Advertisement

அகம் திறக்கும் புத்தகம்

ஒரு யுகமாக மாற்ற முடியாததை ஒரு புத்தகம் மாற்றிவிடும். 'ஒரு நுாலகம் திறக்கும் போது பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன' என்றார் காந்தி. இன்று சிறைகளுக்குஉள்ளும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தண்டனைக்குரியவர்கள் படித்து பண்பட்டு, பட்டதாரிகளாகவும் வெளியே வருகிறார்கள்.உலகில் அறியப்படாத புத்தகங்கள் எவை, சிறந்த புத்தகம் எது, தொடர் எது, பிரபல எழுத்தாளர் மற்ற எழுத்தாளர்களை படிக்கிறார்களா, உலகில் பரவலாக வாசிக்கப்பட்ட புத்தகங்கள் எவை, உலகின் மிகப் பெரிய புத்தகம் எது, சிறிய புத்தகம் எது, நம் சிந்தனையை விவாக்கும் புத்தகங்கள் எவை? இப்படி புத்தகங்கள் தொடர்பான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கான விடைகள் கிடைத்தாலும் தொடர்ந்து அவை கேள்விகளாகவே இருந்து கொண்டே இருக்கும்.புத்தகமாக வாழ்ந்தவர்கள்தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் ஏடுகள் மற்றும் ஓலைச்சுவடிகளில் இருந்து தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து வார்த்தெடுத்து தமிழர்களுக்கு சீதனமாக தந்தவர். அவரது இலக்கிய தேடல்களுக்கு மூலகாரணமாக விளங்கிய பழந்தமிழ் நுால் சீவகசிந்தாமணி. தன் வாழ்நாளின் கடைசி காலத்தை கழிக்க திருவாவடுதுறை ஆதின மட வீட்டிற்கு வரும் போது தன்னுடன் 10 மாட்டு வண்டிகளில் தமிழ்நுால்களையும், ஏடுகளையும் எடுத்து வந்துள்ளார்.மதுரையில் நான்காம் தமிழ் சங்கத்தை தோற்றுவித்த வள்ளல் பொன் பாண்டித்துரை தேவரின் தந்தை முகவை பொன்னுச்சாமி தேவர், தான் பதிப்பித்த நுால்களை எல்லாம், நுால்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்த தமிழறிஞர். திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் டாக்டர் ஜி.யு.போப். இவர் மணிமேகலை, புறநானுாறு, புறப்பொருள் வெண்பாமாலை, திருவருட்பா போன்ற நுால்களை பதிப்பித்துள்ளார். தமிழில் முதல்முதலில் வெளிவந்த நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். இதனை மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதியுள்ளார். 'பதிப்புத்துறையின் முன்னோடி' என போற்றப்படுபவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. இவர் முதல் முதலாக நீதிநெறி விளக்கம் என்ற நுாலை பதிப்பித்து வெளியிட்டார். இது போன்ற பட்டியலை புத்தகங்கள் போல் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.புத்தக சாதனைகள்தேச விடுதலைக்காக சிறை சென்ற பகத்சிங் சிறையில் இருந்த போது 56 க்கும் மேலான புத்தகங்களை படித்து 400 க்கும் மேற்பட்ட குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். ஏழ்மை குடும்பத்தில் பிறந்து பெண் குலத்திற்கு பெருமை சேர்த்தவர் வை.மு.கோதை நாயகி அம்மாள். அதிதீவிர புத்தக படிப்பில் ஈடுபட்டவர். பெண் கல்வி, பெண் சமத்துவம், விதவை, கைவிடப்பட்ட பெண்களுக்காகவும் அவர்களது போராட்ட வாழ்க்கையை மையப்படுத்தி 115 நாவல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது இந்த சாதனை இதுவரையிலும் முறியடிக்கப்படவில்லை. தமிழ் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் மகாகவி பாரதியும், பாரதிதாசனும். குடும்பக்கட்டுப்பாடு பற்றிய பாடலை உருவாக்கிய முதல் கவிஞர் பாரதிதாசன். உலகில் 32 மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக திருக்குறள், காந்தியின் சத்திய சோதனையும் இந்த வரிசையில் இடம் பெற்றுள்ளன.ஒரு தலைமுறைக்கு முன் அம்புலிமாமா, பாலமித்ரன், ரத்னமாலா, பூந்தளிர் போன்ற புத்தகங்கள் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் வீட்டுக்குள்ளே சுழலும் ராட்டினமாக இருந்தன. ஒருவர் படித்து முடிக்கும் வரை இன்னொருவர் காத்திருக்கும் மகிழ்ச்சியின் காலமிது. அது போன்ற ஆவலை மேலும் பூர்த்தி செய்யும் விதமாக இன்றும் பல்வேறு காமிக்ஸ் புத்தகங்கள், படக்கதைகள் வெளிவந்து குழந்தைகளை எல்லையில்லா ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்கின்றன.சில புத்தகங்கள் புதுமைப்பித்தனின் 'தெய்வம் கொடுத்த வரம்', சுந்தரராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை', கல்கியின் 'பொன்னியின் செல்வன்', அப்துல்கலாமின் 'அக்னி சிறகுகள்' என பல்வேறு புத்தகங்கள் எழுத்தாளர்களை மறக்க முடியாமல் வைத்துள்ளன. சர்ச்சைகளாலும் சில புத்தகங்களும், படைப்பாளிகளை நினைவில் வைத்துஉள்ளன. ஜெயகாந்தன், ஜெயமோகன், பெருமாள் முருகன், ஜே.டி. குரூஸ் போன்றோர் உள்ளனர். ஆயிரம் கதைகள் எழுதிய அபூர்வ மனிதராக திகில் மன்னர் ராஜேஷ்குமார் மற்றும் ராஜேந்திர குமார் போன்ற எழுத்தாளர்கள் பாக்கெட் நாவல்களின் மார்க்கண்டேயனாக உள்ளனர்.வீட்டில் நுாலகங்கள்திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த பட்டாபிராமன், தன் வீட்டில் 'பன்னாட்டு தமிழ் இதழியல் நுாலகம்' நடத்தி வருகிறார். இங்கு தமிழ் மற்றும் வெளிநாட்டு இதழ்களை சேகரிப்பாக கொண்டுள்ளார். 1958 ம் ஆண்டில் இருந்து 58,000 அரிய இதழ்கள், நுால்கள் வைத்துள்ளார். இது தனிமனிதர் ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட நுாலதிசயம். தமிழகத்தில் 6000 நுாலகங்கள் உள்ளன. இதில் மதுரை மைய நுாலகத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இருந்தாலும், குழந்தைகள் சிறுவர்களுக்காக மட்டுமே அதிக நுால்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நுாலகம் கோல்கட்டாவில் உள்ள 'இந்திய தேசிய நுாலகம்'. இது இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்நுாலகத்தில் 26 லட்சம் நுால்கள் உள்ளன.சென்னையில் உள்ள அண்ணா நுாலகம் பெரியது. இங்கு 12 லட்சம் நுால்கள் உள்ளன. எழும்பூரில் உள்ள கன்னிமாரா நுாலகத்திலும் பல லட்சம் புத்தகங்கள் உள்ளன. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நுாலகத்திற்கு தமிழகத்தில் இருந்து வாசகர்கள் ஒரு லட்சம் புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளனர். நுால்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடையாளம் இது.புத்தகங்களே சுவாரஸ்யங்கள்ஒரு புத்தகத்தை கையில் எடுங்கள்... நுகர்ந்து பாருங்கள்... அதுவே புத்தகத்தில் பயணிக்கும் சூட்சமம். அதன் சொல்லாடல்கள், வார்த்தை வசீகரங்கள் பக்கங்களை கடக்க கடக்க சுகமான சுவாரசியங்கள் தந்து கொண்டேயிருக்கும். இவை மறந்தும் புத்தகத்தை கீழே வைத்து விடாதவாறு தாங்கி பிடித்துக் கொள்ளும். படித்து முடிக்கும் வரை வேறு எதிலும் கவனம் செல்லாதது. ஒரு ஆண்டிற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 2000 பக்கங்கள் படிக்க வேண்டும் என்கிற விதியை பன்னாட்டு கல்வி அறிவியல் நிறுவனம் பரிந்துரைக்கின்றது. ஒரு நாளைக்கு எத்தனை பக்கங்கள் என கணக்கிட்டு கொள்ளுங்கள். ஆனால் இந்தியர்கள் ஒரு ஆண்டு முழுவதும் 32 பக்கங்கள் தான் படிக்கிறோம் என்று யுனெஸ்கோ புள்ளி விபரம் சொல்கிறது.உலக செய்திகளும், உள்ளூர் நடப்புகளையும் பரிமாறிக்கொள்ளும் இடங்கள் பல இருந்தாலும் கிராமப்புற நுாலங்கள் தான் முதுகெலும்பு. இங்கு தான் புத்தக வாசிப்பை பெரும்பாலானோர் அடித்தளமாக்கிக் கொள்கிறார்கள். நல்ல மனிதர்களையும், நல்ல கருத்துக்களையும், புத்தகங்களையும் படியுங்கள். இதுவரை புத்தகங்களை தொடாதவர்களுக்கும், புத்தகங்கள் மட்டுமே எப்போதும் நட்பு கரங்களுடன் கைகுலுக்க காத்திருக்கும்.- ஆர்.கணேசன்எழுத்தாளர், மதுரை98946 87796

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement