Advertisement

வலசை பறவைகளை வாழ வைப்போம்!

மதுரையிலிருந்து சென்னை செல்ல 'இவ்வளவு துாரமா' என அங்கலாய்ப்போம். ஆனால் பறவைகள் ஆண்டுதோறும் பல்லாயிரம் கி.மீ., தொலைவுக்கு, சாதாரணமாக இடம்பெயர்ந்து செல்கின்றன. இயற்கையின் வினோதங்களில் வியப்பு அளிக்கக்கூடியது பறவைகளின் இந்த இடம்பெயர்தல். அதாவது வலசை போதல்.


உயிரினங்களுக்கு இருப்பிட சிக்கல், கடும் தட்பவெப்ப நிலை, உணவு பற்றாக்குறையை தவிர்க்க தாய் நிலங்களிலிருந்து, வாழும் சூழல் நிறைந்த இடங்களுக்கு சென்று திரும்புவதை 'வலசை போதல்' என்கிறார்கள் பறவையியலாளர்கள். வலசை செல்லும் பறவைகளை காத்தல், அதன் வலசை பாதைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுத்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த 'உலக வலசை பறவைகள் தினம்', 2006- முதல் மே 10ல் கடைபிடிக்கப்படுகிறது.


பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், பறவைகளின் வலசையை அறிந்துள்ளனர். பழந்தமிழ் நுால்களில் 'வலசை' போவதை 'புலம்பெயர் புள்' என்றும், 'வம்பப் புள்' என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரேக்க மேதை அரிஸ்டாட்டில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் விலங்குகளின் பருவகால இடப்பெயர்வை கண்டறிந்து 'விலங்குகளின் வரலாறு' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளார்.


பறவைகளும் பயணங்களும்:
நமது கட்டை விரல் பருமனில் உள்ள டகங்காரப் பறவை முதல் குதிரை அளவு கொண்ட நெருப்பு கோழி வரை இந்தியாவில் 1,263 பறவை இனங்களும், அதில் தமிழகத்தில் 520 இனங்களும் உள்ளன. இதில் 160 இனங்கள் வலசை செல்லக்கூடியவை. வாலாட்டுக்குருவி, ஒவ்வொரு ஆண்டும் ரஷ்யா சென்று வருமாம். வரித்தலை வாத்து மங்கோலியாவில் இருந்து 21ஆயிரத்து 120 அடி உயரமுடைய இமயமலையை கடந்து 8,000 கி.மீ., தொலைவை இரண்டு மாத காலத்தில் பறந்து கூந்தங்குள்ளத்தை வந்தடைகிறதாம்.


மிகவும் நீண்ட துாரம் பறக்கும் வலசைப் பறவை 'ஆர்ட்டிக்டேன்'. வடதுருவ ஆர்க்டிக்கில் இருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா கண்டங்களின் வழியே தென்துருவ அண்டார்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் இவை போகின்றன. ஒரு அடி நீளமுள்ள இப்பறவை, வாழ்நாளின் பெரும்பகுதியை பறப்பதிலேயே செலவிடுகிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வர 70ஆயிரத்து 900 கி.மீ., பயணிக்கிறது.


தமிழில் 'மூக்கான்' என நாம் அடையாளப்படுத்தும் காட்விட் பறவைக்கு, உலகிலேயே அதிக துாரம் ஒரே மூச்சில் நிற்காமல் பயணிக்கும் பறவைகளின் பட்டியலில் முக்கிய இடமுண்டு. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள மிராண்டாவில் இருந்து 2007 மார்ச்சில் புறப்பட்ட பெண் பட்டை வால் மூக்கான் பறவை உடலில், சிறிய ரேடியோ மின் அலைபரப்பி பொருத்தப்பட்டது. இதன் பயணம் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டது.


இப்பறவை இரைக்காகவோ, தண்ணீருக்காகவோ எங்கும் தரையிறங்காமல் எட்டு நாட்கள் பறந்து 10 ஆயிரத்து 200 கி.மீ.,ல் உள்ள 'யாலு ஜியாங்' என்ற இடத்தை அடைந்தது. பின், ஐந்து வார ஓய்வுக்கு பின் அங்கிருந்து கிளம்பி ஐந்து நாட்களில் 7,400 கி.மீ., பறந்து அலாஸ்காவின் யூகான்-குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை எட்டியது. நான்கு மாதங்களுக்கு பின் மீண்டும் ஆக.,30ல் புறப்பட்டு வேறு பாதையில் 11 ஆயிரத்து 600 கி.மீ., ஒரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில், கிளம்பிய இடமான மிராண்டா பகுதியை அடைந்தது.


இந்த சிறு பறவை ஏறத்தாழ ஆறு மாதங்களில் 29 ஆயிரத்து 200 கி.மீ., பயணம் செய்தது. மூக்கான்களை ராமநாதபுரம் மாவட்டம் கோடியக்கரையில் நவம்பர் முதல் பிப்ரவரி வரை பார்க்கலாம். மூக்கானின் வேகம் மணிக்கு 58 கி.மீ., வலசை பறவைகளில் பெரும்பாலானவை இரவில் பறப்பவை.


தயார்படுத்துதல்:
நம்மைப்போலவே வலசை பறவைகளும் தயாரிப்பு பணியில் கில்லாடிகள். இடம்பெயர்வதற்கு முன்பாக தனது எடையில் பாதி எடைக்கு ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன. 200 கிராம் எடையுள்ள ஒரு பறவை, உடலில் 100 கிராம் கொழுப்பை சேமித்துக் கொள்கிறது. இதுதான் பறப்பதற்கான எரிசக்தி.


இடப்பெயர்ச்சி செய்யும் சில பறவைகள் கறுப்பு நிறத்திலும், ஆழ்ந்த பிக்மென்ட் மற்றும் உயர்வான ஆன்டி ஆக்சிடன்ட் கொண்ட பழங்களை விரும்புவதாகவும் சொல்கிறார்கள். இதனால்தான் ஒரே மூச்சில் பல ஆயிரம் கி.மீ., பறக்கும் மூக்கானால், எட்டரை நாட்கள் பட்டினியாக இருக்க முடிகிறது.


உணவு விஷயத்தில் மட்டுமல்ல. சில பறவைகள் புறப்படும் முன் கூட்டமாக எப்படி அணிவகுத்து செல்வது என்றுக்கூட ஒத்திகை பார்க்கின்றன. பறவைகள் கூட்டமாக செல்லும் போது 'V' போன்ற வடிவத்தில் பறக்கும். இவ்வாறு செல்லும் போது முன்னால் பறக்கும் பறவையின் இறக்கை அசைவுகளால் ஏற்படும் காற்றலை அதிர்வுகள், பின்னால் வரும் பறவைகளுக்கு பறக்க தேவையான சக்தியை அளிக்கிறது. இதனால் அவை சக்தியை வீணாக்க வேண்டியதில்லை.


அதே நேரத்தில், ஒரே பறவை தலைமை தாங்கிச் சென்றால் அது தளர்ந்து விடும் என்பதால், கொஞ்ச துாரம் பறந்தபின் அந்த பொறுப்பை அடுத்தடுத்து வரும் பறவை ஏற்றுக்கொள்ளும். பறவைகள் வலசை சென்றாலும், இனப்பெருக்கத்தை தாய் நிலங்களிலேயே மேற்கொள்கின்றன. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இடமே ஒரு பறவைக்கு 'தாய் நிலம்'.


எப்படி பயணிக்கிறது:
வலசை பறவைகளின் வான்வழிகளை 12 தடங்களாக பிரித்துள்ளனர். இதில் இந்தியாவிற்கு வரும் பறவைகளின் வான் வழியை 'மத்திய ஆசிய வான்வழி' என்கின்றனர். ஜி.பி.எஸ்., கருவி இல்லாமல் பறவைகள் எப்படி வழி தப்பாமல் சரியாக வந்துசெல்கின்றன? இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்கின்றன.


பறவைகள் வானிலை பற்றி முன்கூட்டியே அறியும் ஆற்றல் படைத்தவை. போகும் வழியில் அபாயம் இல்லை என்று தெரிந்த பின்னரே பயணத்தை தொடங்குகின்றன. இடப்பெயர்ச்சி செய்யும் போது அது பகலில் சூரியனின் திசையை கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாக கொண்டும், பூமியின் காந்த அலைகளை கொண்டும், நில அடையாளங்களை கொண்டும், தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளை கொண்டும் பாதையை உணர்ந்து பயணிக்கின்றன.


பறவைகளுக்கு பாதிப்பு:
'உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 1.40 லட்சம் முதல் 3.28 லட்சம் பறவைகள் காற்று விசையாழிகள் மூலமாக கொல்லப்படுகின்றன. இதைவிட பெரிய ஆபத்து, காற்றாலைகள் மற்றும் அதனுடன் இணைந்த மின்வழங்கல் முறைகளால் பறவைகளின் வாழ்விடங்களை நாம் அழித்துவிடுவதுதான்' என்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள்.


இந்தியாவின் தார் பாலைவனம் உள்ள ராஜஸ்தானில், அரியவகை பெண் பறவையின் எஞ்சிய எலும்புகள், பழுப்பு நிற இறகுகள் போன்றவை மின்கம்பிகளுக்கு கீழாக சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஆய்வில் அது அழிந்து வரும் பறவைகள் இனப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள பஸ்டர்டு பறவை எனத் தெரிந்தது. இதில் உலக அளவில் 150 பறவைகளே எஞ்சியுள்ளனவாம். ஒரு இனத்தின் பெண் பறவையின் அழிவு சோகமானது.


டேராடூன் வனவிலங்கு நிறுவனத்தின் நிபுணர் சுதீர்த்த தத்தா, ''2017-ம் ஆண்டு மட்டும், இப்பகுதி உயரழுத்த மின்கம்பிகள்மீது மோதி மூன்று பறவைகள் இறந்ததை கண்கூடாகக் காண நேரிட்டது,'' என்கிறார். எனவே, பறவைகளை திசைமாற்ற பிரகாசமான வண்ண அடையாளங்களை நிறுவ தத்தா குழு, மின் நிறுவனங்களுக்கு பரிந்துரைத்தது. இதற்காக 2017- மே மாதம் சோதனை முயற்சியாக, ராஜஸ்தான் எரிசக்தி மற்றும் மின்சார சக்தி நிறுவனங்களுக்கு, 27 பறவை திசை மாற்றும் கருவிகளை அளித்தது. ஆனால், அவற்றை எந்த நிறுவனங்களும் சோதித்து பார்க்க முன்வரவில்லை.


பூச்சிக்கொல்லி ஆபத்து:
நீர்நிலைகளை அழித்ததால் தமிழகத்திற்கு வலசை வரும் பறவைகள் குறைந்து விட்டன. 1980ல் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வலசை பறவைகளுக்குப் புகலிடமாகத் திகழ்ந்தது கோடியக்கரை. வாழிடச் சீர்கேட்டால் ஒரு லட்சத்துக்கும் குறைவான வரத்து பறவைகளே வந்து செல்கின்றன. பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் பறவைகள் அழிவு மட்டுமல்ல; ஓர் உயிர்ச் சங்கிலியே அறுந்து வருகின்றது.


'பறவை பாதுகாப்புக்காக நம் குரல்களை ஒருங்கிணைப்போம்' என்பதுதான் இந்த ஆண்டு வலசை போதல் தினத்துக்கான கருப்பொருள். பறவைகளை பாதுகாப்பதன் மூலம் சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம். நமது சிந்தனை, செயல் இயற்கையை மையப்படுத்தியதாக இருக்கட்டும். பறவைகள் மட்டுமல்ல... நம் ஆயுளும் கூடும்.


ப.திருமலை,

எழுத்தாளர், மதுரை.

84281 15522

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    அருமை நன்றி .மேலும் கருத்துக்களை பகிருங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement