Advertisement

உலக சாதனை படைத்த அரசு ஊழியர்

எழிலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஊழியர், தண்டால் எடுப்பதில், ஆறு உலக சாதனையை படைத்துள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்துாரை சேர்ந்தவர், இ.பாஸ்கரன், 45. சென்னை எழிலகத்தில், உதவியாளராக பணிபுரிகிறார். திருவல்லிக்கேணியில் வசிக்கும் இவர், 'ஜெட்லீ புக் ஆப் ரிகார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பெறுவதற்காக சமீபத்தில், தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் நடந்த விழாவில், ஆறு உலக சாதனையை படைத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

* விரல்களை மடக்கி, தரையில் கைகளை வைத்து, ஒரு நிமிடத்தில், 127 தண்டால் எடுத்தார். இதன்மூலம், பழைய கின்னஸ் சாதனையான, 107 தண்டால்களை முறியடித்தார்.
* கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை இணைத்து, 'டைமண்ட்' வடிவில் வைத்து, ஒரு நிமிடத்தில், 97 முறை, தண்டால் எடுத்தார்.
* மூன்று கண்ணாடி டம்ளர்களை, இரண்டு கைகள் மற்றும் காலில் ஒன்று வைத்து, 15 கிலோ எடையை, முதுகில் வைத்து, 31 முறை தண்டால் எடுத்தார்.
* ஒரு கால் மற்றும் கைகளை தரையில் ஊன்றி, 67 முறை, 'டைமண்ட்' தண்டால் எடுத்தார்.
* ஆணிகள் மீது நின்று, 20 கிலோ எடையை கழுத்தில் சுமந்து, கர்லா கட்டையை ஒரு
நிமிடத்தில், 55 முறை சுற்றினார்.
* ஆணி படுக்கை மீது கைகளை வைத்து, 15 கிலோ எடையை சுமந்து, 22 முறை
தண்டால் எடுத்தார்.
சாதனைகளுக்காக விழாவில், 'ஜெட்லீ புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' சார்பில் பாஸ்கருக்கு, 'உலக சாதனை தமிழன்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாஸ்கர் கூறியதாவது:

இதுவரை, இந்திய, ஆசிய மற்றும் உலகஅளவில், 20க்கும் மேற்பட்ட சாதனைகள் படைத்துள்ளேன். ஸ்ரீவில்லிபுத்துாரில், 2012 ஜன., 29ல், 45 நிமிடத்தில், கர்லா கட்டையை இடைவிடாமல், 2,480 முறை சுற்றி, புதிய சாதனை படைத்தேன்.விருதுநகர் மாவட்டத்தில் நடந்த, மாவட்ட ஆணழகன் போட்டியில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். என் சாதனைகள், 'இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ், யுனிக் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ், ஆசியா புக் ரிக்கார்ட்ஸ், ரிக்கார்டு ஹோல்டர்ஸ் ரிபப்ளிக்' ஆகியவற்றில் பதிவாகிஉள்ளன.

'வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் யூனியன், குளோபல், டாப் டேலன்ட் ஆப் தி இயர்' உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளேன். நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம் சார்பில், கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement