Advertisement

தேர்வு முடிவுகளும் மனவலிமையும்

இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் விருப்பம் உள்ள மாணவர்கள் அனைவரும் 'நீட்' நுழைவுத் தேர்வை எழுதுவதைப் பார்த்த போது (சராசரியாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள்), கடந்த வருடம் இந்த தேர்வை எதிர்த்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பிஞ்சு அனிதாவின் முகம் நினைவுக்கு வந்து சென்றது. தன் உயிரை மாய்த்து தியாகம் செய்த அந்த 18 வயது மாணவி என்ன சாதித்தாள். ஊடகங்களும், பொதுமக்களும், அரசியல்வாதிகளும் ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அந்த நினைவுகளுடன் இருந்திருப்பார்களா? இதே போல் சமீபத்தில் 18 வயது நிரம்பிய பிளஸ் 2 மாணவன் தினேஷ் தன் தந்தையின் குடிப்பழக்கத்தை எதிர்த்தும், டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியும் ஒரு வேண்டுகோளை வைத்து பாலத்தின் கீழ் துாக்கில் தொங்கினான். தினேஷ், நீ உன்னுடைய உயிரை தியாகம் செய்து என்ன சாதித்தாய்?நீங்கள் உங்கள் உயிரைத் தியாகம் செய்வதற்கு ஆயிரம் நியாயங்களை கற்பிக்கலாம். இருந்த போதிலும் தற்கொலையும் ஒரு கொலை தானே? இதோ... தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில், தயவு செய்து தற்கொலைகளை யாரும் நியாயப்படுத்தாதீர்கள்!குடும்பச் சூழ்நிலைதன் கணவன் தான், குடித்து குடும்பத்தை சீரழிக்கிறான். மகனாவது வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றுவான்... அதுவரை இந்த கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வாழ்வோம் என்று உன் மேல் நம்பிக்கை வைத்து தானே வாழ்கிறாள் அந்தத் தாய். உன் தந்தையைப் போல, நீயும் பொறுப்பற்ற செயலை தானே செய்தாய். குடும்பத்தை காப்பாற்ற, ஆண்மகனுக்கு 18 வயது போதாதா? ஓட்டுனர் உரிமம் வாங்கவும், ஓட்டு போடவும் 18 வயதை தானே நமது அரசு நிர்ணயித்துள்ளது. 'மைனர்' என்று அழைக்கப்பட்ட நீங்கள் 18 வயதில் தானே 'மேஜர்' ஆகுகிறீர்கள். குடிகார தந்தையை அடித்து விரட்டிவிட்டு அந்த குடும்பத்துக்கு ஒரு பொறுப்பான தலைவனாக செயல்பட்டிருக்கலாமே. உன் தந்தை குடித்து தன் கடமைகளை செய்ய மறந்தால், நீ உன் உயிரை மாய்த்து அதையே தானே செய்திருக்கிறாய்.அனிதா கொஞ்சம் பொறுமையாக இருந்து ஒரு வருடம் 'நீட்' தேர்வுக்கு மீண்டும் படித்து நுழைவுத் தேர்வுக்கு தயாராகியிருக்கலாம் அல்லது அவள் மதிப்பெண்ணுக்கு வேறு துறையில் சேர்ந்து படித்து சாதித்திருக்கலாம். நம் உயிரை தியாகம் செய்து தான் ஒரு செயலை நிறைவேற்ற முடியும் என்றால் உலகில் ஒரு மனித உயிர் கூட வாழ முடியாது. அவர் உயிரை விட்டதால் அவர் பெற்றோருக்கு எவ்வளவு சங்கடங்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.அரசியல்வாதிகளின் மனம்இளம் வயது தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் அடுத்தவர்களின் பார்வைக்கும், வார்த்தைகளுக்கும் அதிக மரியாதை கொடுத்து வாழ்வது. மேலும் கேலி பேச்சுகளை மனதிற்கு எடுத்துச் சென்று நம்மை நாமே காயப்படுத்திக்கொள்வது.நினைத்து பாருங்கள்... நமது அரசியல்வாதிகளை, அவர்களுக்கு தான் எவ்வளவு மனவலிமை. அவர்களை எவ்வளவு கேவலமாக 'மீம்ஸ்' போடுகிறோம், கிண்டல் செய்கிறோம், அசிங்கப்படுத்துகிறோம். ஒருவர் அல்ல, இருவர் அல்ல உலகம் முழுவதும் அந்த 'மீம்ஸ்'களையும், 'டிரோல்'களையும் பார்த்து சிரித்து, கேவலமாக பேசி அவமானப்படுத்துகிறோம். ஒவ்வொரு 'மீம்ஸ்'களுக்கும், பேச்சுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு பதில் கொடுத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால், எப்படி அரசியல் நடத்துவது. கடவுள், அரசியல்வாதிகளை படைக்கும் போது மட்டும் இதயத்துக்கு பதில் இரும்பையா மனதாக வைத்தார். எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் யார் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தது.அவர்களுடைய ஒரே எண்ணம், குறிக்கோள் எப்படியாவது அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதே. வெற்றி பெற்ற அரசியல்வாதிகளை விட்டு விடுங்கள், தேர்தலில் டிபாசிட்டை இழந்து தோல்வியுற்ற அரசியல்வாதிகளை நினைத்துப் பாருங்கள். அடுத்த நாளே அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி தோல்விக்கான காரணங்களை பேட்டி கொடுக்கின்றார்கள். அவர்களிடம் உள்ள இந்த குணங்களை ஏன் நாம் நம் வாழ்க்கையில் தோல்விகள் வரும்போது கடைப்பிடிக்கக் கூடாது.குறைகளை எதிர்கொள்ளுங்கள்'வாழ்க்கையில் எல்லாம் வெற்றியாக அமைய வேண்டும்' என எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் இது அனைத்து சூழ்நிலைகளிலும் சாத்தியம் இல்லை. வெற்றியும், தோல்வியும் அனைத்து விஷயங்களிலும் இணைந்தே இருக்கிறது. குழந்தை பருவத்திலேயே எல்லாவற்றிலும் முதலிடம், தனிமைத்துவம் இப்படியான ஒருமை எண்ணங்களை அவர்களின் மனங்களில் தனித்துவமாக வளர்த்து விடுகிறோம். அதுவே வளரும் போது அவர்களுக்கு சகிப்புத்தன்மை, தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாமல் போய்விடுகிறது.வகுப்பில் முதல் பெஞ்சில் அமர்ந்து முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனை விட கடைசி பெஞ்சில் அமர்ந்து பல பாடங்களிலும், வகுப்பிலும் தோல்வியுறும் மாணவனின் மனம், அதிக வலிமையாக இருக்கும். ஏனென்றால் அவன் வாழ்க்கையில் ஆசிரியர்களிடமும், குடும்பத்தாரிடமும் எல்லோர் முன்னிலையிலும் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டிருப்பான். தோல்விகளை பலமுறை அனுபவித்திருப்பான். அதிகமுறை மனம் வலியை அனுபவித்ததால் மனம் மிகவும் வலுவடைந்திருக்கும். அதனால்தான் முன் பெஞ்சுகாரர்கள் பலர், பின் பெஞ்சில் அமர்ந்தவரின் தொழிற்சாலைகளிலும், கல்வி கூடங்களிலும் பணியில் சேர்ந்து, அவர்களிடம் கை கட்டி வேலை பார்த்து சம்பளம் வாங்குகின்றனர்.மரணம் அரசை மாற்றுதாதினேஷ் நல்லசிவன் தற்கொலை செய்து கொண்டதினால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டார்களா? அனிதாவின் தற்கொலை 'நீட்' தேர்வை நீர்த்து போக வைத்ததா. இல்லை தானே. இன்று வாழ்க்கையில் உயர்ந்த பலர், பல நேரங்களில் தோல்விகளினால் துவண்டவர்களே. தோல்விகள் வந்து மனம் துவண்டு தற்கொலை எண்ணம் தோன்றும் போது நம் மனதை நாமே அதட்டி, நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.'வாழ்ந்து காட்டுவேன், சாதித்து காட்டுவேன். வீழ்ந்து விட மாட்டேன், என்றாவது ஒரு நாள் வெற்றி பெற்றே தீருவேன்' என்று கூறி மனதை தைரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் கண்ணில் படும் இடங்களில் எல்லாம் நம் மனதை வலிமையாக்கும் வாசகங்களை எழுதி ஒட்டி வைக்க வேண்டும். 'பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்ற வாசகம் நிச்சயம் அதில் ஒன்றாக இருக்கட்டும்.- அமுதா நடராஜன்தன்னம்பிக்கை பயிற்றுனர்மதுரைr_amuthayahoo.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement