Advertisement

பரியேறும் பெருமாள்...படியேற்றும் பெருமாள்

''மனித இனம் இவ்வளவு பரிணாமங்கள் கடந்தும், அன்பு பற்றிய தெளிவை பெறாமல் தான் இருக்கிறது. இதை இப்படியே விட்டால், படைப்பாளியாக மட்டுமல்ல ஒரு மனிதனாகவும் நான் தோற்றுப்போய்விடுவேனோ என நினைத்தேன். அதற்காகவே பரியேறும் பெருமாள் எடுத்தேன். இந்தப்படம் மாரி செல்வராஜ் யாரென்று தேட வைக்கும். அதன் மூலம் சமுதாயத்திற்கு ஒரு விடை கிடைக்கும்'' என்கிறார், தன் முதல் படமான 'பரியேறும் பெருமாள்' மூலம் தமிழ் திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ்.


* யார் இந்த மாரி செல்வராஜ்?
2004ல் திருநெல்வேலி சட்டக் கல்லுாரியில் படிச்சுட்டு இருக்கும்போது, சினிமா மேல இருந்த பேராசையில் சென்னைக்கு ஓடி வந்துட்டேன். இயக்குனர் ராமிடம் உதவியாளரா சேர்ந்து 12 வருடமாக கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி படங்களில் வேலை பார்த்தேன். அவரிடம் வேலை பார்த்தப்போ என் வாசிப்பு உலகம் விரிவடைஞ்சது. நிறைய கதைகள் எழுத ஆரம்பிச்சேன். நான் எழுதிய 'மறக்கவே நினைக்கிறேன்' புத்தகம் என் வாழ்வின் திருப்பு முனை. அது என்னை கலை உலகத்துக்கும், இயக்குனர் ரஞ்சித்துக்கும் அறிமுகப்படுத்துச்சு. ரஞ்சித் இப்போ என்னையும் பரியேறும் பெருமாளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.


* 'பரியேறும் பெருமாள்'... பெயரே வித்தியாசமா இருக்கே...
திருநெல்வேலி பக்கம் 'பரியேறும் பெருமாள்'னு ஒரு சாமி இருக்கு. 'பரி'ன்னா குதிரை. குதிரை மேல ஏறி வர்ற பெருமாள். இவ்வளவு தான் அந்த பேருக்கான அர்த்தம். ஆனால் விஷயம் அதுவல்ல. இந்த பரியேறும் பெருமாளை கும்பிடுறதுக்கு பின்னாடி இருக்கற ரகசியத்தில் தான் படத்தின் கதையே இருக்கு.

ஒரு குடும்பத்தோட முதல் தலைமுறை கனவுகளையும், அதைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் வன்மங்களையும், அன்பையும் நேர்த்தியா காட்டியிருக்கோம்


* பரியேறும் பெருமாள் என்ன செய்வார்...
இன்னைக்கு யார், யாரை காதலிக்கணுங்கறதை கூட யாரோ தான் முடிவு பண்றாங்க. அது மனித சமுதாயத்துக்கு ஆபத்து. அந்த ஆபத்தை எதிர்கொள்வது பற்றி இந்தப்படத்தில் சொல்லி
யிருக்கோம். பரியேறும் பெருமாள் மனித மாண்பை மீட்டெடுத்து சமூகத்தை படியேற்றுவார் என நம்புகிறோம்.


* படம் பார்த்த பிரபலங்கள் என்ன சொன்னாங்க...
ரஞ்சித் என்னை கட்டிப்பிடிச்சுக்கிட்டார். 'நான் சொல்ல நினைச்சு, சொல்ல முடியாம போன கதையை நீ சொல்லியிருக்க'னு பெருமைப்பட்டார். இந்தப்படத்துக்கு முன்னாடி வரைக்கும் தயாரிப்பாளர்- இயக்குனராக இருந்த நாங்க, இந்தப் படம் முடிஞ்சதும் அண்ணன் - தம்பியா மாறிட்டோம். இயக்குனர் ராம், ஒரே இரவுல மூணு தடவை படம் பார்த்தார். பெருமிதம் பொங்க என்னைப் பார்த்து, கண்களாலேயே 'நீ ஜெயிச்சுட்டடா'ன்னு சொன்னார். குருவிடமிருந்து ஒரு சீடனுக்கு இதை விட வேறென்ன வேணும்.


* நடிகர் கதிர், நடிகை ஆனந்தி எப்படி நடித்தார்கள்
கதைக்கு நாயகனாக என்னை மாதிரி ஒருத்தன் தேவைப்பட்டான். அந்த முகத்தில் எளிமையும், மெல்லிய வன்மமும் இருக்க வேண்டும் என்று நினைச்சேன். கதிர் தான் ஞாபகத்துக்கு வந்தார். நாங்க நினைச்சத விட சிறப்பா பண்ணிருக்கார். ஆனந்தியை பொறுத்தவரை, 'இவ்வளவு நல்ல நடிகையா' என்று ஆச்சரியப்படுவீங்க!. ஒரு மாதத்தில் படம் திரைக்கு வர இருக்கிறது. இனி நடப்பதெல்லாம் பரியேறும் பெருமாள் செயலே.

தொடர்புக்கு: mariselvaraj84gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement