிக் தடைவிதிக்கப்பட்ட சில மாநிலங்களுடன் தமிழகமும் இணைகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில், இந்தியா அதிக அக்கறை காட்டி வருகிறது.
அதை, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு பாராட்டி உள்ளது. இந்தியாவில், 24 கடற்கரைகள், 24 ஆறுகள் ஆகியவை, அடுத்த நான்கு ஆண்டுகளில், பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழல் துாய்மை இடமாக மாறும். இவை நாட்டின், 19 மாநிலங்களில் அமலாகிறது என்ற மத்திய அரசின் முடிவை, இந்த அமைப்பு பாராட்டி
இருக்கிறது.
அதுவும் கூட, பிரதமர் மோடி முயற்சி தான். எதை எடுத்தாலும் அவர் மேற்கொள்ளும் பிரசாரம், மற்றவர்களை எளிதாக அடைகிறது என்பது, இந்த அமைப்பின் கருத்தாகும்.
சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகு, கழிப்பறை தேவை என்ற நெடு நோக்கை, மத்திய அரசு நிறைவேற்றி வருவது சிறப்பானது. தண்ணீரில் துாய்மை என்பதும் அதன் முக்கிய குறிக்கோளாகும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைப்பானது, இந்தியாவில் உள்ள நதிகளை ஆய்வு செய்ததில், 29 மாநிலங்களில் கழிவுநீர் கலக்கும் இடமாக ஆறுகள் உள்ளன என்று கண்டறியப்பட்டது. அதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 275 ஆறுகளில், கழிவு கலப்பது கண்டறியப்பட்டுஇருக்கிறது. இது, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
இந்த ஆட்சிக்கு முன் நதிகள் சுத்தமாக இருந்ததாகவும், இப்போதுள்ள மத்திய, மாநில ஆட்சிகள் இத்துாய்மையின்மைக்கு காரணம் என்று கருதுவதும் தவறு. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல், காலத்தைக் கழித்திருக்கிறோம்.
பிளாஸ்டிக் பைகளை தின்னும் மாடுகள் வயிற்றில், கிலோ கணக்கில் இக்குப்பை அப்படியே இருப்பது மட்டும், நாம் காணும் உண்மை. கடலில் பிளாஸ்டிக் கலக்கும் அபாயத்தால், தாய்லாந்தில் பிடிபட்ட ஒரு திமிங்கிலத்தின் வயிற்றில், ௮ கிலோ பிளாஸ்டிக் குப்பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக்கில் இருக்கும் அபாயகரமான வேதிப்பொருள் பல்வேறு நச்சுக்களை உடலில் ஏற்படுத்துவதுடன், நோய்க்கூறுகளை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.
நம் நாட்டில் ஆண்டுதோறும், கிட்டத்தட்ட, 30 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்வதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
எதை எடுத்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இணைந்திருப்பதையும், அதை, எளிய வசதிமிக்க பொருளாக கையாளுவதும் எளிதாகி விட்டது.
ஒவ்வொரு நிமிடத்திலும் குடிநீர் அல்லது வேறு பயன்பாட்டிற்கு, 10 லட்சம் பாட்டில்கள், உபயோகப்படுத்துகிறோம். ௧950ல், அறிமுகமான இந்த பிளாஸ்டிக், பல்வேறு உருவங்களில் நம்மை பாதித்துள்ளது. அன்றைய பயன்பாட்டு அளவுடன் ஒப்பிட்டால், 500 மடங்கு இதன் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. பயன்படுத்திய பிளாஸ்டிக்கை மறு சுழற்சியில் மாற்றுவதிலும், அதிக தொழில் நுட்பம், சுற்றுச் சூழல் பாதிப்பில்லாத அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.
நதிகளில் சில இடங்களில் சாக்கடை விடப்படுவதும், சில பகுதிகளில் தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் ஆபத்தான கழிவுகளும் இயல்பாக கலக்கின்றன. தோல் தொழிலில் ெவளியேறும் கழிவான, 'குரோமிய நச்சு' மிகவும் அபாயமானது. சென்னையில் அழகான அடுக்குமாடிக் கட்டடங்கள் அருகே, நச்சு நிறைந்த கூவம் இருக்கிறது; காற்று மாசும் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு தனிநபர், சமுதாயம், நாம் வாழும் ஊர் ஆகிய இடங்களில், பிளாஸ்டிக் ஒழிப்பு, ஒரு பெரிய இயக்கமாக மலர, இது முதல் முயற்சி எனலாம்.
பால் பொருட்கள், மருந்து பொருளுக்கான உறைகள் மட்டும் குறிப்பிட்ட தகுதி பெற்ற தரமுள்ள, மறுசுழற்சிக்கு ஏற்ற பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கும். அதே சமயம் சணல் பை, பாக்குமட்டை போன்ற எளிதில் மக்கும் பொருட்களும், சுற்றுச் சூழலை அழிக்காதவைகளும் நம் வாழ்வில் சேர வேண்டும். அதன் அமலாக்கம் எளிதானதா என்பது, இனி தான் தெரியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement