Advertisement

கோவைக்கான திட்டங்களை விரைவு படுத்த... முதல்வரால் மட்டும் தான் முடியும்!

விமான நிலைய விரிவாக்கம் உட்பட கோவை நகருக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை துரிதப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.


தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்துக்கு, கோவையே தலைநகரமாக விளங்கி வருகிறது. இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட மேற்கு மாவட்டங்களுக்கான விமான நிலையமாக கோவை விமான நிலையம் உள்ளது. பெயரளவில் மட்டுமே, சர்வதேச விமான நிலையமாக இருக்கும் இதை விரிவாக்கம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.


அதற்கு நிலம் தேவை; கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, 2010ல், அரசாணை வெளியிடப்பட்டும், எட்டாண்டுகளாக ஒரு ஏக்கர் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை; இதனால், சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்தை இழக்கும் அபாயம் உருவாகி வருகிறது. நிலத்தை மாநில அரசு கையகப்படுத்திக் கொடுத்தால் தான், விரிவாக்கப் பணிகளை விமான நிலைய ஆணையம் மேற்கொள்ள முடியும்; நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு இல்லாததே, பெரும் பிரச்னையாகவுள்ளது.


விமான நிலைய விரிவாக்கம் நடந்தால் மட்டுமே, மேற்கு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி, அடுத்த கட்டத்தை எட்டும் என்பதால், இந்த பணியை வேகப்படுத்த வேண்டுமென்று கொங்கு மண்டல தொழில் அமைப்பினர் இணைந்து, 'கொங்கு குளோபல் போரம்' என்ற அமைப்பைத் துவக்கி, முதல்வரையும் சந்தித்து, முறையிட்டு விட்டனர்.


முதல்வர் பழனிச்சாமி, உள்ளூர் அமைச்சர் வேலுமணி ஆகியோரும், கோவைக்கு வரும்போதெல்லாம், 'சீக்கிரம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றே தொடர்ந்து உறுதி அளித்து வருகின்றனர்; ஆனால், பணிகள் எதுவும் நடந்தபாடில்லை. இதற்கு நிதி ஒதுக்காதது காரணமா, அக்கறையற்ற அதிகாரிகள் காரணமா என்பது புரியாத புதிராகவுள்ளது. இதனால், கொங்கு மண்டலத்தில் உள்ள தொழில் அமைப்பினர் அனைவரும், விரக்தி அடைந்துள்ளனர்.


இவை தவிர்த்து, மெட்ரோ ரயில், மேற்கு புறவழிச்சாலை, அவிநாசி ரோடு உயர் மட்ட மேம்பாலம், திருச்சி ரோட்டில் மூன்று மேம்பாலங்கள், பஸ் போர்ட் என, கோவைக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; எதுவுமே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாகத் தெரியவில்லை.
முதல்வர் நினைத்தால் மட்டுமே, கோவைக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, இந்த பணிகளை விரைவுபடுத்த முடியும்; அதை அவர் விரைவாகச் செய்ய வேண்டுமென்பதே, கோவை மக்களின் ஒருமித்த கோரிக்கை.


இழப்பீடு தரலாம் இப்போதே!

உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான மேம்பாலம் கட்டும் பணி, துவங்கி விட்டது. ஆனால், கரும்புக்கடை 'டோல்கேட்' காரணமாக, பாதிப் பாலத்துக்கு மட்டுமே, வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. மீதிப் பாலத்துக்கான வரைபடம், மதிப்பீடு தயாரிக்கும் பணி துவங்கி விட்டது; ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரலில், 'டோல்கேட்' ஒப்பந்தம் முடிந்தபின்பே, 'டெண்டர்' விடப்படும் என்கிறது நெடுஞ்சாலைத்துறை. அதற்குப் பதிலாக, மாற்று ஆலோசனையை ஓய்வு பெற்ற பொறியாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். இந்த 'டோல்கேட்'டில், கணினி ரசீது மட்டுமே தரப்படுவதால், ஒரு மாத வருவாய் எவ்வளவு என்பதைக் கண்டறிவது எளிதான விஷயமே. அதனால், மீதமுள்ள 10 மாதங்களுக்கும் எவ்வளவு வருவாய் வருமென்பதைக் கணக்கிட்டு, அதை இழப்பீடாக இப்போதே தந்து விட்டால், 'டோல்கேட்'டை காலி செய்து விட்டு, பாலத்தை முழுவதுமாக வடிவமைத்து, அதன் பின் பணியைத் துவக்கலாம்.


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • JIGMONEY - Chennai,இந்தியா

    விளை நிலங்களை சேதம் செய்யாமல் முறையான வழியில் விரிவாக்கம் செய்து மக்கள் பயன்படலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement