Advertisement

இசை தழுவிய தமிழ்க்கல்வி

ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையே இசை. ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி, உச்சரிப்புக்கும் வார்த்தைக்குமான இடைவெளியைப் போன்றது. மானுட மனத்தில் அறிவுக்கூறு, உணர்ச்சிக்கூறு, முயற்சிக்கூறு ஆகியவை ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன.இயல் -இசை -நாடகம் என்ற மூன்று பிரிவுகளையுடைய தமிழ்மொழி, 'இயல்' மூலமாக மானுட மனத்தின் அறிவுக்கூறையும், 'இசை' வழியாக உணர்ச்சிக் கூறையும், 'இயலும் இசையும்' சேர்ந்து நிகழ்த்தும் நாடகம் வாயிலாக முயற்சி கூறையும் வளர்த்துச் செழுமைப்படுத்துகிறது. உணர்ச்சிக் கூறுக்கும் முயற்சிக் கூறுக்கும் அடிப்படையாக இசையே அமைந்திருப்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.
நமது முன்னோர்கள் தம் வாழ்நாளில் கண்டடைந்த மெய்மைகளை நிரப்பி வைத்துள்ள சொற்பேழைகள்தான் செய்யுள்கள். கவிதையை (செய்யுளை) உரைநடையிலிருந்து பிரித்துக் காட்டுவது இசை. மாணவர்களுக்குச் செய்யுட் பகுதிகளைப் பாடமாக வைத்ததன் நோக்கமே, மாணவர்கள் இலக்கியசுவையைத் தாண்டி, அதன் பின்னணியாக உள்ள தாள லயத்தையும், இசை நயத்தையும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே.
இசையை, இசை பற்றிய அறிவை மாணவர்களுக்கு அவரவர் தாய்மொழியிலுள்ள இசைப் பாடல்களின் வழியே வளர்ப்பதேமுறை.இசைத்தமிழ்ஒரு சந்தத்தை உருவாக்கிக் கொண்டு அதற்கேற்ப வார்த்தைகளை நிரப்புவது 'இசைத்தமிழ்'. நிரப்பிய வார்த்தைகளுக்குத் தக்கபடி சந்தத்தை உருவாக்குவது 'இயற்றமிழ்'. இயற்றமிழின் சுவையைக் கூட்டுவதற்கே இசைத்தமிழ் உதவவேண்டும். அதாவது செய்யுளுக்கும் கவிதைக்கும் இசை துணைபோக வேண்டும்.
தமிழாசிரியருக்கும் இசையாசிரியருக்குமான இடைவெளிதான் தற்போது தமிழாசிரியர்கள் கவிதைகளை உரைநடைபோல் நடத்தக் காரணமாயிற்று. இதற்கு அடிப்படைக் காரணம், இயற்றமிழையும் இசைத்தமிழையும் தனித்தனியே கற்றுத்தரத் தொடங்கியதுதான். ஒரு கோணத்தில் பார்த்தால், இருபெரும் துறைகளையும் தனித்தனியே கற்கும்போதுதான் ஆழமாக படிக்க முடியும்.
தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாதய்யர் இளம் வயதில், இசைமேதை கோபாலகிருஷ்ண பாரதியாருக்குத் தெரியாமல், காலையில் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் இயற்றமிழும், மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்குத் தெரியாமல் மாலையில் கோபாலகிருஷ்ண பாரதியிடம் இசைத்தமிழும் கற்று வந்தார்.ஒருமுறை மீனாட்சி சுந்தரம்பிள்ளையும் உ.வே.சுவாமிநாதய்யரும் வீதியில் நடந்து செல்கையில், கோபாலகிருஷ்ண பாரதியார் எதிர்ப்பட்டார்.
அப்போது மீனாட்சி சுந்தரம்பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் தன் மாணவன் உ.வே. சாமிநாதய்யரை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன், ''இவன் என்னிடம் தமிழ்ப் பயிலும் மாணவன்” என்று கூற, அதற்கு கோபாலகிருஷ்ண பாரதியார், ''தெரியுமே! இவன் என்னிடம் இசை பயில்கிறான்” என்று கூற இருவரிடமும் உ.வே.சாமிநாதய்யர் சிக்கிக் கொண்டார்.
மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு இசை மீது துளியும் விருப்பம் இல்லை. அதனால், அவர் உ.வே. சாமிநாதய்யரை அழைத்து, ''நீ என்னிடம் தமிழ்க்கற்றுக்கொள் அல்லது கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை கற்றுக்கொள்” எனக் கூறி ஏதாவது ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்குமாறு வலியுறுத்தினார்.
காரணம், 'மனம் இசையில் லயித்துவிட்டால் பின்னர் ஒரு போதும் இயற்றமிழை நாடாது' என்பதனை அவர் உணர்ந்திருந்தார். உ.வே.சாமிநாதய்யர் இயற்றமிழைக் கற்கவே விரும்பினார். தமிழ் உலகம் அன்று ஓர் இசைமேதையைத் தவறவிட்டது.
இசை ஒரு வஸ்துமேற்பரப்பில் மவுனமாகச் சுழன்று சுழன்று மெல்ல உள்ளழுந்தி, சுழற்சியில் வேகம் கொண்டு, அடித்தளம் வரை இழுத்துச் சென்று, நீரடிபுதைமணலில் புதைத்துவிடும் நீர்ச்சுழியைப் போன்றது இசை.இசையை ஒரு பொழுதுபோக்குக்காகவே (உணவுக்கு ஊறுகாய்ப் போல) பிறதுறை அறிஞர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர். குறிப்பாக, தீவிர எழுத்தாளர்களுக்கு இசை ஒரு தற்காலிக விடுதலை. அவர்கள் தம்மனத்தை ஆறுதல்படுத்திக்கொள்ள இசை நல்லதொரு வஸ்து.
பழைய பேராசிரியர்களுள் சிலர் வகுப்பறைகளில் தமிழ் இசைப் பாடல்களையும், தமிழ்ச் செய்யுள்களையும் அவற்றுக்குரிய தாள லயத்துடன் பாடி, மாணவர்களுக்கு இசை மீது பற்றுவளர உதவியுள்ளனர்.செய்யுளில் ஒவ்வொரு அசையும் ஒரு தாளமாகக் கொள்ளவேண்டும். அதாவது, ஓர் அசை உயர்ந்தும் அடுத்த அசை தாழ்ந்தும் அதற்கடுத்த அசை உயர்ந்தும் இருக்க வேண்டும். இவ்வாறு அமைத்துச் சென்றால் அது ஒருவகை தாளமாக அமையும். அடிப்படையில் தாளம் ஏழு வகைப்படும்.
அமைக்கின்ற இசைப்பாட்டின் உட்பொருளுக்கு இயைந்து வருதலே ராகம். பாட்டின் மையம் பிரிவுத்துயர் என்றால் சோக இசை என்பதுபோல, உணர்ச்சி முரண்படாமல் எண்வகை மெய்ப்பாடுகள் திரிபடையாமல் இசைக்கப்படுவதே ராகம். அடிப்படையில் 72 மேளகர்த்தா ராகங்கள் உள்ளன.
பண்டைய தமிழிசைஅடிப்படை சுரங்களின் (இசையொலிகளின்) பெயர்களாகத் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு பெயர்களும் இவற்றுக்குரிய எழுத்துக்களாக முறையே ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் உயிரெழுத்துக்களும் பண்டையத் தமிழிசையில் இருந்தன.இவையே பின்னர் ஸட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று வடமொழியில் கூறப்படும் ஸ,ரி,க,ம,ப,த,நி என்று வழக்கில் வந்தன. இந்த ஏழு இசையொலிகளும் சுரங்கள் என்று வழங்கப்பட்டு, பின்னர் பன்னிரு சுரங்களாக விரிவுபட்டு வளர்ச்சியடைந்தன.
இனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவமைப்பினைப் பண் என்பர். வடமொழியில் உள்ள ராகம் என்ற சொல்லோடு பண் என்ற சொல் ஒத்தமைகிறது. சங்கத் தமிழகத்தின் நான்கு நிலங்களுக்கும் ஏற்ப நாற்பெரும் பண்கள் இருந்தன.
திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் காலத்தில், அதாவது, கி.பி. 11ம் நுாற்றாண்டில் அந்த நான்கு பண்களும் பத்துப் பண்களாக விரிவுபடுத்தப் பட்டன. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்தில் அதாவது, கி.பி. 12ம் நுாற்றாண்டில் 11,991 ஆதி இசையாகவும் இசைத்தமிழ் வளர்த்தெடுக்கப்பட்டது. இசைத்தமிழ் இலக்கணத்தில் பண், திறம் என்ற இரு பிரிவுகள் உள்ளன. பண் ஏழு சுரங்களையும், திறம் பண்ணைவிடக் குறைந்த அளவிலான சுரங்களையும் கொண்டிருந்தன.
பழந்தமிழர்கள் பண் இசைப்பதையும் ஒருமுறையுடன், குறிப்பிட்ட காலத்தில், காலவரையறையுடனே இசைத்தனர். பண்டையக் கோவில்களில் பாடப்படும் பண்களின் வரிசையைப் பகற்பண், இரவுப்பண், பொதுப்பண் எனப் பிரித்திருந்தனர். அவை இப்போதும் காலையில் பூபாளம், நண்பகலில் கல்யாணி, இரவில் நீலாம்பரி எனப் பின்பற்றப் படுகின்றன.
பாடிக்காட்ட வேண்டும்
தமிழாசிரியர்கள் வகுப்பில் செய்யுளைக் கற்பிக்கும் முன், அச் செய்யுளுக்கு ஏற்ற பண்ணில் அல்லது தனக்கான ஓர் இசை ஒழுங்கோடு, குரல் ஏற்றத் தாழ்வுகளுடன் தெளிவான நல்ல உச்சரிப்புடன், பாடிக்காட்ட வேண்டும்.அதற்குத் தமிழாசிரியர்கள் பலமுறைப் பாடிப் பயிற்சி செய்துகொள்ள வேண்டும். கவிதையில் உள்ள ஒலி ஒழுங்கை மனத்தில் வாங்கிக்கொண்டாலே போதும். இயற்றமிழின் சுவையைக் கூட்டுவதற்கே இசைத்தமிழ் உதவவேண்டும்.
மாணவர் மத்தியில் இசைகேட்கும் பழக்கத்தையும் அதற்குஉரிய பயிற்சியையும் ஏற்படுத்தி, அவற்றை வளர்க்க வேண்டும். இசைக்கு ஏற்ப செய்யுள் அல்லது பாடல் எழுதும் பயிற்சியையும் அவர்களுக்கு வழங்கலாம். இவையே இயற்றமிழ், இசைத் தமிழுக்குச் செய்யும் பெரும் சேவை.
முனைவர் ப. சரவணன்தமிழாசிரியர், லட்சுமி பள்ளிமதுரை. 98945 41523

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement