Advertisement

வெயிலுக்கு என்ன செய்யலாம்

கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருக்கிறது. வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல், வியர்க்குரு, வேனல்கட்டி போன்ற சாதாரண தொல்லைகளில் ஆரம்பித்து வெப்பத்தாக்கு, வெப்ப மயக்கம் உள்ளிட்ட கடுமையான வெப்பநோய்கள் வரை நமக்குவந்து சேரும். நாம் உண்ணும் உணவிலும், வாழ்க்கை முறைகளிலும் சிலமாற்றங்களை மேற்கொண்டால், இவற்றிலிருந்து எளிதில் தப்பித்துவிடலாம்.
வெயில் ஏற ஏற உடலில் வியர்வை அதிகமாகச் சுரக்கும். அப்போது தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்துஅடைத்துக் கொள்ளும். அதனால் வியர்க்குரு வரும். வெயில்காலத்தில் தினமும் இருவேளை குளித்தால் வியர்க்குரு வராது. குளித்து முடித்தபின் உடலைத் துடைத்துவிட்டு, வியர்க்குரு பவுடர், காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
வேனல் கட்டிகள் : தோலின் வழியாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். உடனே அந்த இடம் வீங்கி புண்ணாகும். இதுதான் வேனல் கட்டி. இதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வேனல் கட்டி வருவதைத் தடுக்க, வெயிலில் அலைவதைத் தவிர்க்கவேண்டும்.கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்கு முக்கியக் காரணங்கள். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள், படிகங்களாகமாறி சிறுநீர்ப்பாதையில் படிந்து விடும். இதனால் சாதாரணமாக காரத்தன்மையில் இருக்கும் சிறுநீர் அமிலத்தன்மைக்கு மாறி விடும். இதன் விளைவால் சிறு நீர்க்கடுப்பு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்னை சரியாகிவிடும். குறிப்பாகச் சொன்னால், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும்.
வெப்பத்தளர்ச்சி : வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது உடலின் வெப்பம் சிலருக்கு 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டி விடும். அப்போது உடல்தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றஅறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறி விடுவதால் இந்தத்தளர்ச்சி ஏற்படுகிறது.நீண்டநேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள், சாலையில் நடந்து செல்கிறவர்கள், கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் திடீரென மயக்கம் அடைவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது வெப்பமயக்கத்தின் விளைவு. இதற்குக்காரணம், வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தக்குழாய்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக்கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழிசெய்து விடுகிறது; இதனால் இதயத்திற்கு ரத்தம் வருவது குறைந்து விடுகிறது; ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை; உடனே தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது.
உயிர்காக்கும் முதலுதவி : வெப்பமயக்கம் மற்றும் வெப்பத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களை குளிர்ச்சியான இடத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லுங்கள். மின்விசிறிக்குக் கீழ்படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்யுங்கள். அவரைச் சுற்றிக் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். இதுமட்டும் போதாது. அவருக்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் அடங்கிய திரவங்களைச் செலுத்தவேண்டியதும் முக்கியம். ஆகையால் உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்கும் வழிசெய்யுங்கள்.
தண்ணீர்! தண்ணீர்! : கோடைவெயிலைச் சமாளிக்கவும், வெப்ப நோய்கள் வராமல் தடுக்கவும் அதிகமாக தண்ணீர் குடியுங்கள். சாதாரணமாக தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம் என்றால், வெயில் காலத்தில் 3 லிருந்து 4 லிட்டர் வரை குடிக்க வேண்டும்.வெயில் காலத்தில் காபி, டீ குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்களைக் குடிப்பதை விட இளநீர், மோர், பதநீர், பழச்சாறுகள், பானகம், லஸ்சி குடிப்பதை அதிகப்படுத்துங்கள். எலுமிச்சைச் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது. தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள்.
ஆகாத உணவுகள்! : கோடையில் காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள், பேக்கரி பண்டங்கள், அசைவ உணவுகள் ஆகியவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் இவ்வகை உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இட்லி, இடியாப்பம், தயிர்ச்சாதம், மோர்ச்சாதம், கம்பங்கூழ், வெங்காயப்பச்சடி, வெள்ளரி சாலட், பொன்னாங்கண்ணிக்கீரை, பீட்ரூட், காரட், முள்ளங்கி, பாகற்காய், தக்காளி ஆகியவை சிறந்த கோடை உணவுகள்.இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்லவேண்டும் என்றால் குடையோடு செல்லவேண்டும். இயன்றவரை நிழலில் செல்வது நல்லது. குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். இவர்களுக்கு வெப்பத்தைத் தாங்கும் சக்தி இல்லை என்பதால் கடுமையான கோடைவெயிலில் சிறிது நேரம் விளையாடினால் கூட மயக்கம் வந்து விடும்.வெயிலில் அதிகநேரம் சாலையில் பயணிக்க வேண்டியதிருந்தால் கண்களுக்கு சூரியக் கண்ணாடியை அணிந்து கொள்ளலாம்.உடைகளைப் பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே. அவற்றில் கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.
- -டாக்டர். கு. கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம்gganesan95gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement