Advertisement

என் நாடு எங்கள் தூய்மை!

நூறு ஆண்டுகளுக்கு முன், பிளாஸ்டிக் பொருட்களும், பாலிதீன் பைகளும், மற்றவையும் வராத காலத்தில் சாதாரண கழிவுகளான காகிதங்கள், மரத்துண்டு, இலை தழை கழிவுகளுமே நம்மை ஆக்கிரமித்து கொண்டிருந்தன. அந்த கழிவுகள் தீங்கு விளைவிக்காததும், உலகத்திற்கு பயன்படுத்துவதாகவும் இருந்தது. நோய்களின் எண்ணிக்கையும் குறைந்திருந்தது.

அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறிதளவில் குப்பை குவிந்திருந்தாலும், அதை அப்படியே நிலத்திற்கு உரமாக பயன்படுத்திய காலம் அது. ஆனால், நாளடைவில் மக்கள் பெருக்கம் காரணமாக, நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் கழிவுகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன. பிளாஸ்டிக் பாலிதீன் பைகளும், மருத்துவமனை கழிவுகளும், தொழிற்சாலை ரசாயன கழிவுகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அதற்கேற்ப மக்களின் நோய்வாய்ப்படுதல் என்ற நிலையும் அதிகரித்து வருகிறது.

விழிப்புணர்வு மயக்கம் :மக்களிடையே தன் இருப்பிடம், தெரு, சாலையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைவு. அதனால்தான் பலவகை கொசுக்கள் உருவாகி, உயிருக்கு உலைவைக்கும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்றவையால் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாக்கடை தண்ணீர், உணவகங்களிலிருந்து வெளியேறும் எச்சில் வாழை இலைகள், உணவுப்பொருட்கள், மருத்துவக்கழிவுகள், துணிகள், மனிதக்கழிவுகள் போன்ற ஏராளமான கழிவுகள் தினமும் வந்து விழுகின்றன. அவை எதற்கும் பயன்படுவ தில்லை. மாறாக நிலத்தை மாசுப்படுத்துகின்றன. சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுகிறது. மனிதன் பாதிக்கப்படுகிறான்.

தலையாய பிரச்னை :பிரதமர் மோடி சுட்டிக்காட்டிய வழியின்படி, துாய்மை இந்தியாவை எப்படி உருவாக்க போகிறோம், இந்த கடும் சவாலை எப்படி எதிர்க்கொள்ள போகிறோம் என்பதுதான் இன்றைக்கு ஒவ்வொரு இந்தியனின் தலையாய பிரச்னை. இந்த ஒட்டுமொத்த கழிவுகளையும் மறுசுழற்சி என்ற தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தக்கூடியது, பயன்படாதது என்று இருவகையாக பிரிக்கலாம். மீண்டும் பயன்படுத்தக்கூடியது என்று கழிவுகளான வீணான உணவு, காகிதம், மரத்துண்டுகள், இலைகள், துணிகளை மீண்டும் பயன்படுத்தி உரமாக, எரிசக்தியாக மாற்ற முடியும்.

இந்த வேலை அரசால் நடந்துக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் வருவாயும் வருகிறது என்பது பாராட்டப்பட வேண்டியது. இதில் பயன்படுத்த முடியாத கழிவுகளைதான், மீண்டும் மறுசுழற்சியின் மூலமாக எதையும் செய்ய முடியாமல் தவிர்க்க வேண்டியிருக்கிறது. நல்ல வேளையாக மக்களின் விழிப்புணர்ச்சியால் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுவிட்டது. இதில் கிராமங்களில்தான் அதிக விழிப்புணர்ச்சி, பொறுப்புணர்ச்சி வேண்டும் என்பதால் மத்திய அரசு, கழிப்பறைகளை கட்டிக்கொடுத்து சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வழிகாட்டுகிறது.

சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் கூட மூதாட்டி, தன் இடத்தில் தனி ஒருத்தியாக கழிப்பறையை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக தந்துள்ளார். உத்தரபிரதேசத்தில், கழிப்பறை இல்லையா; திருமணம் வேண்டாம் என மணமேடையில் இருந்து பெண்கள் வெளியேறுவது தொடர்கிறது. வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாருக்கு கழிப்பறை கட்டிக்கொடுப்பதை பார்க்க முடிகிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் பொறுப்புணர்ச்சி வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

துாய்மை இந்தியா :நம் சுற்றுப்புறத்தை துாய்மைப்படுத்த அனைத்து வகைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை கவனிக்காவிடில், என்னென்ன தொல்லை அனுபவிப்போம் என்பதை மக்கள் உணர வேண்டும். துாய்மை இந்தியாவை உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும்.
சுத்தமாக இருந்தால் சுகம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
அசுத்தம் அல்லல்பட வைக்கும்
இதை தாரக மந்திரமாக மக்கள் மனதில் பதிய வைத்து செயல்பட வேண்டும். அப்படி செய்ய ஆரம்பித்தால் துாய்மை இந்தியாவை விரைவில் கொண்டு வரமுடியும்.

இயற்கை விவசாயம் :மதுரையில் மாவட்ட ஓட்டல் சங்கம் மற்றும் மாநகராட்சி இணைந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மாநகராட்சியிடம் 5.5 ஏக்கர் நிலத்தை பெற்று, அங்கு 50 லட்சம் ரூபாய் செலவில் நவீன இயந்திரங்களை அமைத்து 10 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறோம். அனைத்து ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களில் மக்கும், மக்காத குப்பையை தரம்பிரித்து வாங்கி, இங்கே இயற்கை உரமாக்கி, இயற்கை விவசாயம் செய்து காய்கறி, பழங்களை விளைவிக்கிறோம். அதை குப்பை வழங்கிய நிறுவனங்களுக்கே சலுகை விலையில் தந்து கொண்டிருக்கிறோம். தவிர இயற்கை எரிவாயுவும் தயார் செய்து, அதையும் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் ஏற்பட வேண்டும்.

என்னை பொறுத்தவரை நான் நடத்தும் உணவகங்களில் இருந்து வந்து விழும் இலைகள், மீதான உணவுப்பொருட்களை 10 ஏக்கர் பரப்பில், விஸ்தாரமாக, நிலத்தை தோண்டி கழிவுகளை போட்டு, மீண்டும் மண்ணை போட்டு மறைத்திடுவேன். நாளடைவில் இது மக்கிய உரமாக மாறி, அதில் காய்கறி, பழங்களை விளைவிக்கிறேன். இயற்கை உரமாக இருப்பதால் சத்துள்ள, ரசாயன கலவை இல்லாத, ருசியான காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறேன். விளைச்சலை விற்றும் வருகிறேன்.

இதேபோல் நிலமுள்ள விவசாயிகள் பயன்படுத்தி தரமான விளைச்சலை பெற முடியும். அதற்கு உதவ மத்திய, மாநில அரசுகள் தயாராக இருக்கின்றன. இதோடு மற்றொன்றையும் செயல்படுத்தலாம். வீடு, தெரு, சாலையில் தவறான முறையில் குப்பையை கவனமின்றி கையாளுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கலாம். சிங்கப்பூரில் இதை பின்பற்றுவதால்தான் இன்று சுத்தமான, சுகாதாரமான நாடாக திகழ்கிறது. இதை கருத்தில்கொண்டு ஒவ்வொரு இந்தியனும் உழைத்திட்டால் கனவு திட்டமான துாய்மை இந்தியா திட்டம் நனவாகும் நாள் வெகுதுாரத்தில் இல்லை.

- கே.எல்.குமார்,
ஓட்டல் உரிமையாளர் சங்கத்தலைவர், மதுரை,
98942 33332

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இதையெல்லாம் மோடி-சர்க்கார் சொன்னால் அவரை கிண்டல், எதிர்ப்பு. இப்போவாவது உணர்ந்து, சுத்தமாக இருங்கள். திராவிட திருட்டு குடும்ப டிவி-க்களை பார்க்காமல் இருந்தாலே நாடு பாதி சுத்தமாகிவிடும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement