Advertisement

சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன் சீனிவாசன்...

வயது 18தான் ஆகிறது ஆனால் தினமும் இருவேளை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் சீனிவாசக பாண்டியனுக்கு..

ஆனால் வறுமை காரணமாக ஒரு வேளை மட்டுமே போட்டுக் கொள்ளக்கூடிய சூழ்நிலை

நான் இருக்கேன்டா மகனே என்று ஆறுதல் சொல்லி மகனை தேற்றவேண்டிய அப்பாவும் இறந்துவிட்டார்.

ஒட்டலில் ஒன்றில் அறைகளை சுத்தம் செய்யும் 'ஸ்வீப்பர்' வேலை செய்யும் அம்மாவின் நாலாயிரம் ரூபாய் சம்பளத்தில்தான் வீட்டு வாடகை உள்ளீட்ட அனைத்து செலவுகளையும் செய்து கொண்டு தாயும் பிள்ளையுமாக இருக்கின்றனர்.

இளவயதிலேயே கணவரை இழந்தாலும் தனக்காக உழைத்து உழைத்து உருகும் தாயை நல்ல சாப்பாடு கொடுத்து நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும், அதற்கு ஒரே வழி படித்து முன்னேறிக்காட்டுவது மட்டுமே என்பதை லட்சியமாகக் கொண்ட பாண்டியன் படிப்பில் நல்ல அக்கறை காட்டிவருகிறார்.

நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் ஆயிரத்து நுாறு மார்க்குகள் எடுத்து மதுரை ஷெனாய்நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதல் மாணவனாக வந்துள்ளார்.

இதற்காக பள்ளியின் சார்பில் கிடைத்த பாராட்டையும் சான்றிதழையும் மட்டும் வைத்துக்கொண்டு மேற்கொண்டு படிக்க வழிவகை தெரியாது தவித்துக்கொண்டு இருந்தார்.

இவரது தவிப்பையும் தாயாரின் கண்ணீரையும் துடைக்க முடிவு செய்த மணிகண்டன் அவரால் முடிந்த உதவி செய்தார் ஆனால் அவரது உதவியையும் தாண்டி பாண்டியனின் தேவைகள் இருக்கவே மனித நேயம் கொண்ட சிலரிடம் அழைத்துச் சென்றார்,சிலரை அடையாளம் காட்டினார்.

அந்த நல்ல உள்ளங்களின் உதவியால் தற்போது மதுரை தியாகராசர் கல்லுாரியில் இளங்கலை பட்டபடிப்பு படிக்க உள்ளார்.

அவருக்கு மேற்கொண்டு ஏதாவது உதவி தேவையா ? என்பதை தெரிந்து கொள்ள மதுரை நரிமேடு மீனாம்பாள்புரத்தில் உள்ள சீனிவாசன் வீட்டிற்கு நேற்று போயிருந்தேன்.மணிகண்டன் வழிகாட்டுதலில் நேத்ராவதி ரமேஷ் அழைத்துச் சென்றார்.

நான் நினைத்ததைவிட சீனிவாசன் வீடு ஏழ்மையாக இருந்தது.ஒரே ஒரு மாடி அறை அதில் சின்ன தடுப்பு வைத்து சமைத்துக்கொள்கின்றனர், வீட்டின் நடுவில் பழைய இரும்பு கட்டில் அதில் விரிப்பு கூட இல்லாமல் காணப்பட்டது.

வீட்டில் நிறைந்து இருந்தது புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள்தான் ஒரு அலமாரி நிறைய புத்தகங்கள் நிறைந்து காணப்பட்டது.

''சீனிவாசன் சினிமாவிற்கு போகமாட்டான் வௌியே சுற்றமாட்டான் டி.வி.,கூட பார்க்கமாட்டான் எப்ப பார்த்தாலும் படிச்சுட்டுதான் இருப்பான், ரொம்ப நல்ல பிள்ளைய்யா நல்லா படிப்பான் அவன் விருப்பப்படி படிக்கவைக்க கடவுள்தான் கருணை காட்டணும்'' என்றார் சீனிவாசனின் தாய் விஜயா, சொல்லும் போதே அவரது கண்கலங்குகிறது.

''என் அம்மா மாதிரி இருக்கிறவங்க நிம்மதியா சந்தோஷமா வாழ வழிகாண வேண்டும், என்னை மாதிரி படிக்க நினைக்கிற மாணவர்களுக்கு பணம் ஒரு தடைய இருக்கக்கூடாது,ஏழ்மை என்பதே இருக்கக்கூடாது இதற்கெல்லாம் திட்டம் போட்டு செயல்படணும் அதற்கு நான் கலெக்டராகணும், ஆவேன் அதற்கு ரொம்பவே தயராகிட்டு இருக்கேன்'' என்கிறார் சீனிவாசன் உறுதியாக.

சீனிவாசனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது தன் நோயின் தன்மையை, ஏழ்மையை, இயலாமைமை ஒரு போதும் வௌிப்படுத்தவில்லை, நேர்மையும் நெஞ்சுரமும் லட்சியமும் கொண்டவராகவே தென்பட்டார்.

இவருக்கு ஒரு லேப்டாப் தேவைப்படுகிறது ஐஏஎஸ் பயிற்சி பற்றிய ஆலோசனையும் அதற்கான கட்டணமும்தான் இப்போதைய இவரின் தேவை, இவரின் தாய் நாலாயிரம் சம்பளத்திற்காக நீண்ட துாரம் சென்று நீண்ட நேரம் உழைத்து வீடு திரும்புகிறார் இவருக்கு வீட்டு பக்கத்திலேயே ஒரு வேளை கிடைத்தால் மகனை இன்னும் நன்றாக பார்த்துக்கொள்வார்...

சீனிவாசக பாண்டியனிடம் பேசுவதற்கான எண்:9944274953.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    அரசு தரும் லேப்டாப் கிடைக்கவில்லையா இந்த சகோதரருக்கு? இல்லையென்றால் அந்த முயற்சி யாரேனும் எடுக்கலாமே?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement