Advertisement

இளைய பாரதத்தினாய் வா!

நிறைவான செயல்களை நிறைய செய்.
நிறைய செயல்களை நிறைவாய் செய்.

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் இளைஞர்களே. புதிய சாதனைகள், புதிய இலக்குகள், புதிய முயற்சிகள் அனைத்தும் இருக்கும் அளப்பரிய ஆற்றல் கொண்டது இளைய சமுதாயம். எழுச்சிமிகு எண்ணங்களால் நம் இந்திய நாட்டை ஏற்றம் அடையச் செய்பவர்கள் இளைஞர்கள். அதனால் தான் பாரதி, 'இளைய பாரதத்தினாய் வா வா' என பாடியுள்ளார்.

இளைஞர்கள் பெரும்பாலும் ஜாதிபார்ப்பதில்லை. பேதங்கள் இங்கு இல்லை. பிரிவினைகள் இல்லை. சண்டைகள் இல்லை. இளமையும் புதுமையும் நிறைந்தது தான் இளமைப் பருவம். துடிப்பு நிறைந்த சற்று பொறுப்பு குறைந்த குதுாகலம் நிறைந்த பருவம் இளமை பருவம்.

இளைஞர்களை தாருங்கள் :'நுாறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள்' என்று கேட்டார் விவேகானந்தர். அதற்கு சான்றாக, ஜல்லிக்கட்டுக் காளையைப் போல சீறிப் பாய்ந்து, ஜல்லிக்கட்டுக்காக வெற்றித் தேடித் தந்தவர்கள் இளைஞர்கள் தான். இளைஞர்கள் பொதுநலம் உடையவர்கள் என்பதற்கு சான்று சென்னையில் ஏற்பட்ட வெள்ளம். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் காப்பாற்றி பசியால் வாடியவர்களுக்கு தங்களால் முடிந்ததை கொடுத்து, அவர்களது பசியையும் போக்கினர்.

'கூகுளில்' பணியாற்றும் சுந்தர்பிச்சையில் ஆரம்பித்து, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கிய மாரியப்பன் வரை இளைஞர்களின் பங்கு எண்ணிலடங்கா. தோனிக்கு விசில் அடிப்பதும் இளைஞர்கள் தான், போராட்டத்தில் குரல் எழுப்புவதும் இளைஞர்கள் தான். இவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை; வித்தியாசமானவர்கள்.

இப்படி ஆக்கப்பூர்வமான பாதைகளில் ஒரு புறம் சென்று கொண்டிருந்தாலும், மற்றொருபுறம் மாய உலகில் ஆட்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் இளைஞர்கள். 'வாட்ஸ் ஆப்', முகநுாலில் தேவையற்ற செயல்களை செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். வங்கிகளில் கணக்கு இருக்கிறதோ இல்லையோ 'முகநுாலில்' கணக்கு இருப்பதையே பெருமையாக எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.

இளைய பாரதம் :புற உலக கவர்ச்சிகளாலும், வேடிக்கைகளாலும் மயங்கிக் கொண்டிருக்கிறது இளைய பாரதம். புத்தக வாசிப்பு என்பதெல்லாம் மறைந்து போய் விட்டது. வானவில்லில் எட்டாவது நிறமாய் புத்தகங்கள் மாறி விட்டன. அதனாலேயே வெற்றிகளும் எட்டாக்கனி ஆகி விட்டன. சமூக நடப்புகள் தெரிவதில்லை. பாடப்புத்தகத்தை தாண்டிய விஷயங்கள் தெரிவதில்லை.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாததற்குக் காரணம் கூட, நடைமுறை செய்திகளை அறிந்து கொள்ளாததால் தான். நாளிதழ்களைப் படிக்கும் பழக்கத்தை இளைஞர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அன்பும், பண்பும் தொலைந்து போய் விட்டது. வன்முறைகள் நிறைந்த உள்ளங்களைப் பார்க்கும் போது மனம் வேதனைப்படுகிறது.

அப்துல்கலாம் கனவு கண்டது இத்தகைய இளைஞர்களையா? சாதனைகள் படைக்கும் இளைஞர்களை அல்லவா? வீட்டில் பாலுக்கு வழியில்லை என்ற போதும், தங்களின் அபிமானத் தலைவனின் 'கட் அவுட்'டுக்கு பால் ஊற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களை என்னவென்று சொல்வது? 'மனவலிமை கொண்டவர்கள் இளைஞர்கள்' என்ற காலம் போய், சிறு சிறு அவமானங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் இன்னுயிரை மாய்க்கும் இளைஞர்களின் செயல்கள் வருத்தம் தருவதாகவே உள்ளன. பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை. இலக்குகள் தவறாகும் போது வாழ்வியல் நெறிகளும் தவறாகிப் போகின்றன.

சிட்டுக்குருவி கதை :அது ஒரு சிட்டுக் குருவி. தன் கனவில் ஒரு அழகிய மாட மாளிகை வீட்டைக் கண்டது. கனவில் கண்ட வீட்டை அடைய முடிவு செய்தது. வழியில் கண்ட குரங்கிடம் வழி கேட்க அதுவோ, 'உன் சிறகில் ஒன்றைத்தா' என்று கேட்டது: ஒன்று தானே என நினைத்து கொடுக்க, பாதி வழியை மட்டுமே காட்டியது. திரும்பவும் வழியில் தென்பட்டவைகளிடம் கேட்க, ஒவ்வொன்றும் சிறகுகள் கேட்க, கொடுத்துக் கொண்டே வந்த குருவி இறுதியில், கனவில் கண்ட வீட்டைக் கண்டது. அந்தோ பரிதாபம், அதனால் பறக்க முடியவில்லை. வழி முழுவதும் சிறகுகளை கொடுத்த குருவியால் எப்படி பறக்க முடியும்?

இன்றைய இளைய சமுதாயம் கூட இப்படிதான் அற்ப சந்தோஷங்களுக்காக பலவீனமாகிக் கொண்டு இருக்கிறது. நிராகரிப்புகள் இல்லாமல் வெற்றிகள் வருவதில்லை. வலிகளையும், அவமானங்களையும் கடந்தவர்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.மூக்கில் ரத்தம் கொட்ட, பாகிஸ்தான் போட்டியில் ஆடிய கிரிக்கெட் வீரர் சச்சின், பின்னாளில் பந்து வீச்சின் சிம்ம சொப்பனம் ஆனார். வலிகளையும் அவமானங்களையும் சேகரித்து வையுங்கள். அது உங்கள் வெற்றி விழாவில் பேசுவதற்கு உதவும்.

வியர்வையில்லாமலும், விமர்சனங்கள் இல்லாமலும் யாரும் வெற்றி பெறுவதில்லை. வியர்வை சிந்தி உழைத்தவர்களுக்கு தான் சிலை வைத்தார்கள். எந்த ஒரு செயலை செய்தாலும் இந்த உலகம் உன்னை விமர்சிக்கத்தான் செய்யும். அது சில சமயம் பாராட்டுக்களாகவும் இருக்கலாம், எதிர்மறை விஷயங்களாகவும் இருக்கலாம். இரண்டையும் ஒன்றாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்கஸ் அரிலஸ் கூறியுள்ளார்.

கனவை நனவாக்குங்கள் :விதையாய் வீழ்ந்து விருட்சமாக எழுந்தால் உலகம் உன்னைப் பாராட்டும். வெறும் கதையாய் முடிந்து, கனவாய் தொலைந்தால் காலம் உன் பெயரைத் துாற்றும். விதையா, இல்லை கதையா? என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். இளமை பருவத்தில் குறும்புகள் அவசியம் தான். ஆனால் அதற்காக வரம்புகள் மீறல் தவறல்லவா? இளைஞர்களுக்குள் ஒரு நெருப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். சிகரெட் பற்ற வைப்பதற்கு அல்ல; சிகரத்தை பற்ற வைப்பதற்கு.அவமானங்களை பற்றி கவலைப்பட்டு கொண்டே இருந்தால் எப்படி?

அவமானப்படாதவர்கள் யாரும் சாதித்தது இல்லை. சாதித்தவர்கள் யாரும் அவமானப்படாமல் இருந்ததில்லை. ரத்தத்தால் கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு ரத்ததானம் செய்ய முன் வாருங்கள். கலாம் சொன்னார் என்பதற்காக, இளைஞர்கள் கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கின்றனர். விவேகானந்தர் நுாறு இளைஞர்களை கேட்டார் அன்று. கோடி கணக்கில் இளைஞர்கள் உள்ளனர். ஆனால் ஒரு விவேகானந்தரைக் கூட காண முடியவில்லை இன்று.

எதுவும் செய்யாத இந்த சமூகத்திற்கு நாம் என்ன செய்வது என்று, தன் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது போதும். கட்டுக்கதைகள் பேசி, புறம் பேசி மற்றவர்கள் மனதை புண்படுத்தியதெல்லாம் போதும். இனி வரும் காலங்கள் இளைஞர்கள் காலம். அதை அறிவாலும், அன்பாலும் நிரப்புவோம். இந்த உலகை அற்பமாக எண்ணாமல் அற்புதமாக எண்ணிக் கொண்டாடுங்கள்.

அன்பு எனும் மந்திரம் :'சாப்பிட்டியா அம்மா' என்று அம்மாவிடம் கேட்டுத் தான் பாருங்களேன். 'என்னப்பா செய்யணும்' என்று அப்பாவிடம் கேளுங்கள். நமக்கான ஆதார ஜீவன்கள் அவர்கள் தான். யார்யாருக்கோ 'லைக்ஸ்' கொடுக்கும் இளைஞர்களே, உங்கள் பெற்றோரை 'லைக்' செய்யுங்கள். 'முகநுால்', 'வாட்ஸ் ஆப்'பில் எதை எதையோ 'ஷேர்' செய்யும் இளைஞர்களே, பாசத்தையும், அன்பையும் 'ஷேர்' செய்யுங்கள். சமூக ஊடகங்களில் வாழ்க்கையைத் தொலைத்துவிடாதீர்கள். வசந்த காலங்கள் நம்மிடம் உண்டு. வருங்காலங்களை வளமான செயல்களால் நிரப்புவோம். வானம் வசப்படும். பெரிதினும் பெரிது கேட்போம். அல்லவை நீக்கி அறம் கேட்போம். புதியதோர் உலகம் செய்வோம். அதை புதிய எண்ணங்களால் அழகாக்குவோம்.

-க. பிரவீன் பாரதி,
மாணவர், மெப்கோ பொறியியல் கல்லுாரி, சிவகாசி.
80567 37338

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Kaliyan Pillai - Chennai,இந்தியா

    இந்த நாட்டைப்பற்றியும் சமுதாய சீர்திருத்தம் பற்றியும் இன்றய இளைஞர்களுக்கு துளியும் அக்கறையில்லை. சுயநலம். பூரா சுயநலம். காரு பண்ணனும், காசு பண்ணனும். கணக்குப் பண்ணனும். ஜல்ஸா பண்ணனும். அவ்வளவுதான். இதற்காக அவர்கள் எதையும் இழக்கத்தயார் எதையும் கொடுக்கத்தயார் நாடு எப்படி உருப்படும்?

  • ganapati sb - coimbatore,இந்தியா

    நல்ல கட்டுரை வெறுமனே நிழலான வீடியோ மட்டும் பார்ப்பதை குறைத்து புத்தகங்களை படித்தும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் தோல்விகளை தாங்கி தன்னம்பிக்கை வளர்த்து வெற்றி பெற்று முன்னேறவேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement